நின்று நிலைத்திடும் ஆண்டவரின் வல்லமை!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு பல்வேறு தேவைகளில் தன்னை நாடி வந்த மக்களை சந்திக்கிறார் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கவும், உள்ளத்தில் ஆறுதல் பெறவும், திடன் கொள்ளவும், தம்முடைய பிணிகள் நீங்கி நலமுடன் வாழவும், ஆண்டவரை நோக்கி அன்று மக்கள் வந்தார்கள்.
ஆண்டவர் இயேசுவும் அவர்களது ஆழ்மனதின் ஆழமான ஏக்கங்களை உணர்ந்து கொண்டவராக, இன்றாவது நான் விடுதலை பெற மாட்டேனா? இன்றாவது எனது மன பாரங்கள் தீர்ந்துவிடாதா? இன்றாவது நான் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்பதன் வழியாக என்னை திடப் படுத்திக் கொள்வேனா? என்று நமது மனித வாழ்வின் பல்வேறு விதமான அன்றாட தேடல்களுடன் மக்கள் அன்று அவரை சந்திக்க ஆர்வத்தோடு தேடி வருகின்றார்கள்.
ஆண்டவர் இயேசுவோடு உடனிருந்து, தமது தேடல்களையும் ஏக்கங்களையும் ஆண்டவர் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு மனதில் நிறைவோடு அமர்ந்திருக்கக் கூடிய மக்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவளிக்க ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்கள் அழைக்கின்றார்.
ஆண்டவரின் அழைத்தலுக்கு அன்புடன் செவிமடுத்த பிலிப்பு, மக்கள் திரளை பார்த்து வியந்த போது இத்தனை மக்களுக்கும் அப்பம் வாங்க இயலாதே! என்று உள்ளத்தில் கலக்கம் கொள்கிறார்.
ஆண்டவர் இயேசுவோ, தந்தை இறைவனின் வல்லமையை நோக்கியவராய் அண்ணாந்து பார்த்து செபித்து அவரது கையில் இருந்த அப்பங்களை ஆசீர்வதித்து, இறைவனுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறார். அனைவரும் வயிறார உண்டனர்.
இன்றைய வாசகத்தில் தனது கண் முன்னால் இருந்த மிகப்பெரிய மக்கள் திரளை பார்த்து இவர்களுக்கு எவ்வாறு உணவு அளிப்பது என்று பிலிப்பு சந்தேகத்தில் ஆழ்ந்தார்.
ஆனால் ஆண்டவர் இயேசுவோ மக்கள் கூட்டத்தையும், அதன் பெரும் திரளையும் கண்டு பின்வாங்கவில்லை. மாறாக தந்தையின் வல்லமையை நாடி அன்று அந்த மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொடுத்தார்.
நமது வாழ்விலும் நம்மை சுற்றி பல்வேறு வித ஈர்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவு, உடை, உறைவிடம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நமக்கு நிறைவேற்றித் தரும் நம் ஆண்டவர் இயேசு, நமது பணி வாழ்வின் பயணத்தில் நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாகவே தமது வல்லமையை நம் மீது பொழிந்தருள்பவர், என்பதை உணர்ந்தவர்களாய், ஆண்டவரின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு நமது வாழ்வு பயணத்தை மகிழ்வோடு தொடர்ந்திட இறையருள் வேண்டி இன்றைய நாள் திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக