நல்ல அளவையால் பிறரை அளப்போம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உளவியல் அறிஞரான ஜோ ஹாரி என்பவர், மனிதர்களை நான்கு வகையில் வகைப்படுத்தி ஒரு உளவியல் கொள்கையை உருவாக்கினார்;.
முதல் வகை மனிதர்கள், நான் சரி. அடுத்தவர் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
இரண்டாம் வகை மனிதர்கள் அடுத்தவர் சரி. நான் தான் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
மூன்றாம் வகை மனிதர்கள் நானும் தவறு, அடுத்தவர்களும் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
நான்காம் வகை மனிதர்கள் நானும் சரி, அவர்களும் சரி என சொல்லக் கூடியவர்கள்.
இந்த நான்கு வகையில் எந்த வகையைச் சார்ந்தவர்களாக நாம் இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை பிறரை தீர்ப்பிடாது வாழ அழைக்கின்றார். நாம் எந்த அளவையால் பிறரை அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படுவோம் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் கூட ஆபிரகாம் ஆண்டவருடைய வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தைகளின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட மனிதனாக ஆண்டவர் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் தனது பயணத்தை தொடர்கின்றார்.
தன்னுடைய வார்த்தைகளை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு பயணிக்கின்ற ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்டு இறைவனும் வியந்து போனவராய், அவருக்கு தருவதாகக் கூறிய அனைத்து விதமான ஆசிகளையும், நிறைவேற்றுகிறார். நாம் எந்த அளவையால் அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். நாம் எப்படி பிறரை மதிக்கின்றோமோ, அதே அளவையால் நாமும் மதிக்கப்படுவோம். பல நேரங்களில் கோபத்தில் நாம் கூறுவோம், "மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்" என்று. மனிதர்களுள் பலர் தன்னை எப்படி அடுத்தவர் நடத்துகிறார்களோ, அப்படியே அவர்களையும் தாங்கள் நடத்த வேண்டும் என இயல்பாக எண்ணி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பலவிதமான போட்டிகளும் பலவிதமான இன்னல்களும் இடையூறுகளும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நிதானத்தோடு அடுத்தவரை ஊக்கப்படுத்தவும், அடுத்தவரை ஏற்றுக் கொள்ளவும், பாராட்டவும் கூடிய மனிதர்களாக நாம் பயணிக்க வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கின்ற போது, நம்மைச் சுற்றி இருக்கின்ற நபர்களும் நம்மை பாராட்டக்கூடிய நல்வழிப்படுத்தக்கூடிய ஊக்கமூட்டக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
நல்ல அளவையால் பிறரை அளப்போம், நாமும் நல்ல அளவையால் அளக்கப்படுவோம். எனவே அடுத்தவரை நேர்மறையான எண்ணங்கள் கொண்டு அணுகவும், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை நேர்மறையான எண்ணத்தோடு அணுகவும், நமது சொல்லும் செயலும் அதற்கு ஏற்ற வகையில் அமைந்திடவும், இன்றைய நாளில் இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக