நீங்கள் எதை விட்டு விட்டு எதை தூக்கிச் செல்கிறீர்கள்?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உடல் சுகவீனமுற்று இருந்த சிறுவன் ஒருவனுக்கு அவனுடைய பாட்டி ஒரு மாத்திரையை கையில் கொடுத்து சிறிது தண்ணீரையும் குடிக்க சொல்லி கொடுத்தார். மாத்திரையை வாயில் வைத்த சிறுவன் அது கசப்பாக இருக்கிறது என்று அதனை துப்பிவிட்டு தண்ணீரை மட்டும் குடித்தான். உடனே பாட்டி அவனுக்கு ஒரு மாத்திரையை கொடுத்து ஒரு டம்ளர் நிறைய பாலை கொடுத்தாள். அப்போதும் அந்த சிறுவன் பாலை குடித்துவிட்டு மாத்திரை கசக்கிறது என்று துப்பிவிட்டான். இவனை எப்படியாவது இந்த மாத்திரையை சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைத்தார், அந்த பாட்டி. ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனுள் இந்த மாத்திரையை வைத்து அந்த சிறுவனுக்கு உண்ணக் கொடுத்தார். அந்த சிறுவனும் வேகமாக வாழைப்பழத்தை ஆர்வத்தோடு சாப்பிட்டான். அவன் வாழைப் பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் பேராண்டி! வாழைப்பழம் எப்படி இருந்தது? என்று கேட்டார் பாட்டி. உடனே அச்சிறுவன், வாழைப்பழம் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருந்தது பாட்டி. ஆனால் அதன் விதைகள் தான் கசப்பாக இருந்தது. அதனை நான் துப்பி விட்டேன் என்று கூறினான்.
இன்று இந்த உலகத்தில் நிறையபேர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு கசப்பாக படக்கூடியவை, அது எந்த வழியில் வந்தாலும் சரி, அது நமது நலனுக்கு உரியதாக இருந்தாலும் சரி, அதை நாம் ஏற்றுக் கொள்ள தயங்குகிறோம்.
மாத்திரை கசப்பானது தான். ஆனால் அந்த மாத்திரை உடலுக்குள் சென்று உடலை நலமாக்க கூடிய பணியைச் செய்கிறது. ஆனால் அந்த கசப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அந்த சிறுவனிடத்தில் ஒரு தயக்கம் காணப்பட்டது.
அதுபோலத்தான் இன்று நாம் வாழும் இந்த உலகில். எத்தனையோ விதமான பிரச்சினைகள் இருந்தாலும், சின்னச் சின்ன கசப்பான அனுபவங்களை முன்னிறுத்தி நாம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த கசப்பான அனுபவங்கள் நமது வாழ்வில் பலவிதமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். அந்த வாழ்க்கைப் பாடத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மட்டுமே தூக்கிக்கொண்டு பயணம் செய்பவர்களாக தான் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாளில் கூட பவுலடியார் தான் வாழ்வில் சந்தித்த இடர்பாடுகள், வேதனைகள், துன்பங்கள் என்ற கசப்பான அனுபவங்களை எல்லாம் அந்த கசப்பு என்ற உணர்வோடு பார்க்காமல், அதற்கு பின்னால் கிடைக்க கூடிய அனுபவம், தைரியம், முயற்சி, உழைப்புக்கு ஏற்ற பலன், என்ற வகையில் மறைந்திருக்கக் கூடியவற்றை கண்டு கொள்கிறார். அதனைப் பெற்றுக் கொண்டதை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவிக்கிறார். உங்கள் வாழ்க்கையில் துன்பங்களை சந்தித்தாலோ அல்லது இன்னல்கள் நேர்ந்தாலோ துவண்டு விடாதீர்கள். அதன் வழியாக கடவுள் உங்களை உயர்த்துகிறார். அதன் வழியாக கடவுள் உங்களுக்கு நல்லதை சொல்லித்தருகிறார் என்ற செய்தியை இன்று நமக்கு சொல்லித் தருகிறார்.
பல நேரங்களில் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்றவாறு தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஒருவர் தீங்கு செய்தால் அவருக்கு நான் பதில் தீமை செய்து விட வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான்கு பேர் மத்தியில் நம்மை அவமானப்படுத்தி விட்டார் என்பதற்காக இன்னும் நான்கு பேர் மத்தியில் அவனை எப்படி அவமானப் படுத்தலாம் என்ற எண்ணத்தோடு தான் பல நேரங்களில் நாம் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற செய்தி, கசப்பான அனுபவங்களையும் வாழ்வில் வரக்கூடிய துன்பங்களையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சோதனைகளையும் கண்டு மனம் தளர்ந்து விடாமல் நமக்குத் தீமை செய்தவனுக்கு பதில் தீமை செய்ய வேண்டும் என எண்ணுவதை விட அந்த தீங்கின் வழியாக நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதை உணர்ந்து பார்ப்போம். அடுத்தவர் நமக்கு எதிராகச் செய்த கசப்பான அனுபவங்கள், அடுத்தவரால் நம் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், நமக்கு எவ்வளவு வலியும் வேதனையும் தந்ததோ அது போலத்தான் நாம் அடுத்தவர் வாழ்வில் செய்யும் போது கிடைக்கிறது. எனவே, அத்தகையதொரு காரியத்தை செய்யாதிருக்க, இறைவன் இன்று அழைப்பு தருகிறார். கசப்பான நிகழ்வுகளும் துன்பங்களும் தோல்விகளும் வாழ்வில் வரும் பொழுது அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் என்ன என்பதை முன் நிறுத்துவோம். அதனைக் கொண்டு வந்தவர்கள் யார்? நம்மை தோல்வியுறச் செய்தவர்கள் யார்? நமக்கு கசப்பான அனுபவங்கள் யார் மூலமாக கிடைத்தது என எண்ணி அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படாமல் வாழ்வில், வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டு, நாம் பிறர் வாழ்வில் ஒளியேற்றக் கூடியவர்களாகவும், நலமான நல்லவிதமான உணர்வுகளை பிறர் பெற்றுக் கொள்ளவும், நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அடுத்தவரின் செயல்பாடுகள் நமது வாழ்வில் கசப்பான அனுபவங்களை தந்து இருந்தாலும், நமது செயல்பாடுகள் அடுத்தவரின் வாழ்வில் கசப்பான அனுபவங்களை தரக்கூடாது என்பதில் நாம் உறுதியோடும் தெளிவோடும் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் உறுதியோடும் தெளிவோடும் இவ்வுலகில் பயணிக்கப் போகிறோம் என்றால், நாம் முதிர்ச்சி பெற்ற நல்ல மனிதர்களாக விளங்க முடியும். ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகின்ற நாம் ஒவ்வொருவருமே, எப்போதும் அடுத்தவர் நலனை முன் நிறுத்துவோம். நாம் துன்பப்பட்டாலும் அடுத்தவர் துன்பப்படக்கூடாது என்ற கருத்தை நம் உள்ளத்தில் இருத்துவோம். நம்மால் பலர் வாழ்ந்தார் என்ற பெயர் இருக்க வேண்டுமே தவிர நம்மால் பலர் வீழ்ந்தார் என்ற பெயர் உருவாகாத வண்ணம் நமது சொல்லும் செயலும் அமைந்திட வேண்டும். எனவே இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில், ஒரு நிமிடம் அமைதியாக நமது வாழ்வை சற்று அலசிப் பார்ப்போம். நாம் பிறரது வாழ்வில் கசப்பான அனுபவங்களை அதிகமாக விதைத்திருக்கிறோமா? அல்லது மகிழ்வான தருணங்களை விதைத்து வந்திருக்கிறோமா என சிந்திப்போம். எனவே இனி வரக்கூடிய காலங்களில் கசப்பான எண்ணங்களை அடுத்தவர் வாழ்வில் விதைப்பதை விட்டுவிட்டு, மகிழ்ச்சியான நலமான காரியங்களை அடுத்தவர் வாழ்வில் விதைக்கக் கூடியவர்களாய் வளர்ந்திட இறையருளை வேண்டுவோம்.
அருமை.. 👍
பதிலளிநீக்குPositive thinking builds good relationship. Wonderful brother! We experience God's grace and blessings through you every day! Thank you so much! God bless you too abundantly!
பதிலளிநீக்கு