புதன், 13 ஏப்ரல், 2022

பணியின் நிறைவு! பகிர்வின் மேன்மை! ...(14.4.2022)

பணியின் நிறைவு! பகிர்வின் மேன்மை! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
பெரிய வியாழன் என்றும்,  புனித வியாழன் என்றும்,  அழைக்கப்படுகின்ற இன்றைய நாள் நம் தாய்த்திரு அவையில் ஒரு சிறப்பான நாள். தன்னையே மனுக்குலத்திற்கு கையளித்த ஆண்டவர் இயேசு இன்று, 

1. நற்கருணையை ஏற்படுத்திய நாள்.

2. குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்.

3. மனுக்குலத்திற்கு தன்னையே கையளித்த மாபரன், மனுக்குல மீட்புக்காக சிறைப்பட்ட நாள். 


1. நற்கருணையை ஏற்படுத்திய நாள்:

                 மனிதன் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ மனிதனுக்காக அனைத்தையும் படைத்த ஆண்டவர், இன்று அவனை மீட்க தன்னையே பலியாக, விருந்தாகப் படைக்கிறார். விருந்து அது உறவின் வெளிப்பாடு. விருந்து அது அன்பை மலரச் செய்யும். அன்பை வலுப்படுத்தும். இயேசு தன்னையே விருந்தாக கையளிப்பதன் மூலம், இந்த மனித குலத்திற்கும் இறைவனுக்கும் இடையேயான உறவை புதுப்பிக்கும் விதமாக இன்று நற்கருணையை ஏற்படுத்தியிருக்கிறார். நமது பாவங்களால், பலவீனங்களால் அவரை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று இருக்கும் நம்மோடு, தமது அன்பின் விருந்தாம், ஆன்மீக விருந்தாம், நற்கருணையின் வழியாக நம்மோடு உறவாடுகிறார். அவரது அன்பின் ஆழத்தை இன்று உள்ளத்தில் உணர்வோம். ஆண்டவரோடு உள்ள நமது உறவை இன்று மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம். 

2. குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்:
           ஆண்டவர் இயேசு, பாதம் கழுவும் தனது பணியின் வழியாக, அவரைப்போல பணிபுரிந்திட, இன்று குருத்துவத்தை ஏற்படுத்திய நாள். இன்றைய நாளில் சிறப்பாக நமது வாழ்வில் நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து குருக்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அவர்களுக்காக இறைவனிடத்தில் செபிப்போம். இன்று ஆண்டவரின் பிரதிநிதிகளாகத் திகழும் குருக்களுக்காக நாம் தினமும் செபிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். எனவே நமது அன்றாட செபத்தில் குருக்களை நினைவுகூர்வோம். அவர்களின் இறையாட்சிப் பணிகள் மென்மேலும் வளர இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். அவர்கள் சந்திக்கின்ற இன்னல்கள், இடையூறுகள், போராட்டங்களில் இறையருளும் தூய ஆவியாரின் ஞானமும் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்த அவர்களுக்காக செபிப்போம்.

3. மனுக்குல மீட்புக்காக ஆண்டவர் இயேசு சிறைப்பட்ட நாள்: 

           எரிகின்ற நெருப்பை நோக்கி தன் கையை நீட்டிய குழந்தையை பாதுகாக்க, தன் கையை நெருப்பில் நீட்டி அதனை அணைத்து காயங்கள் முழுவதையும் தனது கையில் ஏற்றுக்கொண்ட, அன்பு மிகுந்த தாயைப் போல,  இன்று ஆண்டவர் இயேசு, இறைவனால் படைக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மனுக்குலத்தை, சோதனையின் ஈர்ப்புகளில் விட்டில் பூச்சிகளாய் சிக்குண்ட மனுக்குலத்தை பாவத்தின் பிடியில் இருந்து மீட்கும் விதமாக, இன்று பலியாகும் செம்மறியாக, மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் தனது தோளில் சுமந்து கொண்டார். இன்றைய நாளில் சிறைப்பட்டிருக்கும் ஆண்டவர், அவரை நோக்கிப் பார்க்க நம்மை அழைக்கிறார். அவரது அன்பின் ஆழத்தை உணர நம்மை அழைக்கிறார். அவரது திரு இரத்தத்தால் கழுவப்பட்ட நம்மை அழைக்கிறார். அவரது உள்ளத்தின் ஆவலை நம்மோடு பகிர நம்மை அழைக்கிறார். 

                    இன்று ஆண்டவரின் திருச்சந்நிதியில் அவரது அருகில் அமர்வோம். நமக்காக தன்னை பலியாக்கிய ஆண்டவர் இயேசுவின் அன்பின் ஆழத்தை உள்ளத்தில் உணர்வோம். நமக்கான அவரின் ஏக்கங்களை கண்டுணர்வோம். அவரது அன்பின் உறவில் நம்மை இணைத்துக்கொள்ள, அவரைப்போல, அவருக்காக, இறையாட்சிப் பணியாற்ற, குருக்களுக்காக அனுதினமும் செபிக்க, இறையருள் வேண்டி இன்றைய நாள் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...