வெள்ளி, 4 ஜூன், 2021

அடுத்தவரின் மகிழ்வை நமது மகிழ்வாக்கி வாழலாமே...(5.6.2021)

அடுத்தவரின் மகிழ்வை நமது மகிழ்வாக்கி வாழலாமே...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
     ஒரு ஊரில் ஒரு மிகப்பெரிய ஹோட்டல் முதலாளி இருந்தார். அவருக்கு குடும்பம் குழந்தைகள் யாரும் கிடையாது. ஆனால் அவருக்கு நான்கு ஹோட்டல்கள் இருந்தன. அங்கு பணியாற்றுகின்ற நான்கு மேலாளர்களுள் பொருத்தமான ஒரு மேலாளரை தனக்குப்பின் வாரிசாக அந்த ஹோட்டல்கள் அனைத்திற்கும் முதலாளியாக ஏற்படுத்த விரும்பினார். 
மறுநாள் காலையில் ஒரு ஏழையான பிச்சைக்காரனைப் போல மாறுவேடத்தில் முதல் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு இவரது ஏழ்மையான தோற்றத்தின் காரணமாக விரட்டப்பட்டார். அடுத்து இரண்டாவது ஹோட்டலுக்கு சென்றார், அங்கு நீண்ட நேரம் காத்திருந்து மட்டும்தான் மிச்சம். அவர்கள் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்து மூன்றாவதாக இருந்த ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தன்னுடைய நண்பர் மேலாளராக இருப்பதால் தன்னை எளிதில் அடையாளம் கண்டு கொள்வார். தனக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று எண்ணியவராக அந்த மூன்றாவது ஹோட்டலுக்குள் நுழைந்த அவரை பார்த்த அந்த மேலாளர், உனக்கெல்லாம் நான் சாப்பாடு போட்டுக் கொண்டே இருந்தால், எப்பொழுது இந்த ஹோட்டல் முன்னேறுவது? இந்த ஹோட்டலுக்கு ஒரு முதலாளி இருக்கிறான். அவன்தான் நீ கேட்பது எல்லாம் கொடுப்பதற்கு சரியானவன். ஆனால் அவனும் சற்று நாளில் இறந்து விடுவான். அவனுக்கு பின்னர் நான் தான் இந்த ஹோட்டலுக்கு முதலாளியாக இருப்பேன் என்று பேசி விட்டுச் சென்றுவிட்டான். மிகுந்த கவலையோடும் வருத்தத்துடனும் வேதனையோடும் நான்காவது ஹோட்டலுக்கு சென்றார்.  அங்கு இருந்த பணியாளர்கள் அவரை அன்புடன் வரவேற்று, சற்று நேரம் காத்திருங்கள்! உங்களுக்கான உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்று கூறினர். அங்கு வந்த அந்த ஹோட்டல் மேலாளரும், ஐயா சற்று நேரம் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார். சற்று நேரத்தில் அவருக்கு உணவும் வந்தது. அதை மகிழ்வோடு அருந்தினார். அப்போது அவரைப் பார்த்த மேலாளர், ஐயா! ஒரு வருடத்திற்கு முன்பாக நானும் உங்களைப் போலத்தான் இந்த ஹோட்டலுக்கு வந்தேன். இங்கு ஒரு முதலாளி இருந்தார். நல்ல மனிதர். அவர் அன்று எனக்கு உணவு கொடுத்து அடுத்த நாளில் ஒரு வேலையும் கொடுத்தார். இன்று  உங்களை பார்க்கும் பொழுது என்னுடைய முதல் நாள் வேலை கிடைத்த அனுபவத்தை நினைத்து பார்க்கின்றேன். நீங்களும் கூட நாளை  இங்கு வரலாம். உங்களுக்கு ஏற்ற வேலையை நான் தருகின்றேன். அதனை செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அந்த முதியவரும் மகிழ்வோடு உணவருந்தி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

       மறுநாள் காலையில் அந்த முதலாளி அனைத்து ஹோட்டல் மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார். அப்பொழுது அவர்கள் மத்தியில் நான்காவதாக இருந்த மேலாளரை அழைத்து நடுவில் நிறுத்தி, இவரே எனக்கு பின் வாரிசாக வருபவர். இவரை நான் இந்த ஹோட்டல்கள் அனைத்திற்கும் முதலாளி ஆக்குகிறேன் என்று மகிழ்வோடு கூறினார்.

மேற்கண்ட இந்த நிகழ்வில் நான்காவதாக வந்த அந்த மேலாளர், மனிதத்தை மதிப்பவராக, ஏழையான முதியவருக்கு உணவு கொடுத்தார். எனவே அவரை உயரிய இடத்திற்கு மாற்றினார் அந்த முதலாளி.

