புதிய பாதையில் புதிய வாழ்வு வாழ
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றையநாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் புதிய
வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை பற்றி நாம் வாசிக்க கேட்டோம். இனி இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களால் மீள முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக அனைத்து விதமான நம்பிக்கையையும் இழந்து போயிருந்த சூழ்நிலையில் இறைவாக்கினர் எசாயா வழியாக அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை இறைவன் முன் மொழிகின்றார்.
கடந்தவைகளை நினைவூட்டி, எதையும் செய்ய ஆற்றலுள்ள ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்துகின்றார். எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த நேரத்தில், ஒரு புறம் கடல், மறுபுறம் எகிப்திய படையினர் சூழ்ந்திருக்க, கடலை இரண்டாகப் பிரித்து இந்த மக்கள் பாதுகாப்புடன் வெளியேற பாதை அமைத்துக்கொடுத்த அந்த கடவுள், இன்று அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டு வருவார்; புதிய வாழ்வைத் தருவார்; புதிய பாதையை காட்டுவார்; புது செயல்களை நீங்கள் முன்னெடுக்க உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்ற செய்தியினை இறைவன் வலியுறுத்துகிறார்.
இதையே இன்றைய முதல் வாசகம் ஆக நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், வாழ்வில் பல விதமான இன்னல்களையும் இடையூறுகளையும் நாம் சந்தித்து இருந்தாலும் அந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் நம்மோடு இருந்து நம்மை மீட்டு வரக் கூடியவராக இறைவன் இருந்திருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.
பல நேரங்களில் நம்மோடு இருந்து நமது துன்ப நேரத்தில் நமது துன்பத்தில் இருந்து நம்மை மீட்டு வந்த இறைவனை நாம் உணர்ந்திருக்கிறோமா? சில நேரங்களில் அந்த இறைவனை உணர மறந்திருக்கிறோம். ஆனால் கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார். நமது துன்பங்களிலிருந்து நம்மை மீட்க கூடியவராக இறைவன் இருக்கிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.
இந்த வாசகங்கள் வலியுறுத்துகின்ற வார்த்தைகளின் அடிப்படையில், ஆண்டவர் நம்மோடு துணை இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து துணிவோடு ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழக்கூடிய மனிதர்களாய் நீங்களும் நானும் இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இத்தகைய ஒரு அழைப்பை திருத்தூதர் பவுலும் தன் வாழ்வில் பெற்றார். இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை எல்லாம் கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆணையினைப் பெற்றுக் கொண்டு புறப்பட்ட ஒரு மனிதன், ஆண்டவர் இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டவராய், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பை என கருதுகிறேன் எனக் கூறி தன்னை முழுவதுமாக தன்னிடமிருந்த தன்னுடைய அடையாளங்களான, தான் ஒரு உரோமை குடிமகன் என்பதை, தான் ஒரு படித்த மேதை என்ற அனைத்து விதமான பட்டங்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளிய ஒரு மனிதனாக, ஆண்டவரை தன் உரிமைச் சொத்தாக மாற்றிக் கொள்ள வேண்டுமென தனது வாழ்வை மாற்றிக் கொண்டார்.
கடந்த காலங்களை மறந்தவராய் கடந்த கால தவறுகளை எல்லாம் விட்டொழித்து, எந்த மனிதர்களை, எந்த இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை கொல்ல வேண்டுமென புறப்பட்டாரோ, அந்த இயேசு கிறிஸ்துவை அறிவிக்கக் கூடியவராக, பல மைல் தூரம் சென்று அறிவிக்கக் கூடியவராக, அவருக்காக தனது உயிரையும் இழக்கக் கூடிய ஒரு மனிதராக பவுல் மாறினார். இந்தப் பவுலை போலவே நீங்களும் நானும் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
ஆனால் பல நேரங்களில் நாம் இயேசுவைப்போல மாறுவதை விட, இயேசுவைப் போல மாற முயற்சிப்பவர்களை விமர்சனம் செய்பவர்களாகவும், இயேசுவுக்காக தன்னுடைய இன்ப துன்பங்களை தியாகம் செய்பவர்களை விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும், இயேசுவின் பொருட்டு நல்லது செய்கின்ற நபர்களின் நல்ல உள்ளங்களை உணராத மனிதர்களாகவும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்மணியை இயேசுவின் முன்னிலையில் வந்து நிறுத்தி, இந்த பெண்ணை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்? என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் நாங்கள் ஓசையும் சட்டத்தை பின்பற்ற வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் எழுப்புகிறார்கள்.
ஒரு பெண் தவறு செய்தால் அவளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக இயேசுவிடம் வந்து கருத்து கேட்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. ஆனால் அன்று அவர்கள் அதை செய்தார்கள். ஏன் செய்தார்கள் என்று சிந்திக்கின்ற போது, இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஒருவிதத்தில் இயேசு கிறிஸ்து, இந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று சொல்லியிருந்தால்,
மோசேயின் சட்டத்தைப் பின்பற்றுகிற நபராக இருந்திருப்பார்.
அதே சமயம் அன்றைய காலகட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டது உரோமை ஆட்சி அதிகாரம். ஆட்சியாளர்களுக்கு மத்தியில் உரோமை ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார் என கூறி குற்றவாளியாக நிறுத்திவிட முடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் அக்கேள்வியை எழுப்பினார்கள்.
ஒருவேளை இயேசு இந்த பெண்மணியை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து
கொல்ல வேண்டாம் என குறிப்பிட்டிருந்தால், இவர் மோசேயின் சட்டத்தை மீறினார் எனக் கூறி, யூத சமயங்கள் கற்பிக்கின்ற சட்டங்களுக்குப் புறம்பாக செயல்படுகின்ற நபர் இவர் எனக் குற்றம்சாட்டி அவரை கைது செய்யலாம் என்ற எண்ணத்தோடு முன் வந்து அவர்கள் அந்த பெண்மணியை நிறுத்தினார்கள்.
இயேசு அந்த பெண்மணியை உற்று நோக்கினார். பொதுவாகவே யூத சமூகத்தில் பெண்ணை ஒரு பகடைக் காயாகவும் பெண்களை இழிவாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், பல விதமான கொடுமைகளையும் நிகழ்த்தக்கூடிய மனிதர்களாகத் தான் யூதர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையும் அங்கு இயேசு படம்பிடித்துக் காட்டுகின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என்று கொண்டு வந்து நிறுத்தினார்கள். இருவர் நிற்க வேண்டிய இடத்தில் பெண் மட்டுமே குற்றம் செய்த பெண்ணாக நிறுத்தப்பட்டு இருந்தாள்.
அந்தப் பெண்ணின் சார்பாக இயேசு பேசவில்லை. மாறாக, உங்களுள் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் எனக் கூறியவராய், தன் போக்கில் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இயேசுவின் இந்த வார்த்தைகள் சுற்றியிருந்தவர்கள் என் இதயத்தில் குத்தியது. குற்றம் இல்லாத மனிதர்கள் அங்கு எவரும் இல்லை. எனவே தான்
பெரியவர் தொடங்கி சிறுவர் வரை அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள் என விவிலியம் குறிப்பிடுகிறது.
அனைவரும் குற்றம் சுமத்த வந்தவர்கள் எல்லாம் எதுவும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு, குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசுவை எப்படியாவது குற்றவாளியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அங்கு நின்ற அவர்களெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கலைந்து சென்றார்கள்.
இயேசு அந்த பெண்ணை பார்த்து, "அம்மா! யாரும் உன்னை தீர்ப்பிட வில்லையா? என்று கேட்கிறார். அவரும் இல்லை ஐயா என்கிறார். நானும் உன்னை தீர்ப்பிடவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் என்று கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைக்கின்ற நிகழ்வினை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கலாம்.
இந்த நற்செய்தி வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் பல நேரங்களில் கடவுள் நமக்கு செய்த அளப்பரிய காரியங்களை மறந்தவர்களாக, கடவுளின் இருப்பை உணராதவர்களாக, பல நேரங்களில் துன்பங்கள் வருகின்ற போது, நாம்
கடவுளுடைய பராமரிப்பை உணர்ந்திராத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நமக்கு இறைவன் உணர்த்துகின்ற பாடம், எல்லாச் சூழ்நிலையிலும் இறைவன் நம்மோடு இருக்கிறார். நம்முடைய இன்ப துன்பங்களில் துணை இருந்து நம்மை வழிநடத்துகிறார். பல நேரங்களில் அவரை விட்டு விலகிச் செல்லக் கூடிய நிலையில் நாம் இருந்தாலும், நாம் செல்லும் பாதை தவறு என்பதை சுட்டிக்காட்டி நம்மை நல்வழிப்படுத்தக் கூடிய நபராக இறைவன் இருக்கிறார். அந்த இறைவனின் உடனிருப்பையும், அவரின் பராமரிப்பையும் நாம் உணர்ந்து கொள்ள நம்மைக் குறித்து நாம் சுய ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். நாம் செல்லுகின்ற பாதை இயேசுவுக்கு உகந்த பாதையா? நாம் செய்கின்ற செயல்கள் இயேசுவுக்கு உகந்த செயலா? நாம்
எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் இறைவனுக்கு உகந்த எண்ணங்களா? என சீர்தூக்கிப் பார்த்து, இறைவனுக்கு புறம்பான எண்ணங்களும் செயல்களும் சொல்லும் நம்மிடத்தில் இருக்குமானால் அதையெல்லாம் சரி செய்து கொண்டு, ஆண்டவரின் உடனிருப்பை நம்பி, அவர் நமக்குத் தருகின்ற புதிய வாழ்வினை உணர்ந்து கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குத் தந்து கொண்டிருக்கக் கூடிய புதிய நாளில், நாம் இயேசுவைப் போல மாறக்கூடிய, புதுப் பிறப்பு அடைந்த மனிதர்களாக மாறிட அழைக்கப்படுகிறோம்.
நாம் ஒவ்வொருவருமே கடந்த கால நிகழ்வுகளை மறந்து, தவறிப்போன தருணங்களை மறந்து, இனி வருகின்ற நாட்களில் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக, அவரின் உடனிருப்பில் தொடர்ந்து பயணம் செய்யக் கூடிய மனிதர்களாக, புதிய மனிதர்களாக, புதிய பாதையில், புதிய வாழ்வை நோக்கி பயணிக்க, இறைவன் அழைக்கின்றார்.
இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, இயேசு கற்பிக்கின்ற புதிய பாதையில் புது வாழ்வைத் தொடங்கிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக