இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே அருகில் இருப்பவர்களின் இன்ப துன்பங்களை கண்டும் காணாதவர்களாக இருத்தல் ஆகாது என்பதை இன்றைய இறை வார்த்தையானது எடுத்துரைக்கிறது. செல்வந்தர் மற்றும் ஏழை லாசரைப் பற்றிய உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். அருகில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த லாசரை கண்டுகொள்ளாத நிலையில் இருந்த செல்வந்தனை குறித்து இறைவன் உரைப்பதை எல்லாம் நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
பல நேரங்களில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அருகாமையில் துன்புறக் கூடிய மனிதர்கள் இருக்கின்ற போது, அவர்களை கண்டும் காணாத மனிதர்களாக நாம் பயணிக்கிறோம் என்றால் நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக உணர்த்தக்கூடியவராக இருக்கின்றார்.
அன்று தொடக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பலவிதமான துன்பங்களுக்கு மத்தியில் கவலைகளோடும் கண்ணீரோடும் வாழ்ந்தபோது அவர்களை தங்களுடைய அடிமைகளாக வைத்துக் கொள்ளவே பலரும் விரும்பினார்கள். அவர்களின் அந்த அடிமை நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, பலவிதமான இன்னல்களை மட்டுமே இஸ்ராயேல் மக்களுக்கு தரக்கூடியவர்களாக இருந்தார்கள் பலர். அவர்களை எல்லாம் கடவுள் சாடக்கூடியவராக, உங்களுடைய இன்பம் விரைவில் துன்பமாக மாறும் என்பதை எடுத்துரைக்கக் கூடியவராக, உங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு துன்புறுகின்ற மனிதனுக்கு துணை நிற்கக் கூடிய ஒரு அழைப்பினை இறைவன் இறை வார்த்தை வழியாக நாளும் நமக்கு தருகிறார்.
இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக நாம் இன்றைய இரண்டாம் வாசகம் குறிப்பிடுவது போல, நீதியோடும் இறைப்பற்று மிக்க மனிதர்களாகவும், நம்பிக்கையோடும் பணிவு மிக்க மனிதர்களாகவும் ஒவ்வொரு நாளும் இச்சமூகத்தில் வாழவும் வளரவும் அழைக்கப்படுகின்றோம். இத்தகைய வளர்ச்சி நம்மில் மலருகிறது என்றால் நாம் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள முடியும். நமது அருகில் இருப்பவர்களின் துன்பத்தைக் கண்டு அதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களாக இல்லாமல், அவர்களோடு துணை நிற்கக் கூடியவர்களாக நாம் மாறிட முடியும் என்ற ஆழமான சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார்.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக சக மனிதர்களை அன்பு செய்து, மற்றவரின் இன்ப துன்பத்தில் உடன் இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக