வியாழன், 3 ஜூன், 2021

என் கேள்விக்கு விடை எங்கே...? (4.6.2021)

என் கேள்விக்கு விடை எங்கே...? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் அவ்வப்போது சில மனிதர்கள் கூடி உரையாடுவதும், தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும், விளையாடி மகிழ்வதும் என்று கலகலப்பாக அந்த இடம் எப்பொழுதும் இருக்கும். ஒரு நாள் அங்கு வந்த சோமு ராமுவை பார்த்து ஏண்டா ராமு போன வாரம் ஒருத்தன் செத்து போய்ட்டான்னு கேள்விப்பட்டேன். அது நீயா? அல்லது உன்னோட அண்ணனா? என்று கேட்டான் சோமு. உடனே ராமு அடடே! எனக்கு தெரியாம போச்சே! இரு நான் உடனே போய் என் அண்ணன் கிட்ட போய் கேட்டுட்டு வரேன் என்று கூறினானாம். 

                        இன்று கேள்விகள் கேட்பது ஒரு மிகச் சிறந்த கலை. கேட்கின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொண்டு முறையாக பதில் அளிப்பதும் ஒரு மிகச்சிறந்த கலையாக உணரப்படுகிறது!


 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களிடையே கற்பிக்கின்ற பொழுது கேள்வியை எழுப்பி அந்த கேள்வி வாயிலாக அவர்களை சிந்திக்க அழைக்கின்றார். இன்று நம்மையும் அவ்வாறு சந்திக்க இறைவன் அழைக்கின்றார். 

யூதச் சமூகத்தில் கற்பித்தலில் பல முறைகள் இருந்தாலும், பொதுவாக பின்பற்றப்படும் முறை, கேள்வி கேட்டு அந்த கேள்விக்கான விடையினை பெற்றுக் கொள்வதாகும். இதைதான் 12 வயதில் இயேசு எருசலேமில் பலரின் மத்தியில் அமர்ந்து கேள்விகளை எழுப்பி அதன் மூலமாக பதில்களைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்பதை, இயேசு காணாமல் போன நிகழ்வில் நாம் உணர்ந்துகொள்ள முடியும். இந்த ஒரு கற்பித்தல் முறையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கையாளுகிறார் இயேசு.

 இன்றைய நாளில்  நாம் நமக்குள்ளாக கேள்விகளை எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் என்ன கேள்வியை எனக்குள்ளாக எழுப்பலாம் என்று எண்ணும் போது, ஏன் இந்த துன்பத்தை இறைவன் அனுமதித்தார்? என்ற கேள்வியை எழுப்புவது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
         அந்த அடிப்படையில் சிந்திக்கும் போது அதற்கு விடை தரும் வகையில் இன்றைய முதல் வாசகம் அமைந்திருப்பதாக உணர்கின்றேன். இன்றைய முதல் வாசகத்தில்  பார்வையோடு இருந்த தோபித்து, பார்வையை இழந்த நிலையில் இருக்கின்றார். பார்வையை இழந்தாலும் அவர் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை.  மன உறுதியை அவர் இழக்கவில்லை.  தன் நிலை மீண்டும் மாறும். மீண்டும் பார்வை பெறுவேன் என்ற நம்பிக்கையோடு அவர் கடவுளின் துணையை நாடும் ஒருவராக இருக்கின்றார். அதன் விளைவாக அவர் தன் பார்வையை மீண்டும் பெற்றுக் கொள்கின்ற நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கலாம். அதுபோலவே சாரா என்ற பெண்மணி, இவள் திருமணம் முடிக்கும் அனைவரும் இறந்து போகிறார்கள்.  இவள் வாழத் தகுதியற்றவள். பலரைக் கொன்று கொண்டிருப்பதற்கு இவளாகச் செத்துப் போவதே மேல் என்று கூறி அவளை எள்ளி நகையாடிய பலரின் பேச்சுக்களை தன் காதில் வாங்கிக் கொண்டாலும்,  நம்பிக்கையோடு தன்னுடைய இந்த நிலை மாறும் என நம்பியவளாய் இறைவனிடத்தில் சரணடைகிறார்.  அவளது ஜெபத்தை கேட்டு அவளது நம்பிக்கையை கண்டு இறைவன் அவளது இழிநிலையை போக்குகின்ற ஒரு அதிசயமும் இன்றைய முதல் வாசகத்தில் அரங்கேறுகிறது.  பலரின் வாயால் வசை மொழிகளைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் முதல் முறையாக நேர்மறையான வாழ்த்துச் செய்திகளை பெறுகிறாள். 
                    நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக!  என அந்தப் பெண்ணை வாழ்த்தி வீட்டிற்குள்  வரவேற்கின்றார் தோபித்து. 

                        இந்த இரண்டு நபர்களுமே நமக்கு தருகின்ற பாடம்,  துன்பம் நம்மை சூழுகின்ற நேரத்தில் மன உறுதியோடும், ஆழமான நம்பிக்கையோடும் நாம் இருக்கும்போது, நம்மால் துன்பத்தை கடந்து இன்பத்தை அனுபவிக்க முடியும் என்ற செய்தியினைத் தருகிறது.  

இன்று கூட பல நேரங்களில் வலைதளங்களில் வரக்கூடிய அனைத்து பதிவுகளுமே உங்களுக்கு நோய்த் தொற்று வந்துவிட்டதா?  அச்சப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்! துணிவோடு இருங்கள்! நீங்கள் துணிவோடு இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நீங்கள் துவண்டு போய் மனமுடைந்து, மன உளைச்சலுக்கு ஆளானால்,  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் என்ற செய்தியானது அடிக்கடி பல மருத்துவர்களால் கூறப்பட்ட கொண்டிருக்கின்ற  குறும்பதிவுகள் நமது அலைபேசி வாயிலாக நம்மை வந்து செல்கிறது.  அதனை  வெறும் வார்த்தைகள் என்று ஒதுக்கி விட்டுச் செல்ல முடியாது.  அதனை நம் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்ற போது, துன்பம் வரும்போது பெரும்பாலும் நாம் மனமுடைந்து போகிறோம். ஆனால் துன்ப நேரத்தில் மனமுடையாது உறுதியோடு இருப்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட தோபித்தும், சாராவும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.  இவர்களை போல நாமும் துன்ப நேரங்களில் துணிவோடு இருந்து, துன்பத்தை துணிவோடு எதிர் கொள்ள இறைவன் அழைப்புத் தருகின்றார்.  நிகழக்கூடிய அனைத்து விதமான சூழ்நிலைகளிலும், ஏன் இது நடக்கிறது? என்ற கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிப் பார்ப்போம்! நாம் எழுப்பும் கேள்விகளுக்கு நாமே விடைகளைத் தேட முற்படுவோம்! யாரோ ஒருவர் வந்து நம் கேள்விக்கு விடையை கூற வேண்டும் என எண்ணிக்கொண்டு பயணிக்காமல், கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி, நாம் எழுப்புகின்ற கேள்விக்கான விடையை நாமே இச்சமூகத்தில் கண்டுகொண்டு அறிவுத் தெளிவோடு, விழிப்புள்ளவர்களாக, துணிவோடு பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

 கேள்வி கேட்கின்றவன் அறிவிலும், ஞானத்திலும் வளருவான் என்பார்கள்.  நாமும் அறிவிலும், ஞானத்திலும் வளர கேள்விகளை நமக்குள்ளாக எழுப்பத் தொடங்குவோம். கேள்விகளுக்கான விடைகளைக் கண்டு கொள்ள முயலுவோம்! வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...