திங்கள், 14 ஜூன், 2021

இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்... (15.6.2021)

இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்....

விண்ணகத் தந்தையின் மக்களாகிய என் அன்பு உறவுகளே...

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்பம் அது உண்மையில் பெறுவதில் அல்ல. மாறாக நம்மிடமிருந்து ஒன்றைக் கொடுக்கும் பொழுது தான் இன்பம் ஊற்றெடுக்கிறது. 

 இந்த மண்ணில் புதிதாக விதைக்கப்படுகின்ற விதையானது, மண்ணை முட்டி கொண்டு வெளியே வருவது மிகப் பெரிய விருட்சமாக வளரத் தான். மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்த பின்னர் தன்னை கொடுக்கத்தான். ஆம்! மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய கனிகளை தன்னில் இழந்து நமக்கு வழங்குகின்றன. அவை நமது வாழ்வுக்கு வலிமை தருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய இலைகளை எல்லாம் இழந்து விடுகின்றன. அவை வயலுக்கு உரமாகின்றன. மரத்திலிருந்துஉதிர்ந்து விழும் மட்டைகள் கூட ஏழையின் வீட்டில் விறகாக பயன்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தன்னை இழப்பதினால் மரம் இறைவனால் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. தன்னிடமிருக்கும் அத்தனையையும் இழந்தாலும் கூட மரம் என்றும் மகிழ்வோடு தலையசைத்து கொண்டு பிராணவாயுவை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. 

         ஆம்! அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில்  புனித பவுலடியார் தன்னை இழக்க ஆர்வத்தோடு முன்வரும் மக்களைப் பற்றியே இன்று குறிப்பிடுகின்றார். கடுமையான துன்பங்களுக்கும் வறுமைக்கும் உள்ளான போதும் அவர்களது உள்ளத்தின் ஆழத்தில் இறைவனால் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகின்றன மகிழ்ச்சியைத் ஊற்றெடுக்கின்றது என்பதை குறிப்பிடுகின்றார். அந்த மகிழ்வில் மிகுதியாய் அவர்கள் ஆண்டவருக்கு தங்களை அர்ப்பணித்தார்கள். அறப்பணியில் தாங்களும் இணைந்துகொள்ள வேண்டுமென ஆர்வத்தோடு முன்வந்தார்கள். 

காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’
புலம்பல் 3:23

             என்ற இறைவார்த்தைக்கேற்ப மற்றவர்களுக்காக தம்மையே வழங்கி வெறுமை ஆகும்பொழுது அவர்களது உள்ளமாகிய பாத்திரம் இறையருளால் நிரம்பி வழிகின்றது என்பதை இன்றைய நாளில் புனித பவுலடியார் குறிப்பிடுகின்றார்.
            இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமது அன்பினை இன்னும் ஆழப்படுத்த அழைப்பு தருகின்றார். நமது அன்புக்குரியவர்களையும் கடந்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காகவும் ஜெபிக்க அழைப்பு தருகின்றார். நமது உள்ளத்திலே மற்றவரின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் நமக்கு துன்பத்தை கொடுத்தாலும் அவற்றை எல்லாம் தந்தையின் பாதத்தில் இழந்து விட்டு, அவரது அருளால் நமது உள்ளத்தை நிறைத்துக் கொள்ள ஆண்டவர் இயேசு அழைக்கின்றார். 

         எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கிற்கிணங்க நமது அன்பை ஆழப்படுத்தவும், அகலப்படுத்தவும், நம்மை இழக்க துணிவு கொள்ளவும், அதன் வழியாக நிறைவான விண்ணகத் தந்தையின் அன்பு மக்களாக வாழவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...