இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது மரியாவின் ஏழு துயரங்களை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஏறக்குறைய 1232 ஆம் ஆண்டு ஏழு பேர் தஸ்கானா பகுதியில் ஒன்றுகூடி மரியின் ஊழியர் சபையை துவங்கினார்கள். இவர்கள் சிலுவை அடியில் நின்ற மரியாவை தங்கள் பாதுகாவலியாக ஏற்றுக் கொண்டு, மரியாவின் துயரங்களை குறித்து ஆழமாக சிந்தித்து துயரத்தின் வழியாக மீட்பு உண்டு என்பதை எடுத்துரைத்தார்கள். மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட ஏழு துன்பங்கள் என்ன என பார்க்கின்ற போது,
மரியாவைப் பார்த்து இறைப்பற்று மிகுந்த சிமியோன் உரைத்த இறைவாக்கு: உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற இறை வார்த்தையைக் கேட்டு மரியாவின் உள்ளம் கலங்கிற்று.
அதுபோல இயேசுவை தூக்கிக் கொண்டு அவர்கள் எகிப்திற்கு தப்பி ஓடியது மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட இரண்டாவது துயரமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக, தன்னுடைய ஒரே மகனை கோவிலில் தொலைத்து விட்டு, தேடித் திரிந்த மாதாவின் துயரத்தை நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம்.
நான்காவதாக, இயேசு தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் சிலுவையை சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு தாயின் உள்ளமானது துயருற்றது.
ஐந்தாவதாக, தன்னுடைய ஒரே மகன் சிலுவையில் தொங்குவதை சிலுவையின் அடியில் நின்று தாய் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த துயர நிலையை நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம்.
ஆறாவதாக, இறந்து போன இயேசுவின் உடலை தன் மடியில் வைத்துக் கொண்டு, தாயானவர் கதறுகின்றார்.
ஏழாவதாக, தான் உயிரோடு இருக்க, தன்னுடைய மகனை கல்லறையில் அடக்கம் செய்கின்றார்.
இந்த ஏழு துயரங்களையும் நாம் நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். இந்த மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த துயரங்கள், நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, நமது வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்த ஒரு வாழ்வு. எது எப்போது வரும் என அறியாத வண்ணம், இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் மாறி மாறி அனுமதிக்கின்றார். ஆதலால், நாம் துயரத்தின் மத்தியில் இன்பத்தை காண முடியும். துயர நேரங்களில் எல்லாம் கடவுள் நமக்கு துணை இருந்து துன்பங்களை கடந்து வருவதற்கான ஆற்றலை தருவார் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள, இந்த மரியாவின் துன்பங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
இந்த மரியாவின் துயரங்களை நினைவு கூருகின்ற இந்நன்னாளில் நாம் நமது வாழ்வில் மேற்கொள்ளுகின்ற துயரங்களில் எல்லாம் கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறது என்பதை ஆழமாக புரிந்து கொண்டு கடவுள் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டி செபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக