சட்டம் எதற்கு...?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த அகிலத்தில் அழிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பது அறியாமை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் திருச்சட்டத்தை பற்றிய தெளிவான நோக்கம் இல்லாமலும் அதை முழுமையாக அறிந்து கொள்ளாமலும் இருந்தார்கள். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட திருச்சட்டங்களை சுட்டிக் காண்பித்தார். அதை கண்டு பொறுக்க இயலாத பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் செயல்பாடுகளை; திருச்சட்டத்திற்கு எதிரானது எனக் கூறினார்கள்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்திலும் பல நேரங்களில் நாம் அறியாமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால் அந்தச் சட்டம் எதற்காக இயற்றப்பட்டது? அதன் உண்மையான நோக்கம் என்ன? என்பதை நம்மில் பலர் அறிந்து கொள்வது இல்லை. மாறாக நாமாக ஒன்றை புரிந்து கொண்டு நமக்கு ஏற்ற வகையில் சட்டங்களை பின்பற்றுகிறோம். உதாரணமாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையாகவே எத்தனை பேர் அதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப்பார்க்கலாம். நமது நாட்டில் இருக்கக்கூடிய சட்டங்களை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோம் என்பதை இன்றைய நாளில் சிந்தித்துப் பார்ப்போம்.
சட்டம் மனிதனுக்காக இயற்றப்பட்டது. மனிதன் அறநெறியோடும், ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் என்பதைத் தான் சட்டம் முன்னிறுத்துகிறது. ஆனால் பொதுவாக சட்டங்களை தங்களது தேவைக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இந்த உலகத்தில் பலர் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்து போவது எப்படி தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருந்த சட்டங்களை சுட்டிக் காண்பித்து, அதை சரி செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டாரோ, அவரைப் போல ஒவ்வொருவரும் இருக்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றி வழிநடக்கக் கூடிய அவரது சீடர்களான நாம், அவர் மீது கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில், நமது நாட்டில் நாம் வாழும் இடங்களில் இருக்கக்கூடிய திருஅவை சட்டங்கள், மற்றும் அரசியல் சட்டங்களின் ஆழமாக மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், நமது வாழ்வில் அவற்றை தெளிவான நோக்கத்தோடு அறிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிக்கவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். அதன் வழியாக நம்மிடம் இருக்கும் அறியாமையை அகற்றி புத்தொளி பெற்றவர்களாக, சட்டங்கள் கூறும் உண்மையான மகத்துவத்தின் அடிப்படையில் நமது பாதையை அமைத்துக் கொள்வோம், நம் வருங்கால தலைமுறையினரின் பாதையையும் அமைத்துக் கொள்ள வழிகாட்டுவோம். அதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.
சட்டங்கள் கூறும் உண்மையான மகத்துவத்தை கண்டுகொண்டு அதன் வழி அனைவரும் வாழ்வு பெற நம்மை அன்போடு அழைக்கும் அருட் சகோதரர் திருத்தொண்டர் சகாய ராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! செபங்களும்!
பதிலளிநீக்கு