புதன், 23 ஜூன், 2021

திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்... (24.6.2021)

 திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்.


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.




        இன்று நம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித திருமுழுக்கு யோவானை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். திருமுழுக்கு யோவான் என்றாலே எதையும் நேரடியாக சரி என்றால் சரி எனவும் தவறு என்றால் தவறு எனவும் சொல்லக் கூடியவர் என்ற பண்பு தான் முதலில் மனதில் வந்து நிற்கின்றது. இந்த திருமுழுக்கு யோவானின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளில் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு பாலமாக இருந்த இறைவாக்கினர் யார் என்றால், அவர் திருமுழுக்கு யோவான் ஆவார். அந்த திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் வாழ்க்கைக்கான பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். 

எளிமையான வாழ்வு. ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்த ஒரு வாழ்வு. ஆண்டவருக்காக வழியை தயாரித்து வைக்கக்கூடிய ஒரு வாழ்வு. தன்னை மெசியா என்று  ஒரு கூட்டம் நம்பிய போதும் கூட, நான் அல்ல மெசியா. எனக்குப்பின் வருபவர்தான் மெசியா என்று, உண்மையை துணிவோடு எடுத்துரைக்க கூடிய ஒரு பண்பு. அவரது மிதியடி வாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என தாழ்ச்சியின் உருவமாகவும் இவரை நாம் காண முடியும். இன்னும் எத்தனையோ நற்பண்புகளை இவரிடத்தில் நாம் கூறிக்கொண்டே செல்லலாம். இந்த திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நாள் நமக்கு உணர்த்தக் கூடிய செய்தி. 

     பொதுவாகவே நம்மை யாராவது ஒருவர் புகழ்ந்து பேசினால் வெறும் புகழ்ச்சியை கேட்டு மயங்கி விடாது, நமது வாழ்வில் உண்மையை நோக்கி நகரக் கூடியவர்களாக, சரியை சரி என்றும் தவறை தவறு என்றும் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழ திருமுழுக்கு யோவானின் வாழ்வு நமக்கு வலியுறுத்துகிறது. 

         திருமுழுக்கு யோவானை திருஅவை இன்று நினைவு கூருகிறது என்று கூறிவிட்டு, நாமும் இன்றைய நாளை வழக்கம் போல கடந்து செல்லாமல், திருமுழுக்கு யோவானிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளுள் ஏதேனும் ஒன்றை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதைப் பின்பற்றக் கூடியவர்களாக நாம் மாறிட முயல்வோம். இதற்காகவே இந்நாளில் திருஅவை திருமுழுக்கு யோவானை நினைவு கூருகிறது. திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது பண்புகளாக மாற்றிக் கொள்ளவும், இவரின் நற்பண்புகளின் அடிப்படையில் நமது குழந்தைகள் வளர்ந்திடவும் வழிகாட்டுவோம். இதன்வழி இயேசுவின் உண்மை சீடர்களாக இச்சமூகத்தில் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...