இறைவனை அடையாளம் காண்டிட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் இறை வார்த்தைகள் இறைவனை அடையாளம் கண்டு கொள்ள அழைப்பு தருகின்றன. உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, உறுதியற்ற நிலையில் இருந்த தனது சீடர்களுக்கு, நம்பிக்கையை தருகின்ற பணியினை தொடர்ந்து செய்தார். அவைகளுள் ஒன்றாக நாம் எம்மாவுஸ் பயணத்தையும் பார்க்கலாம் .
எம்மாவுஸை நோக்கி நடந்து கொண்டிருந்த இரு சீடர்களுக்கு, இயேசு வழிப்போக்கன் போல உடன் வந்து, இயேசுவைக் குறித்து விவிலியத்தில் சுட்டிக்காட்டப்பட்டவைகளை எல்லாம் விளக்கிக் கூறுகிறார். சேர வேண்டிய இடத்தை நெருங்கியபோது அவர்கள் தங்களோடு தங்குமாறு கேட்கிறார்கள், அவரும் அவர்களுடன் தங்குகிறார்.
அப்போது அப்பத்தை எடுத்து, பிட்டு கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுக்கின்ற போது தான், சீடர்கள் இதே நிகழ்வை, இவரைப்போன்றே அன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்தாரே! அந்த இயேசு கிறிஸ்து தான் இன்று நம்மோடு அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், தங்களை முழுமையாக இறைவனிடத்தில் சரணாகதி ஆக்குகிறார்கள். இந்தச் சீடர்களைப் போல, நமது வாழ்வில் நம்முடன் வருகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் கண்டு கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
இறைவன் எங்கே இருக்கின்றார் எனக் கேட்டால் பலரும் கூப்பிடும் தூரத்தில் இருக்கின்றார் என்பார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான், பல நேரங்களில் நாம் கடவுளை கூப்பிடாமல் இருந்து கொண்டிருக்கிறோம்.
கடவுள் உறைந்திருப்பது நமக்குள்ளாகத் தான். நம்முள் இருந்து கொண்டு தான் நன்மைத் தனங்களை அவர் செய்து கொண்டு இருக்கிறார். தனக்குள் உறைந்து இருக்கக்கூடிய இறைமையை கண்டு கொள்ளுகிற போது இந்தச் சமூகத்தில் நாம் நலமான பணிகளைச் செய்ய முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட தனக்குள் நிலையாக உறைந்திருப்பது இறைவன் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே என்பதை பேதுரு ஆழமாக உணர்ந்து இருந்ததன் காரணத்தினால் தான், முடக்குவாதமுற்ற ஒருவனைப் பார்த்து, என்னிடம் பொன்னுமில்லை, பொருளும் இல்லை. என்னிடம் இருப்பதை உனக்கு தருகிறேன். என்னிடம் இருப்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே! அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் சொல்லுகிறேன், எழுந்து நட என்றார். அவனும் எழுந்து நடந்தான்.
நமக்குள் இருக்கின்ற இறைவனை நாம் கண்டு கொள்ளுகிற போது ,
நாமும் பலவிதமான நல்ல செயல்களை, நன்மைகளை இச்சமூகத்தில் செய்ய முடியும் என்பதை பேதுருவின் வாழ்வு நமக்கு வலியுறுத்துகிறது. இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொள்வோம். நமக்குள் இருக்கின்ற இறைவனைக் கண்டு கொள்வோம். நமக்குள் இருந்து கொண்டு நல்லதை செய்ய தூண்டுகிற இறைவனது இயல்புக்கு செவிகொடுத்தவர்களாய் , நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம், இந்த திருப்பலியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக