சனி, 26 ஜூன், 2021

நம்பிக்கையோடு நலமா பணிகளை முன்னெடுப்போம்... (27.6.2021)

நம்பிக்கையோடு நலமா பணிகளை முன்னெடுப்போம்...

இன்று சட்டமன்றங்களிலும் சரி, சாலையோரங்களிலும் சரி, அதிகமாக கேட்கக் கூடிய வார்த்தைகள் சமத்துவம், சமநீதி என்பதாகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற வார்த்தைகள் ஆளுநரின் உரைகளில் மட்டும் இருத்தல் ஆகாது, நம் அனைவரின் உள்ளங்களிலும் இந்த சிந்தனை இருக்க வேண்டும். அனைத்தையும் அனைவரிடமும் பகிர்வதற்கு சமத்துவமும் சமநீதியும் நமது மனதில் இருக்க வேண்டும். இன்று பலரின் உள்ளத்திலும் இந்த சிந்தனை பதியப்பட்டு இருப்பதனால் தான், சாலையோரங்களில் இருப்பவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதை பகிரக் கூடியவர்களாக நம்மிள் பலர் இருக்கிறார்கள்.   இருப்பதை இல்லாதவரோடு பகிர முயற்சிக்கும் போது, நம்மிடம் இருப்பது குறைவுபடுவது போன்ற எண்ணம் உருவாகும். நம்மிடம் இருப்பது குறைவுபடும் போதெல்லாம் நம்மால் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் நமது வாழ்வு நலமான வாழ்வாக அமையும். அந்த நம்பிக்கை தான் இன்று பலரின் வாழ்வில் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நம்பிக்கையோடு நாம் பயணிக்க வேண்டும் என்ற செய்தியைத் தான் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகிறார். 

       ஒரு நியாய விலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.  அப்போது அங்கு வந்த ஒரு மனிதர் எவ்வளவு பெரிய கூட்டம் நாம் சீக்கிரமாக முன்னே சென்று விட வேண்டும் என நினைத்துக் கொண்டு வேகவேகமாக முன்னே சென்றார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அந்த மனிதரை பிடித்துக்கொண்டு வந்து கடைசியில்  நிற்க வைத்தார்கள். இந்த கூட்டத்திற்குள் நுழைய முடியவில்லையே. சற்றுநேரம் காத்து நிற்போம், என்று எண்ணியபடியே அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான். கூட்டத்தினர் சற்று அமைதி அடைந்தவுடன், இப்பொழுது முன்னே செல்லலாம் என்று அந்த மனிதன் முன்னோக்கி சென்றான். மீண்டும் ஆக அந்தக் கூட்டத்தினர் அந்த மனிதனைப் பிடித்து கொண்டு வந்து இறுதியில் நிற்க வைத்தனர். தம்பி, "எங்களுக்கு அப்புறம் தான் உனக்கு எல்லாம் கிடைக்கும்" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதன் அவர்களைப் பார்த்து எனக்கு அப்புறம்தான் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் நான் தான் இந்த கடையின் பொறுப்பாளர்.  நான் சென்று கதவை திறந்தால் தான் பொருள்களை எடுக்க முடியும் என்று கூறினாராம்.

நமது வாழ்வில்  நம்பிக்கை என்பது முன்னோக்கிச் செல்லும்போது மட்டுமே வாழ்வில் நலமான பணிகளை நாம் முன்னெடுக்க  முடியும். வாழ்வில் நம்பிக்கையை புறம்தள்ளிவிட்டு, எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் எதுவும் கிடைத்து விடாது. 
நம்பிக்கை ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்று.   நம்பிக்கையோடு பல பணிகளை முன்னெடுக்க வேண்டும். இத்தகைய மையச் செய்தியைத் தரக்கூடிய இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது இன்றைய நற்செய்தி செய்தி வாசகத்தில் இரண்டு விதமான  நம்பிக்கையுடைய மனிதர்களை நாம் காண்கின்றோம். 

ஆண்டவர் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணம் பெறுவேன் என்று எண்ணக்கூடிய ஒரு பெண்மணி.  

இன்னொருவரோ,  என்னுடைய மகள் நோயுற்று இருக்கிறாள்.  அதுவும் இறக்கும் தருவாயில் இருக்கிறாள்.  நீர் வந்து தொட்டால் அவள் குணம் பெறுவாள் என்று நம்பிக்கையோடு  இருவர் இயேசுவை நோக்கிச் செல்லக் கூடிய ஒரு நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்டோம். 

 இவர்களைப் போல நாமும் நம்பிக்கையோடு வாழ அழைக்கப்படுகின்றோம். 
நமது வாழ்வில் நம்பிக்கை என்பது இருக்க வேண்டும். 

ஒரு உணவில் எப்படி உப்பு அவசியமாக இருக்கிறதோ, அது போல வாழ்வில் நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். "உப்பில்லா பண்டம் குப்பையிலே"  என்று கூறுவார்கள். உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருப்பது தான் இந்த உப்பு.  அது போல வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் நம்பிக்கை. நம்பிக்கை இருக்கும் பொழுது நம்மால் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.  நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொழுது,  வாழ்வில் வரக்கூடிய ஒரு மிகப்பெரிய கேள்வி, பல நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்கிறேன். ஆனால் துன்பத்தையே பரிசாகப் பெறுகிறேன். பலவிதமான இன்னல்கள் இக்கட்டான சூழ்நிலைகளை நான் சந்திக்கிறேன். ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது?  என்ற கேள்வி நமது உள்ளத்தில் இயல்பாக எழக்கூடிய ஒன்று தான்.
    இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தான் இன்றைய முதல் வாசகம் அமைகிறது. ஆண்டவர் அழிவிலும், துன்பத்திலும் மகிழ்பவர் அல்ல.  ஆனால் அழிவும் துன்பமும் இவ்வுலகத்தில் இருக்கிறதே.  அதை எப்படி எடுத்துக் கொள்வது? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். 

மனித வாழ்வில் எது எப்போது நடக்கும் என தெரியாத வண்ணம் கடவுள் அனைத்தையும் மாறி மாறி வரச் செய்கிறார்  என சபை உரையாளர் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஒரு துன்பம் நமக்கு நேரிடுகிறது என்றால், அந்த துன்பத்தின் வழியாக நாம் ஒன்றை கற்றுக் கொள்கிறோம். நம்பிக்கையோடு, அந்த துன்பத்தை எதிர்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம். என் வாழ்வில் துன்பம் நேர்ந்து விட்டது. எனவே இனி இதை செய்ய மாட்டேன் என ஒதுங்கி செல்வதற்காக அல்ல. மாறாக இது போன்ற சூழ்நிலையில் எத்தனையோ நபர்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் உன்னை போல துன்புறுகிறார்கள். அவர்களின் துன்பத்தில் நீ பங்கெடுக்க கூடியவனாக மாற வேண்டும் என்பதற்காகவே....
சுவாமி விவேகானந்தர் கடவுள் மீது தான் கொண்ட நம்பிக்கை பற்றி கூறும் போது இவ்வாறு கூறுவார்.

கடவுளிடம் வலிமை கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள். 

மகிழ்ச்சி கொடுங்கள் எனக் கேட்டேன்.
மகிழ்ச்சியற்ற மனிதர்களை அறிமுகப்படுத்தினார்.

அறிவு கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ வாழ்வின் புதிர்கள்.

மன நிம்மதி கேட்டேன்.
மற்றவர்களுக்கு உதவச் சொன்னார்.

சலுகைகள் கேட்டேன். வாய்ப்புகள் கொடுத்தார்.

நான் விரும்பியது எதையும் கொடுக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் அவர் கொடுத்தார். என்று......

நமது வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்களும் இவைகள்தான்...

நமக்கு ஒரு துன்பம் நேரும் போது அடுத்தவர் வந்து  நம்பிக்கை தரக்கூடிய வகையில் அருகில் இருக்க வேண்டும் என எண்ணக் கூடிய நாம், இதேபோன்றதொரு துன்பத்தில் மற்றவர் இருக்கும் பொழுது, அவர்களுக்கு நம்பிக்கை தரும் மனிதர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.சிறுமி இறக்கவில்லை உறங்குகிறாள் என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு நகைத்த  நம்பிக்கையற்ற மனிதர்களின் வாழ்வில் நம்பிக்கை விதையை இயேசு விதைக்கிறார்.

இயேசுவைப் போல நாமும் இந்த  அறச் செயலைச் செய்ய இன்றைய இரண்டாம் வாசகமும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. அறச்செயல் என்றாலே  பொருட்களை பகிர்வதை  மட்டுமே பலர் எண்ணுகிறோம்.

     பொருளை பகிர்வது மட்டுமல்ல அறச்செயல். ஆறுதலான வார்த்தைகளை பகிர்வதும் அறச்செயல் தான். துன்பத்தில் இருப்பவரின் துன்பத்தைக் கண்டு அவரது துன்பத்தைத் துடைப்பதற்கான ஆறுதலான வார்த்தைகளை தருவதும், நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு நம்பிக்கையை விதைப்பதும் அறச்செயல் தான். இத்தகைய அறச்செயலை செய்வோர் இன்று குறைந்து கொண்டே போகிறார்கள்.  ஊக்கப்படுத்துபவர்களை விட, உதாசீனப்படுத்துபவர்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த உலகத்தில். நாம் உதாசீனப்படுத்துபவர்களாக அல்ல, ஊக்கப்படுத்தும் மனிதர்களாக மாறிடவே இன்றைய நாளில்  அழைக்கப்படுகிறோம்.

நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பயணித்தவர்கள் அவரிடமிருந்து நல்லவைகளை பெற்றுக் கொண்டார்கள் என நற்செய்தியில் வாசிக்க கேட்டோம். நாமும் நம்பிக்கையோடு ஆண்டவரை நோக்கி பயணிப்போம்.  நம்பிக்கையற்றவர்களின் வாழ்விலும் நம்பிக்கையை உருவாக்குவோம்.  நலமானவைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவும், நம்பிக்கையின் வழியாக நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லவும், இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...