நாம் இருப்பதே இல்லாதவர்களுக்காகத் தான்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே.
2 கொரி 1:6.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் பலவிதமான இன்னல்களை சந்தித்த போதும் அவர்கள் இன்னல்களைக் கண்டு அஞ்சவில்லை. நமக்காக இறைவன் பலவாறு துன்புற்றார் என்பதை சுட்டிக்காட்டி, அந்த துன்புற்ற இறைவன் நமக்கு ஆறுதலை தரவல்லவர் என்ற செய்தியை முன்னெடுத்தவர்களாய் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களை துணிவோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசுவின் பணியை இச்சமூகத்தில் செய்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.
எப்படி இயேசுவைப் பின்பற்றிய இந்த சீடர்களுக்கு இத்தகைய துணிச்சல் கிடைத்தது? அடுத்தவருக்காக துயரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இந்த கேள்வியை இன்றைய நாளில் நாம் எழுப்பி பார்த்தால் அதற்கு பதில் தரக்கூடிய வகையில் தான் இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் மலைப் பொழிவை பற்றி வாசிக்க கேட்டோம். இயேசு இறையாட்சி பற்றிய பலவிதமான போதனைகளை வழங்கி இருந்தாலும் அனைத்திலும் தலைசிறந்த போதனையாக பார்க்கப்படுவது இந்த மலைப்பொழிவு. முழுக்க முழுக்க அடுத்தவரை மையப்படுத்தியது. நாம் இவ்வுலகில் இருப்பதன் நோக்கமே அடுத்தவருக்காக தேவையை நிவர்த்தி செய்வதற்காக என்ற பாடத்தை கற்று தருகிறது. இந்த மலைப் பொழிவு பலருடைய வாழ்வில் பல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக நமது நாட்டின் தேச பிதாவாகிய காந்தியடிகள், தன்னுடைய வாழ்வில் அவர் உணர்ந்த இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடும்பொழுதுதன் வாழ்வில் தான் முன்னெடுத்த பலவிதமான போராட்டங்களுக்கும் போதனைகளுக்கும் அடிப்படையாக இருந்தது இந்த இயேசு கிறிஸ்துவின் மலை பொழிவு என்று கூறுகிறார். மலைப்பொழிவு முழுவதுமே இரக்கத்தை மையப்படுத்தியது. இல்லாதவர்களுக்கு இருப்பதை பகிர வேண்டும் என்பதை மையப்படுத்தியது. நமது வாழ்வில் அந்த இரக்கத்தை கண்ணில் காணக்கூடிய மனிதர்களுக்கு காட்ட கூடியவர்களாக வாழ நமக்கு அழைப்பு தருகிறது. இயேசுவின் இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே இருப்பதல்ல மறாக அவை வாழ்வாக்கப் படவேண்டிய ஒன்று. இயேசுவின் வார்த்தைகளை சீடர்கள் வாழ்வாக்கினார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கி, மலைப்பொழிவு வழியாக இயேசு சுட்டிக்காட்டக் கூடிய இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அன்பு உள்ளவர்களாகவும் இரக்கம் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் மனம் படைத்தவர்களாகவும், இச்சமூகத்தில் வாழ்ந்து இறையாட்சி மதிப்பீடுகளை நமது வாழ்வில் நமது செயலில் வெளிக்காட்டிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக