இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது, புனித அகுஸ்தினாருடைய தாயாகிய புனித மோனிகாவை குறித்து சிந்திக்க இன்று நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
தன் மகனின் தடம் புரண்ட வாழ்வு, மாற்றம் பெற வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்தியவராய் ஒவ்வொரு நாளும் கடவுளிடம் மன்றாடிய ஒரு பெண்மணியாக புனித மோனிகா அவர்கள் திகழ்ந்தார். இந்த புனித மோனிகாவைப் போல நாமும், நாம் வாழுகின்ற சமூகத்தில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளை, நமக்கு கடவுள் கொடுத்திருக்கக்கூடிய உறவுகளை எப்போதும் அன்பு செய்யவும், அவர்களின் நலனுக்காக, அவர்களின் தடம் புரண்ட வாழ்வு நெறிப்பட வேண்டும் என்பதற்காக கடவுளை நோக்கி மன்றாடக் கூடிய மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்ற அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதற்கான கணக்கினை நாம் கடவுளுக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளை, கடமையை உணர்ந்து செய்யக்கூடிய மனிதர்களாக, நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகிறார்.
இறைவன் அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, வாழ்வை நெறிப்படுத்திக் கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை அடுத்தவர் நலனுக்கென அர்ப்பணிக்கின்ற மனிதர்களாக நாம் வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக