தந்தையின் இதயம் ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை சிறுவன் ஒருவன் ஆலயத்திற்குச் சென்று கடவுளை நோக்கி இவ்வாறு கூறினான். ஆண்டவரே நீர் உண்மையிலேயே என்னை அன்பு செய்கிறீரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறீர் என்பதை நான் காண வேண்டும் என்று கூறினான். அப்போது கடவுள் அவனிடம், "நீ என்னை உற்றுப் பார்" என்று கூறினார். அவன் பார்த்த போது அவனுக்கு எதுவும் புரியவில்லை. மறுநாள் மீண்டும் ஆலயத்திற்கு வந்து கடவுளை நோக்கி கடவுளே, நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறீர்? என்று கேட்டான். அப்போது கடவுள் மீண்டும் அவனிடம் "என்னை உற்றுப் பார்" என்று கூறினார். அவன் பார்த்த போது அவனுக்கு எதுவும் புரியவில்லை. வீட்டிற்கு சென்று விட்டான். மீண்டும் மூன்றாம் முறையாக ஆலயத்திற்கு வந்த அவன், கடவுளே! இன்று நீர் கண்டிப்பாக என்னை எவ்வளவு அன்பு செய்கிறீர் என்பதை சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறினான். அப்போது இயேசு அவனிடம் நான் பேதுருவிடம், நீ என்னை எவ்வளவு அன்பு செய்கிறாய்? என்று கேட்டது போலத்தான் நீயும் இன்று என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறாயா? என்று கூறிவிட்டு, உனக்காகத்தான் நான் எனது இரு கைகளையும் விரித்த வண்ணம் சிலுவையில் எனது உயிரையே உனக்காக கொடுத்து இருக்கிறேன். உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பும் பெரியது என்று கூறினாராம்.
நமக்காக தனது இன்னுயிரை ஈந்த இயேசுவின் மேன்மைமிகு சிலுவையை உற்று நோக்குவோம். அது அவரது அன்பின் அடையாளம். இயேசுவின் குத்தி ஊடுருவப்பட்ட இதயத்தில் இருந்து பாய்ந்து வந்த ரத்தமே நமது மீட்பின் ஆதாரம். அந்த இயேசு கிறிஸ்துவின் இதயத்தில் எப்போதும் நமக்கென ஒரு இடம் உண்டு. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். ஏன்று இறைவாக்கினர் எசாயா நுஸல் அதிகாரம்49: இறைவசனம் 16 இல் கூறுகின்றார்.
ஆண்டவர் இயேசுவின் உள்ளங்கையில் நாம் அனைவரும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறோம். அதுப்போலவே நமது இதயங்களில் அந்த இயேசுவின் அன்பானது பொறித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆண்டவரின் அன்பு நமது இதயத்தில் இருக்கும் போது நாம் சக மனிதரை அன்பு செய்பவராக மாறுவோம். சாதி மத மொழி இன வேறுபாடுகளை எல்லாம் கடந்து வேண்டியவன் வேண்டாதவன் என்பதை எல்லாம் புறந்தள்ளி அனைவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக வாழ்வோம்.
அருள்பணி. இயேசு கருணா அவர்கள் தந்தையின் இதயத்தோடு என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்; இவ்வாறாக குறிப்பிடுகிறார், சூசையப்பர் தந்தையின் மீட்புத் திட்டத்தில் தந்தையின் பணியாளராக விளங்கினார் என்று, இந்த சூசையப்பர்ப்போல நாமும் மீட்பின் பணியாளராக முடியும். சூசையப்பரைப் போல ததையாம் இறைவனின்; இதயத்தின் அன்பினை உணர்ந்தவர்களாய், அன்புள்ளம் கொண்டவர்களாய் தந்தையின் இதயத்தை நமது இதயமாக வைத்துக் கொண்டு, இயேசுவின் விழுமியங்களையும் முன்னெடுத்தவர்களாய் இச்சமூகத்தில் பயணிக்கின்ற பொழுது நாமும் மீட்பின் பணியாளர்களாக மாற முடியும். கடவுள் நம் மீது கொண்ட அன்பின் அடிப்படையில் தான் தன்னுடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. தந்தையின் இதயத்தில் உள்ள அன்பை ஆழமாக உணர்ந்ததனால் தான் இயேசுவும் தனது வாழ்வில் அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், பரிவையும், வெளிக் காட்டக் கூடியவராக இருந்தார். தன் அன்பை வெளிக்காட்டும் விதமாக தனது அன்பின் உச்சகட்டமாக தனது கைகளை விரித்தவராய், சிலுவையில் நமக்காக இரத்தம் சிந்தி பலியானார். அந்த இயேசுவின் இதயம் தந்தையின் இதயத்தோடு இணைந்திருந்தது.
நம் இதயமும் தந்தையின் இதயமாக இருக்க வேண்டும். தந்தையின் இதயத்தில் அன்பு இருக்கும். பாசம் இருக்கும். இரக்கம் இருக்கும். இவை நமது இதயத்திலும் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய சீடர்கள் ஒவ்வொருவருமே இயேசுவின் இதயத்தை பெற்றிருந்தார்கள் எனவே அடுத்தவருக்காக அனைத்து துயரங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக அடுத்தவரின் மகிழ்வை தன் மகிழ்வாக எண்ணியவர்களாக வாழ்ந்தார்கள். இன்றைய நாளில் திரு இருதய ஆண்டவரின் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம், நாம் நமது இதயத்தை தந்தையின் இதயமாக மாற்றிக் கொண்டு செயல்பட அழைக்கப்படுகின்றோம்.
எனவே நாம் தந்தையின் இதயத்தை நமது இதயமாக கொண்டவர்களாக ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஏற்றுக்கொள்ளவும், பாகுபாடுகளைக் கடந்து அன்போடு ஒன்றிணைந்து வாழவும் முயல்வோம். எனவே இன்றைய நாளில் நாம் இயேசுவின் இருதய அன்பின் ஆழத்தை உணர்வோம். அவரது அன்பின் வல்லமையில் நம்மையும் நம் குடும்பத்தில் உள்ளோரையும், நம்மை சுற்றி வாழ்கின்ற ஒவ்வொருவரையும், நமது நாட்டையும் இந்த உலகத்தையும் ஒப்புக் கொடுப்போம். அன்பில் அச்சத்திற்கு இடமில்லை என்று கூறுவார்கள். இன்று இந்தக் கொரோனா தொற்றுநோயின் காரணமாக அஞ்சி நடுங்கி கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஆண்டவர் இயேசுவின் இருதயமே ஆற்றலும் வல்லமையும் தருவதாக உள்ளது. அந்த ஆண்டவர் இயேசுவின் இருதய அன்பு காற்றின் திசை எங்கும் பரவி, கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை முறியடிக்க, மக்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் இருதயம் புது வலிமை தந்து புது வாழ்வு காணச் செய்ய இன்றைய நாளில் அனைவரும் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக