எல்லாம் சில காலமே!
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!
இன்றைய நாளில் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் துயரத்தின் மத்தியில் வாடிய இருவரைப் பற்றி நாம் வாசிக்கக் கேட்டோம். ஒன்று தோபித்து. இரண்டாவது சாரா என்ற ஒரு பெண்மணி.
இந்த தோபித்து, ஒளியோடு பார்வையோடு இருந்தவர், பார்வையற்ற நிலையை அடைகிறார். வாழ்க்கையில் இருள் சூழ்கிறது. எல்லாவற்றிற்கும் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அவரது இந்நிலை கண்டு பலர் இழிவாக பேசினாலும், தனது நம்பிக்கையை அவர் இழந்துவிடவில்லை. தான் கொண்டிருந்த கடவுள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். அதுபோலவே சாரா என்ற பெண்மணியும். அவரை மணந்த கணவர் இறந்து போய் கொண்டே இருந்தனர். ஆனால் இறப்பும் பிறப்பும் இறைவனது கையில் என்று கூறுவார்கள். ஆனால் சுற்றியுள்ள சமூகமோ, இந்த பெண்ணை அவர்கள் மணந்ததால் இறந்தார்கள் என்று கூறி, ஒரு பெண்ணை இழிவுபடுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கின்றோம். இந்த இழிநிலையைத் தாங்கிக்கொள்ள இயலாத அந்தப் பெண்மணி, மரணித்து விடலாம் என்று, தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறாள். இருந்த போதிலும் அந்த நேரத்திலும், தனது பாசத்திற்குரிய தந்தையைை பற்றி நினைவு கூருகிறாள். நினைவுு கூர்ந்து, தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைத்தவளாக இறைவனை நோக்கி மன்றாடுகிறாள். மன்றாடுகின்ற இவர்கள் இருவரது ஜெபத்தையும் கேட்கின்ற இறைவன் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரக் கூடிய நிகழ்வைத் தான் நாம் வாசிக்கக் கேட்டோம். பார்வையற்றிருந்த தோபித்து, பார்வை பெறுகின்றார். மணம் முடித்தால் இறந்து போய் விடுவார்கள் என்று அஞ்சி நடுங்கி சமூகம் புறக்கணித்து பேசிய அந்த பெண்ணுக்கு தோபியா மூலம் திருமண வாழ்வு மீண்டும் அமைகிறது. இந்த இரண்டு நபர்களும் இன்று நமக்கு தரக்கூடிய செய்தி, இந்த உலகத்தில் இன்பங்கள் பல இருந்தாலும், துன்பங்களை நெடுநாட்கள் தொடரப் போவதில்லை. சில காலத்திற்கு மட்டுமே அது நம்மோடு இருக்கும். பிறர் துன்பத்தில் இறைவன் நம்மை வலுப்படுத்தி, உறுதிப்படுத்தி நம்மை நிலைநிறுத்திக் நமக்கு மகிழ்வான வாழ்வை தருவார் என்ற செய்தியினை இவர்கள் வாழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது. இத்தகைய பார்வையோடு இன்றைய நற்செய்தி வாசகத்தில் பயணிக்கும்போது, இயேசுவிடம் இறப்புக்கு பிறகு வாழ்வு எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் இயேசு அவர்களுக்கு தெளிவாக பதில் கூறுகிறார், இறப்புக்கு பிறகு இங்கு இருப்பது போல் அல்ல, நாம் வானதூதர்களைப் போல இருப்போம் என்று.
யார் இந்த வான தூதர்கள் என சிந்திக்கின்ற போது எப்போதுமே பல இடங்களில் நாம் பலவிதமான வானதூதர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் எல்லா வானதூதர்களும் செய்கின்ற ஒரு மிக முக்கியமான பணி, ஆண்டவருடைய வார்த்தையை அறிவிப்பதாகும். இந்த அறிவிப்பு பணியை எல்லோரும் செய்து கொண்டிருந்தார்கள். நாமும் இந்த உலகத்தில் ஆண்டவருடைய அறிவிப்புப் பணியை செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரின் அறிவிப்பு பணி என்பது மகிழ்ச்சியை தரக்கூடியது, ஆறுதலை தரக்கூடியது, துயருற்று வாழ்வோருக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமைகிறது. அத்தகைய பணியை இந்த சமூகத்தில் செய்யத்தான் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இறப்புக்கு பின் என்ன நடக்கும் என சிந்தித்துக் கொண்டு நமது வாழ்வை நகர்த்திச் செல்வதை நிறுத்தி விட்டு, வாழுகின்ற இந்த உலகத்தில் இறைத்தூதர்களை போல நாம் வாழ அழைக்கப்படுகிறோம்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல நேரங்களில் பலவிதமான பிரச்சனைகளால் பலர் மனம் உடைந்து போய், எல்லாம் முடிந்தது என்று அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மக்களை அனுதினமும் நாம் சந்திக்கலாம் அல்லது பல நேரங்களில் நாமும் அப்படி பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் இன்று இறைவன் நமக்குத் தருகின்ற பண்ணி வானதூதர்களைப்போல செயல்படுங்கள் என்பதாகும். வானதூதர்கள் எப்படி மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்களோ, என்று எப்படி நம்பிக்கை தரக்கூடிய ஒரு செய்தியினை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்களோ அதுபோல நாம், இதுபோன்று இன்பத்தால் துயரத்தால் துவண்டு உள்ள மக்களை தேடிச்சென்று ஆறுதலையும் நம்பிக்கையையும் விதைக்கக்கூடிய கடவுளின் வானதூதர்களைப் போல செயல்பட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
எனவே நிகழக்கூடிய ஒவ்வொரு துன்பமும் துயரமும் நம்மை வாட்டுகிறது என அஞ்சுவதைவிட நம்மால் தாங்க முடியாத எந்தத் துன்பத்தையும் துயரத்தையும் இறைவன் நமக்கு அனுமதிப்பதில்லை என்பதை ஆழமாக புரிந்து கொண்டவர்களாய், நிகழும் இந்த துன்ப காலம் சில காலமே. இந்தத் துன்ப காலத்திற்குப் பிறகு, கடவுள் நம்மை உறுதிப்படுத்தி நிலைநிறுத்துவார் என்ற நம்பிக்கையோடு நாம் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இதையே 1 பேதுரு, 5ம் அதிகாரம் 6 முதல் 10 வசனங்களில் இவ்வாறு கூறப்படுகிறது.
"கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?
எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்".
1 பேதுரு 5:6-10
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது கவலைகளை இறைவனிடத்தில் விட்டுவிட்டு, எப்படி தோபித்தும் சாராவும் தங்களுடைய கவலைகளை இறைவனிடத்தில் கொண்டு சேர்த்தார்களோ, அப்போது அவர்களுடைய துயரத்தை இறைவன் சரி செய்வதற்காக வானதூதரை அனுப்பி வைத்தார். அதுபோல நமது துன்ப நேரங்களில் இறைவனை நம்புவோம். அவர் மீது அசையாத நம்பிக்கை கொள்வோம். நம் துயரத்தை துடைக்க நல்லதொரு வானதூதரை இறைவன் அனுப்புவார்.
வானதூதர் எங்கிருந்தோ வருபவர் அல்ல. நம்மோடு இருப்பவர், நம்மில் இருந்து பிறப்பெடுப்பவர். நம்மில் இருந்து செயல்படக் கூடியவர்கள் தான் வானதூதர்கள். இந்த வானதூதர்களாக நாமும் மாறி துன்புறும் மக்களைத் தேடிச் சென்று, ஆறுதலையும் நம்பிக்கையும் விதைக்கும் பணியைச் செய்திட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக