விமர்சிப்பவர்களுக்கு முன்னால், நாம் பயணம் செய்வோம்...
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை கொண்ட, மறைநூல் அறிஞர்கள் அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், இயேசு ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டப்பட்டது.
ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற பெயல்செபூலைக்கொண்டு எப்படி அவனுக்கு உதவிசெய்கிற தீய ஆவிகளை அழிக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் கேள்வி.
நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில், நாம் நமது கடமையை செய்து கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் நாம் நம் கடமையை செய்வது அடுத்தவரின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர் பார்த்து நம்மை புகழ வேண்டும் என்பதற்காகவும் என்று எள்ளி நகையாடக் கூடிய மக்கள் ஏராளமானோர் இவ்வுலகில் உண்டு. ஆனால் அவர்களிடத்தில், எதற்காக நாம் இப்பணியை செய்கிறோம்? நாம் நம் கடமையை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் நமது பணியை தொடர்ந்து, நமது கடமையை உணர்ந்து இயேசுவைப் போல செய்து கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம்.
நம்மை எள்ளி நகையாடுபவர்கள் எல்லாம், நேரமும் காலமும் வரும்போது, தாங்கள் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இயேசுவின் செய்கையை பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இயேசு அவர்களிடத்தில் அவர்களின் தவறான எண்ணங்களையும் வார்த்தைகளையும், அவர்களது வார்த்தைகளை கொண்டே அவர்களுக்கு பாடம் கற்பித்தார். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடமையைச் செய்யும்போது எள்ளி நகையாடப்படக்கூடிய நேரங்களில் நாம் நம் கடமையை செய்வோம். அக்கடமையை செய்வதன் வழி, நம்மைப் பார்ப்பவர்கள், நம்மை எள்ளி நகையாடுபவர்கள், நமது பணியின் உண்மையையும் மகத்துவத்தையும் உணர்ந்து கொள்ள, இறைவன் அவர்கள் உள்ளத்தை தூய ஆவியால் தூண்ட வேண்டும் என இறைவனிடத்தில் மன்றாடுவோம். அந்த தூய ஆவியானவரை மனதில் இருத்திக்கொண்டு, நமக்கு பின்னால் நின்று நம்மை விமர்சிப்பவர்களுக்கு முன்னால், நாம் பயணம் செய்வோம், கடமையை செய்வோம், கடவுள் நம்மை காத்தருள்வார் என்ற நம்பிக்கையோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக