சனி, 16 ஏப்ரல், 2022

கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!...(17.4.2022)

கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
உயிர்த்தெழுதலே நம் கிறிஸ்தவத்தின் 
வேர். இன்று கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் நாம் அனைவரும் வாழ்வு பெற. 
       உயிர்த்தெழுதலைப் பற்றியும் நிலை வாழ்வு பற்றியும், இயேசு தம் சீடர்களிடம் பல்வேறு நேரங்களில் எடுத்துரைக்கின்றார். 

                          'இக்கோவிலை 
இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். (யோவான்:2:19-22)
அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் 
கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று ஏளனம் பேசினார்கள்.                         ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் 
எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை 
நினைவு கூர்ந்துமறைநூலையும் 
இயேசுவின் கூற்றையும் நம்பினர் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். 

        யோனா மூன்று பகலும் 
மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் 
வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட 
மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் 
நிலத்தின் உள்ளே இருப்பார்.(மத்தேயு: 12:40) என்று இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது. 

 
          'உயிர்த்தெழுதலும் 
வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்." என்று கூறிய ஆண்டவர் இன்று அதனை மெய்ப்பித்துக் காட்ட உயிர்த்தெழுந்தார். 
ஆண்டவரின் உயிர்ப்பு நம் 
அனைவருக்கும் ஒரு புதிய வாழ்வு கொடுக்கிறது. நாம்தான் இவ்வுலகில் 
மிகவும் துன்பப்படுகிறோம் என்று நினைத்தால், ஆண்டவரின் துன்பம், நமக்கு வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுத் தருகிறது. 

            எல்லா துன்பத்திற்கும் 
ஒரு முடிவு இருக்கிறது. நாம் 
எப்பொழுதெல்லாம் நமக்கு 
ஏற்படும் துன்பத்தை ஏற்று வாழ முயற்சிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் 
நமக்கு துன்பங்களை எதிர்க்கும் சக்தி 
கிடைக்கிறது. நாம் துன்பத்தைக் கண்டு 
பயந்து ஓடி சென்றோமானால் அதுவும் நம்மை பின் தொடரும். ஒரு மேன்மையான குறிக்கோளுக்காக நாம் அடைகின்ற துன்பங்கள் நமது வாழ்வில் நமக்கு மேன்மையை பரிசு அளிக்கின்றன.


நமது வாழ்வில் நாம் துன்பங்களை சந்திக்கின்ற நேரங்களில் நம்முடைய சுமைகளை நாம் ஒருவரே சுமப்பதாக நினைத்துக் 
கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மை விட்டு அகன்று போனவராக, நம்மிடையே இல்லாதவராக எண்ணி 
பல சமயங்களில் நம்மை நாமே வாட்டிக் கொள்கிறோம். ஆனால் நம் ஆண்டவர் 
நம்மோடு நமது சுமைகளை சுமக்கிறார்;  நம்மில் வாழ்கிறார்; நமக்கு வலுவூட்டுகிறார்
என்பதே உண்மை. 

     எனவே, நமது பாவத்தின், பலவீனத்தின், அச்சத்தின் சுமைகளை எல்லாம் ஆண்டவரின் பாதத்தில் ஒப்படைத்துவிட்டு, சிலுவையின் வழியாக நமக்கு மீட்பை பெற்றுத் தந்த நம் ஆண்டவரை உற்று நோக்குவோம். நமது பலவீனங்களின் சுமைகளை இறக்கி வைத்து விட்டு,  ஆண்டவரது சிலுவையின் ஆசியால் வலுவூட்டப்பட்டு, உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ, அவரைப்போல பிறரின் மகிழ்வில் நாமும் மகிழ, உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...