இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது, புனித அன்னை தெரசாவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு முழுவதையும் திருப்பிப் பார்த்தாலும், அவரின் வார்த்தைகள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தாலும், அனைத்தும் வலியுறுத்துவது அன்பு என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே.
இந்த அன்பை உணர்ந்து கொண்ட ஒரு பெண்மணியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப் பட்டவர்களையும், கைவிடப்பட்டவர்களையும், நோயாளிகளையும், அன்பு செய்து, அவர்களை பராமரித்து பாதுகாக்கின்ற பணியினை செய்த அன்னை தெரசாவை நினைவு கூருகின்ற இந்த நாளில், நாமும், நம் மத்தியில் வாழுகிற, தேவையில் இருக்கின்ற மனிதர்களை இனம் கண்டு கொண்டு, அவர்களின் தேவையில் உடன் இருக்கவும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தரவும், தேவையில் இருப்பவரை கவனித்துக் கொள்ளவும் அழைப்பு தரப்படுகிறது.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாக, அன்பை மட்டுமே முன்னிறுத்தி, அனுதினமும் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக