தந்தையிடம் தயக்கம் ஏன்?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தந்தையின் பணியை செய்கிறார். தந்தையின் பணி கண்டிப்பது போல இருக்கும். ஆனால் அந்த கண்டிப்பிற்குள் ஒரு அன்பும் ஒரு அறநெறியும் அடங்கி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியாரின் வார்த்தைகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே தந்தையிடம் ஏதாவது அனுமதி பெறுவதற்கு அல்லது எதையாவது கேட்பதற்கோ குழந்தைகளிடம் தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய இறைவார்த்தையின் வழியாக தந்தையிடம் உரிமையோடு கேட்க ஆண்டவர் இயேசு நமக்கு கற்றுத் தருகின்றார். நாம் தாயிடம் கேட்டால், தாய் தந்தையிடம் கேட்டுத் தான் பெற்றுத் தருகிறாள். நேரடியாக தந்தையும் கேட்பதில் ஏன் தயக்கம் என்ற கேள்வியை எழுப்பும் போது, நமது வாழ்வு தான் ஒரு மிகப் பெரிய தயக்கமாக இருக்கிறது. நமது வாழ்வு நேர்மறையான எடுத்துக்காட்டான நல்ல வாழ்வாக அமையும்போது தந்தை நாம் கேட்பதை தருகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதைத்தான் வாசிக்கிறோம். தந்தையிடம் ஜெபிக்க சொல்கின்ற இறைவன், பிறருடைய குற்றங்களை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்று செபிக்க சொல்கிறார். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான் நாம் கேட்பதை தந்தை நமக்கு தருகிறார். இன்று தந்தையிடம் தயக்கம் தேவையில்லை. தன்னம்பிக்கையோடு வாழும் எடுத்துக்காட்டான வாழ்வே தந்தையின் விருப்பம். அந்த வாழ்வு அமையும் போது நாம் கேட்பதற்கு முன்பாகவே நமது தேவை அறிந்திருக்கிற தந்தை அதை செய்து வைப்பார்.
தனக்கு உணவு இல்லை என்றாலும் தன் வீட்டில் உள்ளவர்கள் உண்ண வேண்டும் என்பதற்காக வெயில் மழை என பாராது பணியாற்றக்கூடிய தந்தையின் தியாகம் இன்று பலருக்கு தெரிவதில்லை. பொதுவாகவே அம்மா செய்யும் தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அம்மா செய்யக்கூடிய தியாகங்களை சொல்லி சொல்லி வளர்ப்பாள். ஆனால் தந்தையின் தியாகம் யாருக்கும் தெரியாது, காரணம், தந்தை எதையும் சொல்வதில்லை.
பெண்ணை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது ஒற்றை வார்த்தையில், ஒற்றை கண்ணசைவில் தனது சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து விடக்கூடிய திறமை கொண்டவர் தான் ஒரு தந்தை.
எப்போதுமே தந்தை என்றாலே ஒரு அச்சம் இருக்கும். அச்சத்தை புறம்தள்ளி அன்போடு நம் தந்தையைப் புரிந்து கொள்ள முயலுவோம். தந்தை விரும்பும் எடுத்துக்காட்டான வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள முயலுவோம். அப்போது நமது வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும். நமது தேவையை பார்த்து பார்த்து செய்யக்கூடிய நமது பெற்றோரை போல, நம் தந்தையாம் இறைவனும் நாம் கேட்பதற்கு முன்பாக நமது தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்வார். எனவே இந்த தந்தையிடம் தயக்கம் தேவையில்லை. தன்னம்பிக்கையோடு தன்னார்வத்தோடு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ முயற்சிப்பதே தந்தையின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவு செய்ய இறையருளை வேண்டுவோம்.
தந்தையின் மகனாக மகளாக நமது வாழ்வை தொடர உற்சாகமூட்டும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது நன்றிகள்! 🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு