வெள்ளி, 22 ஏப்ரல், 2022

துன்பத்தில் இறைவன் தெரிவாரா?...(23.4.2022)

துன்பத்தில் இறைவன் தெரிவாரா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     ஆண்டவர் இயேசு தம்மை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவுக்குத் ஆண்டவர் இயேசு தோன்றியபோது அவரைப் பணிந்து வணங்கிய மகதலா மரியா, அவரது கட்டளைக்கு ஏற்ப இயேசுவின் சீடர்களிடம் அதனை அறிவிக்க ஓடோடி செல்கிறாள். ஆனால் தங்களது உள்ளத்தின் கவலைகளிலேயே மூழ்கிப் போயிருந்த சீடர்கள் அன்று மரியா சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

      மீண்டுமாக இயேசு தன்னுடைய 72 சீடர்களுள் இருவர் வயல் வெளியில் நடந்து சென்றபோது வழிப்போக்கன் போல அவர்களோடு பேசி அவர்களுக்கு மறைநூலினை விளக்கி, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய மறைஉண்மைகள் அனைத்தையும் விளக்குகிறார்.  அவர்களோடு பந்தியில் அமர்ந்து அப்பத்தை பிட்ட வேளையில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார். ஆண்டவர் இயேசுவின் அனுபவம் பெற்ற அந்த இரண்டு சீடர்களும் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் பதினொருவரையும்  சந்தித்து தாம் பெற்ற இயேசு அனுபவத்தை கூறிய போதும்
 அவர்களது துயரத்தின் கலக்கம் அவர்களை ஆண்டவர் இயேசுவைப் பற்றிய உண்மைக்கு செவி கொடுக்காதபடி அவர்களது செவிகளை மூடிவிட்டது. 

          தம்முடைய துயரத்தில் மூழ்கியிருந்த சீடர்களுக்கு இயேசு இறுதியில் தாமே சென்று அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.  அவர்களது கடின உள்ளத்தினை கடிந்து கொள்கிறார். இறுதியில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உலகனைத்திற்குமான நற்செய்தி அறிவிப்பு பணியினை   அவர்களுக்கு அறிவிக்கின்றார்,  உணர்த்துகிறார். 

என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
திருப்பாடல்கள் 94:19

 என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் அவர்களுக்கு ஆறுதல் தந்து அவர்களது துயரத்தில் இருந்து விடுவித்தது. துயரத்தின் பிடியில் சிக்குண்டு மூழ்கிப் போய் வாழ்க்கையை முன்னோக்கி பார்க்க இயலாத பலவீனர்களாக மாறிவிட்டுப் போயிருந்த சீடர்களுக்கு, அன்று இயேசுவின் பிரசன்னம் துயரத்திலிருந்து விடுதலை அளித்தது. இந்த சீடர்களைப் போலவே நாமும் பல நேரங்களில் நம் கண் முன்னே ஆண்டவர் வைத்திருக்கின்ற மகத்தான வாழ்வினை மறந்துவிட்டு நமது உள்ளத்தில் இருக்கும் கவலையின் கறைகளை பற்றிப் பிடித்துக் கொண்டு அதிலேயே ஊறிப்போய் விடுகின்றோம்.   இதனால் நமது மனமும் உடலும் பலவீனம் அடைந்து மிகவும் மோசமான ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதை இன்றைய நாளில் உணர்ந்து கொள்வோம். 

            ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் நமக்கு ஆறுதலையும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தெளிவான பார்வையையும் துணிவினையும் தருகிறது என்பதை உணர்ந்தவர்களாய், ஆண்டவரின் பிரசன்னத்தை நாடிச் செல்வோம்.  உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம், நமது வாழ்வையும் பலவீனத்தில் இருந்து பலமாக மாற்றும் என்ற அவரது திரு இரத்தத்தின் வல்லமையில் நம்மை புதுப்பித்துக் கொள்வோம், புத்துயிர் பெறுவோம்.  ஆண்டவர் நமக்கு வைத்திருக்கின்ற அவரது அன்புப் பணிகளை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் ஆற்றுவோம்.  உலகனைத்திற்கும் நற்செய்தி அறிவிக்கக்கூடிய ஆண்டவர் இயேசுவின் அன்பு சீடர்களாக மாறிட இறையருள் வேண்டி இணைவோம் இந்த தெய்வீக திருப்பலியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...