செவ்வாய், 8 ஜூன், 2021

மனிதநேய நெறி என்ன...?(10.6.2021)

 மனிதநேய நெறி என்ன?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை  உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.





ஒரு அருள்பணியாளர் பீடத்தில் நின்ற வண்ணம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு முன்பாக அமர்ந்து இருந்த பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு பொறுக்க இயலாது அருள்பணியாளர் ஐயோ! தீ பிடித்து விட்டது என்று கத்தினார். உடனே அனைவரும் பதட்டத்தோடு எழுந்தார்கள். அப்போது அருள்பணியாளர் அவர்களைப் பார்த்துச் சொன்னார், உண்மையைவிட பளபளப்பானது பொய்யே. நான் உண்மையான கருத்துக்களை எடுத்துரைத்த போது நீங்கள் தூங்கினீர்கள். பொய் கூறிய போது பரபரப்பாகி இருக்கிறீர்கள் என்று கூறினாராம். 

             இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் சட்ட திட்டங்களை இவ்வாறு தான் புரிந்து கொண்டிருக்கிறோம்.  இயேசு வாழ்ந்த காலத்திலும் மக்கள் சட்ட திட்டங்களை முழுமையாகக் கடைபிடித்து வந்தார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர்கள் எப்படி சட்டத்தை பின்பற்றினார்கள் என்று சிந்திக்கும் பொழுது, உண்மைக்கு தூங்கியும் பொய்மைக்கு ஈர்க்கப்பட்டவர்களுமாக இருப்பவர்களை போலத்தான் அவர்களும் செயல்பட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவேதான் இயேசு அவர்களிடையே இருக்கக்கூடிய தவறான சட்டம் சார்ந்த புரிதல்களை சுட்டிக் காண்பித்தார். உண்மையான புரிதல்களை கண்டு கொள்ள வழி செய்தார்.

         உதாரணமாக கொலை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதைப் பின்பற்றினார்கள். ஆனால், கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி செய்வதற்குப் பெயர்தான் கொலை என்று கருதி, அந்தக் கொலையை நாங்கள் செய்யவில்லை என்று கூறிவிட்டு வார்த்தைகளால் அடுத்தவரை கொலை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பது வெள்ளிடை மலையாக வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இயேசு ஒரு சட்டத்தை வெறும் சட்டமாக பிடித்துக் கொள்வதை விட்டு விட்டு அதில் இருக்கக்கூடிய மனிதநேய நெறியை கண்டுணர்ந்து கொள்ள அழைப்பு தருகின்றார். 

         இயேசு மண்ணில் வாழ்ந்து போது அப்பணியைத்தான் செய்தார். இன்று நாமும் அப்பணியை செய்திட அழைப்பு தருகின்றார். எழுதப்பட்ட சட்டங்களை வெறும் வார்த்தைகளின் அடிப்படையில் பிடித்துக்கொண்டு பயணிப்பதை நிறுத்திவிட்டு அந்த சட்டங்கள் வழியாக முன்னிறுத்த படக்கூடிய மனிதநேய நெறி என்ன? என்பதை கண்டு உணர்ந்து கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். அழைக்கும் இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்களாய், சட்டங்களில் உள்ள மனித நேய நெறியைக் கண்டு கொள்ளக் கூடியவர்களாய், நாம் வாழும் சமூகத்தில் வாழவும் அதனை நமது செயல்களில் வெளிக்காட்டவும் இறையருளை வேண்டுவோம்.



1 கருத்து:

  1. உண்மையை உண்மையாய் தேடவும் அதன் வழியாய் மனிதத்தை வளர்க்கவும் நம்மை அழைக்கும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...