                   இன்று, ஆலயத்தில் காணிக்கை செலுத்திய, தன் பிழைப்பிற்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசையும் போட்ட பெண்ணைப் பற்றிய நிகழ்வை வாசிக்கக் கேட்டோம்.  முதல் வாசகத்தில் தோபித்துடன் பயணித்த இரபேல், இறைவனை புகழுங்கள். இறைவனை மாட்சிப்படுத்துங்கள், என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்வையும் வாசிக்க கேட்டோம். இந்த இரண்டு நிகழ்வும் நமக்கு அடிப்படையாக சொல்லக்கூடிய ஒரு விஷயம் கடவுளைப் போற்றுங்கள் கடவுளை வாழ்த்துங்கள் என்ற செய்தியையும் கடவுளுக்கு உரியதைச் செய்யுங்கள் என்ற செய்தியையும் இன்றைய இரண்டு வாசகங்களுமே நமக்குத் தருகின்றன. 
 எது கடவுளுக்கு உரியது?
முதல் வாசகத்தின் அடிப்படையில் கடவுளைப் போற்றுவதும்,  புகழ்வதும் அவர் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவதும் ஆகும். நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் கடவுளுக்கு உரியது என்று பார்க்கும் போது, பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசையும் கடவுளுக்கு கொடுத்த  அந்தப் பெண். வழக்கமாக கோவிலில் கொடுக்கப்பட கூடிய காணிக்கை என்பது பொதுப் பணிக்கென பயன்படுத்தப்படுகிறது. தனக்கு இல்லை என்றாலும்,   பொது பணியாற்றுவதற்கு நம்மிடம் இருப்பதை பகிர வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இந்த பெண் ஒரு படி மேலே சென்று பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் கடவுளிடம் கொடுத்து விட்டு, கடவுளை நம்பி இருப்பவளாக இருக்கிறாள்.  எப்போதுமே நாம் நம்மிடம் இருப்பதை பிறரிடம் கொடுத்து விட்டு நாம் இறைவனை எதிர்பார்க்க கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம்.   ஆனால் உண்மையில் இது நமது வாழ்வில் வெளிப்படுகிறதா?  என்று யோசிக்கும் பொழுது, "தனக்கு மிஞ்சியதே தானமும் தர்மமும்", என்ற கோட்பாட்டை தான் பெரும்பாலும் நாம் பின்பற்றுகிறோம். இருப்பதையே நாம் தருவதில்லை, இருப்பதில் தருகிறோம்.  ஆனால் இருப்பதை தருவதற்கு ஒரு மனம் வேண்டும்.  இருப்பதில் தருவதற்கும் ஒரு மனம் வேண்டும்.  நம்மில் பலர் இருப்பதில் பகிர்கிறோம். ஆனால் இருப்பதையே பகிர்ந்த இந்த பெண்மணி போல, நாம் மாறிட வேண்டும் என்றால், அதற்கு ஆழமான நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். எப்படி அந்தப் பெண் தன்னிடம் இருந்த இரண்டு செப்புக் காசுகளையும் கொடுத்து விட்டாளோ, கடவுள் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் அந்த பெண்ணிடம் இருந்ததோ, அது போல நமக்கும் அத்தகைய ஆழமான எண்ணம் இருக்க வேண்டும். 
       அத்தகைய எண்ணம் இன்று நம்மிடம் இருக்கிறதா என சீர்தூக்கிப் பார்ப்போம். இல்லையென்றால் வளர்த்துக்கொள்ள முன்வருவோம். ஆனால் இன்று இந்தச் சமூகத்தில் வாங்கி வாங்கி பழக்கப்பட்ட பலர் கொடுக்க முன்வருவதில்லை. இதுதான் இன்றைய யதார்த்தமான சூழ்நிலை. எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள், கொடுக்கவும் முன்வரவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தருகின்ற செய்தி, "கொடுங்கள் அதுவே கடவுளுக்கு உகந்தது". கடவுள் துன்ப நேரத்தில் நன்மை செய்தால் நன்றியை கொடுங்கள் கடவுளுக்கு, அது கடவுளுக்கு உரியது. துன்புறும் ஒரு ஏழையைக் கண்டால் அவனது துன்பத்தை நீக்குவதற்கு உங்களிடம் இருப்பதையே நீங்கள் கொடுக்காவிட்டாலும் இருப்பதில் சிலவற்றையாவது கொடுங்கள், அது கடவுளுக்கு உரியது. 

 மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவருக்கு இருப்பதை பகிர்ந்து இன்புற்று வாழ, அடுத்தவரின் மகிழ்வை நமது மகிழ்வாக்கி வாழ இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். அதை வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் செயலில் வெளிக்காட்ட இன்றைய நாளில் இறைஞ்சி வேண்டுவோம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...