இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
தாய்த்திரு அவையோடு இணைந்து இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது உடலையும் இரத்தத்தையும் சிலுவையில் தியாகமாக தந்தார். அவரின் தியாகத்தையும் அவர் நம் மீது கொண்டிருந்த அன்பையும் ஒவ்வொரு நாளும் நினைவு கூரும் வண்ணமாகத் தான் ஒவ்வொரு நாளும் கல்வாரிப்பாடுகளை நாம் திருப்பலியில் நினைவு கூருகிறோம்.
ஏதோ வாடிக்கை கிறிஸ்தவர்களாக, திருப்பலிக்கு வந்து செல்லுகிறவர்களாக நாம் இருந்து விடாமல் உண்மையிலுமே திருப்பலியில் பங்கெடுக்கிற போது இந்த இயேசு நமக்கு முன்மாதிரியாக கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கான பாடங்களை இதயத்தில் இருத்திக் கொள்ளவும், நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற இந்த இயேசுவைப் போல, அடுத்தவருக்காக நம்மையும் இழக்கத் துணிந்தவர்களாக இருக்கவும், நற்கருணை மீதான நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வேரூன்றவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
நற்கருணை மீதான அதீத நம்பிக்கை கொள்வோம். நமக்காக காத்திருக்கின்ற இறைவனிடத்தில் சில மணித்துளிகள் ஒதுக்கி உரையாடுவோம். எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று சொல்லி, அப்ப வடிவில் நம் மத்தியில் வீற்றிருக்கின்ற இறைவனை அனுதினமும் சந்தித்து அவரோடு உரையாடி, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளிலிருந்து உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக