பொங்கல் திருநாள் : "உறவின் பாலம் அமைந்திட"
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறேன்!
தை முதல் நாள் பொங்கல் திருவிழாவினை உழவனின் திரு நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்த நல்ல நாளை நன்றியின் நாளாகவும் நாம் கொண்டாடலாம்.
நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் - இயற்கைக்கும், நமக்கும் - சகமனிதனுக்கும் இடையேயான உறவுகளை நினைவு கூர்ந்து, ஒருவருக்கு ஒருவர் நன்றி கூறவும், இழந்து போன உறவுகளை சரிசெய்து கொண்டு, இணைந்து வாழவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. எனவே இந்த நல்ல நாளில் "உறவின் பாலம் அமைந்திட" என்ற சிந்தனையின் கீழ் உங்களோடு என் கருத்துக்களை, சிந்தனைகளை, இறைவனது வார்த்தைகளை, பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இறைவன் படைத்த இந்த அழகிய உலகு, மிகவும் அதிசயமானது. உருண்டையான இந்த உலகத்தில் கொட்டாத மழைநீர் அதிசயமாக பார்க்கப்படுகிறது. பார்வைக்குள் அடங்காத இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. தெரிந்தோ தெரியாமலோ இறைவன் படைத்த இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கிறது. நமது நல வாழ்விற்கு இயற்கை தன்னையே தியாகம் செய்கிறது. இயற்கையை வளர்த்திட நாம் பல தியாகங்களை செய்கின்றோம். நமக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு எப்போதும் இணைந்து செல்ல வேண்டும் என்பதில் இறைவன் படைப்பின் தொடக்கத்தில் இருந்தே நமக்கு உறவு பாலத்தை அமைத்திருக்கிறார். நாம் சுவாசிக்கின்ற காற்றும், நாம் பருகுகின்ற நீரும், நாம் பயன்படுத்துகின்ற பொருட்களும், நாம் சார்ந்து இருக்கின்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். ஒருவரோடு ஒருவர், ஒன்றோடு ஒன்று என மனிதன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறான். தொடர்பில் இருக்கின்றவரை தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நமக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு, தொடர்பு, துண்டிக்கப்படும் போது, நாம் இயற்கை எய்தியவர்கள் ஆக மாறுகின்றோம். மனிதர்களாகிய நாம் மகிழ்வோடு வாழ இறைவன் இயற்கையை தந்தார்.
இந்த இயற்கையை நன்றியோடு நினைவு கூருகின்ற நன்னாளாக இந்த நாள் அமைகிறது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். இந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. கதிர்கள் வளர்ந்து சாய்ந்து இடையில் இருக்கின்ற வழிகளை மறைத்து கிடக்கும். தை மாதம் வந்தால் அறுவடை செய்வார்கள். அப்போது மறைக்கப்பட்ட பாதைகள் எல்லாம் மீண்டும் பார்வையில் தென்படக் கூடியதாக மாறும். இதன் அடிப்படையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
இன்னொரு பார்வையும் உண்டு. தை மாதம் பிறந்தால் நெற்பயிர்களை அறுக்கலாம், விற்கலாம், பணம் கிடைக்கும். அதைக் கொண்டு பல நல்ல செயல்களை செய்யலாம் என்ற அர்த்தமும் உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒருபுறமிருக்க, தை பிறந்தால் நமது பொருளாதாரம் உயர்கிறது. பொருளாதாரம் உயர்ந்து விட்டது என எண்ணி, வந்த வழியை மறந்தவர்களாக நாம் செயல்படாது, நமக்கு இந்த முன்னேற்றத்தைத் தந்த இயற்கையை நன்றியோடு நினைவு கூர்ந்து இறைவனுக்கு பொங்கலிட்டு இயற்கைக்கு வணக்கம் செலுத்தி, இயற்கையோடு இணைந்து இன்புற்று வாழ இந்த பொங்கல் திருநாள் நமக்கு ஒரு நல்ல நாளாக அமைகிறது.
ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் நமக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள உறவுகளை நினைவு கூர இந்த உறவுகளுக்குள் ஏற்பட்டு இருக்கின்ற விரிசல்களை கண்டுகொள்ள இந்த நாள் அழைப்பு தருகிறது.
ஏதோ பொங்கல் திருநாள் வருகிறது, எம் முன்னோர் எல்லாம் பொங்கலிட்டு இறைவனை வழிபட்டார்கள். சூரியனுக்கு பொங்கலிட்டு சூரியனை புகழ்ந்தார்கள். ஆடு மாடுகளுக்கு பொங்கல் வைத்து ஆடு மாடுகளை புகழ்ந்தார்கள். காணும் பொங்கலன்று காணுகின்ற மனிதர்களுக்கு இடையே எல்லாம் வாழ்த்தை பரிமாறி விட்டுச் சென்றார்கள் என்று சொல்லிவிட்டு நகர்பவர்களாக நாம் இல்லாது, நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்த இவையெல்லாம் உறவின் பாலங்களை இணைத்து அமைத்துக் கொள்ள வழிவகை செய்கின்றன என்பதை உணர்ந்தவர்களாய் செயல்பட, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
வேறு எந்த ஒரு இனத்திலும் இல்லாத ஒரு தனிப்பெருமை, நம் தமிழர்களாகிய நமக்கு உண்டு. தை முதல் நாள் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடுவதற்கு முன் தினத்தை நாம் போகிப் பண்டிகை என கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாம் நம்மிடம் இருக்கும் தேவையற்றவைகளைக் கண்டு கொண்டு, தேவையானதை வைத்துக்கொண்டு, தேவையற்றவைகளை அகற்றிவிட்டு, புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம். அப்படி எடுத்து வைத்த நாள் தான் இந்த தை திங்கள் முதல் நாள். இந்த நாளை கடந்து வரக் கூடிய மறுநாள் நாம் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கின்ற இயற்கையையும் பிற உயிர்களையும் மதித்து நேசித்து அவைகளோடு நமது உறவை வளர்த்துக்கொள்ள, அமைத்துக் கொள்ள, வழிவகை செய்யும் விதமாகத் தான் மாட்டுப் பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம்.
அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களில், நாம் காணும் பொங்கலை கொண்டாடுகின்றோம். காணும் பொங்கல் என்றால் காணுகின்ற மனிதனோடு மட்டும் வாழ்த்தினை பரிமாறிக் கொள்வது அல்ல. அல்லது சொந்தங்களோடு மட்டும் பரிமாறிக் கொள்வது அல்ல. மாறாக நமக்காக உழைக்கக்கூடிய, நமது வீடுகளில் வேலை செய்யக்கூடிய, நமது அலுவலகங்களில் வேலை செய்யக் கூடியவர்களை சந்தித்து, அவர்களோடு நமது மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ஒரு நன்னாளாக அமைகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த பொங்கல் திருநாள் என்பது, இயற்கையோடும், இறைவனோடும், ஐந்தறிவு ஜீவன்களோடும், ஆறறிவு ஜீவன்களோடும், இணைந்து இன்புற்று, உறவின் பாலத்தை அமைத்துக் கொண்டு, பயணம் செய்வதற்கான ஒரு நல்ல நாளாகும். இந்த நல்ல நாளில் நாம்
நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் -சக மனிதர்களுக்கும்,
நமக்கும் - இறைவனுக்கும் இடையிலான உறவுகளை இணைத்துக் கொண்டு, இன்புற்று வாழ, இறையருள் வேண்டுவோம்.
1 தெசலோனிக்கர் புத்தகம், ஐந்தாம் அதிகாரம், 16, 17 வசனங்கள் கூறுகிறது, "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது ஜெபியுங்கள். என்ன நேர்ந்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்"
இந்த வார்த்தைகளின் அடிப்படையில், இந்த பொங்கல் திருநாளாம் இந்த நல்ல நாளில், நாம் மகிழ்வோடு இருக்கவும், நன்றி கூறவும், ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து ஜெபிக்கவும், எல்லா சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறக் கூடிய மக்களாக இருக்கவும், இறைவனது அருள் வேண்டுவோம். இத்தகைய செயல்களால் நாம் நமது உறவுகளை இணைத்து கொண்டு உறவின் காலங்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக