உங்களிடம் இருப்பதை கொண்டு வாருங்கள்...
கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது, அவர் நம்மை நோக்கி 99 அடிகளை எடுத்து வைப்பார் என்பார்கள்.
இன்றைய நாளில் இயேசு தன்னைச் சூழ்ந்திருந்த மக்களின் மீது பரிவு கொண்டார். அவர்கள் பசியோடு இருப்பதை உணர்ந்தவராய் அவர்களுக்கு உணவு கொடுக்க தம் சீடர்களை நோக்கி கட்டளையிடுகிறார். ஆனால் சீடர்களோ, தங்களிடம் பொருளாதார வசதி இருந்தும், உணவு வாங்குவதற்காக வசதிகள் அங்கு இல்லை என்பதை எடுத்துரைக்கின்ற போது, உங்களிடம் இருப்பதை கொண்டு வாருங்கள் என்கிறார். எனவே, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் தன்னிடமிருந்ததைக் கொண்டு வந்தான். அதனைக் கொண்டு, அத்தனை பேருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உணவளிக்கும் வல்லமையினை செய்தார் என்பதைத் தான் இன்றைய நாள் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். ஆண்டவர் இயேசு தன்னோடு இருந்தவர்கள் மீது பரிவு கொண்டார். எனவேதான் அவர்களின் பசியை அறிந்திருந்தார்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், நாம் அடுத்தவரின் பசியை உணர்ந்து இருக்கிறோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
மூன்று வேளையும் நமக்குத் தேவையானது கிடைக்க வேண்டும் என எண்ணும் நாம், ஒருவேளை உணவுக்காக துன்புறக்கூடியவர்களின் பசியை உணர்ந்தது உண்டா? அவ்வாறு உணர்ந்து இருப்போமாயின் நாம் நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்திட அந்தக் கூட்டத்திலிருந்த சிறுவன் முன் வந்தது போல, நாமும் முன்வர கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நாளில் நாம் இருப்பதை பகிரவும் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மீது பரிவு கொள்ளவும் இறையருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக