இறையாட்சி என்பது என்ன?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இறைவனது விருப்பம் நிறைவேறுவது தான் இறையாட்சி. இறைவனது விருப்பம் எப்படி நிறைவேறும்? இறைவன் இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும் எனச் சொல்லி நிறைவேறுவது அல்ல இறையாட்சி. இறைவனது விருப்பங்கள் அனைத்தும் இம்மண்ணில் உள்ள ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், பிரதிபலிக்கப்படுவது தான் இறைவனது இறையாட்சி ஆகும்.
ஒரு சிறிய கடுகு விதை வளர்ந்து பல பறவைகள் வந்து தங்கக் கூடிய வகையில் பயன்படுகிறது என்றால், கடவுளின் படைப்பின் சிகரமான மனிதர்களாகிய நாம் நமது செயல்பாடுகளால், இந்த அகிலம் முழுவதும் மகிழும் வண்ணம், இந்த அகிலத்தில் பல நன்மைகளை செய்யக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனது விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறுவது தான் இறையாட்சியின் மதிப்பீடாக மாறுகிறது. சமத்துவத்தோடும், அன்போடும், நீதியோடும், நேர்மையோடும் நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு, தோள் கொடுத்து, எப்போதும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருந்து பயணிக்கக் கூடியவர்களாக நாம் மாறுவதும், இவ்வுலகத்தில் உள்ள ஒட்டுமொத்த நன்மைகளையும் உள்ளத்தில் இருத்துவதோடு நிறுத்தி விடாமல், அதனை நமது வாழ்வு மூலம் வெளிப்படுத்துவதுமே இறைவனது ஆட்சி. அதுவே இறைவன் விரும்புவது. இறைவன் விரும்பும் இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக