புதன், 30 ஜூன், 2021

தந்தையின் விருப்பம் நமது விருப்பமாக... (1.7.2021)

தந்தையின் விருப்பம் நமது விருப்பமாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                  இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது நாம், ஈசாக்காக வாழ இந்த மண்ணில் அழைக்கப்படுகின்றோம். தன்னைத்தான் தன் தந்தை பலியிடப் போகிறார் என அறியாதவனாய் தன் பலிக்குத் தேவையான விறகு கட்டைகளை சுமந்து கொண்டு, தந்தையின் பின்னால் பயணிக்கின்றார்.  தந்தை ஆபிரகாம்,  பலிபீடத்தில் விறகுகளை அடுக்கி வைத்துவிட்டு, தன் மகனின் கைகளையும் கால்களையும் கட்டி அந்த பலிபீடத்தின் மீது வைத்த போது, ஈசாக்கின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 ஈசாக்கு நினைத்திருந்தால் வயதான தன் தந்தையை தள்ளிவிட்டுவிட்டு ஓடியிருக்கலாம். ஆனால், தந்தைக்கு கீழ்ப்படிந்தார். தந்தை தன் உயிரைப்பறிக்கப் போகிறார் என அறிந்தும் கத்தாத செம்மறி போல தன்னையே பலியாக்க தந்தையின் விருப்பத்திற்கு கையளித்தார். இந்த ஈசாக்கை போலத்தான் இயேசுவும் இந்த உலகத்தில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னையே பலியாகக் கொடுத்தார் சிலுவையிலே.

 இவர்களிடம் காணப்பட்ட நற்பண்புகள் தான் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். ஆனால் பல நேரங்களில்,  நாம் குறை காணும் நோக்கத்தோடு அடுத்தவர் செயலை குறை கூறிக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. முடவனை எழுந்து நட  என்பதா? உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா?  எது அவனுக்கு நிறைவைத் தரும் என்ற கேள்வியை இயேசு எழுப்பி,  எழுந்து நட என்பதைவிட, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற வார்த்தைகள் தான், அவனுக்கு நிறைவைத் தரும், அவனுக்கு மகிழ்வைத் தரும் என்பதை உணர்ந்து, அதனை செய்யக்கூடிய பணியில் ஈடுபடுகிறார். ஒருவேளை நாம் முடக்குவாதமுற்றவனாக இருந்திருந்தால்,  நாமும் அதை தான் விரும்பி இருப்போம்.

        நமக்கு என்றால் ஒன்று,  அடுத்தவருக்கு என்றால் மற்றொன்று என்று எண்ணி வாழாது, தந்தையின் விருப்பத்தை நமது விருப்பமாகக் கொண்டு,  நம்மையே முழுமையாக கையளிக்க கூடியவர்களாய் மாறுவோம். இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களில் எல்லாம் நம்மையே அந்த அவலங்களில் பாதிக்கப்பட்ட நபராக சித்தரித்துக் கொண்டு,  வாழ்வில் நலமான பணிகளை முன்னெடுக்க, நலமான பாதையில்  பயணிக்க இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...