வியாழன், 17 ஜூன், 2021

செல்வம் எங்கே! உள்ளம் அங்கே!...(18.6.2021)

செல்வம் எங்கே! உள்ளம் அங்கே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் நாம் நமது செல்வத்தை எங்கு சேர்த்து வைத்திருக்கிறோம்? என்பதை குறித்து சிந்திக்க அழைக்கின்றன. செல்வம் சேர்த்து வைப்பதை குறித்து ஏன் சிந்திக்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பினால், நாம் எதை சேர்த்து வைத்தாலும் எதிர்காலத்திற்கு என்று கூறுவோம். எதிர்காலம் வளமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பலவற்றை சேமிக்கின்றோம். அது பொருளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், அல்லது புண்ணியங்களாக இருக்கலாம். அனைத்தையும் எதிர்காலத்திற்கு என சேமிக்கின்றோம். நாம் சேமித்து வைக்கக்கூடிய செல்வம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நமது உள்ளமும் இருக்கும் என இயேசு இன்றைய நாளில் தெளிவுபடுத்துகிறார்.

 

 வருங்காலம் வளமானதாக அமையும் என்று எண்ணாதவர் இந்த உலகத்தில் இல்லை.

 "வருங்காலம் வளமானதாக அமைய வரும் ஒரு காலம்" என எண்ணக் கூடியவர்கள் இன்றைய உலகில் ஏராளம். 

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல நேரங்களில் பலவற்றை நாம் எதிர்காலத்திற்கென சேர்த்து வைக்கிறோம். ஆனால் நாம் இம்மண்ணில் சேர்த்து வைக்கக் கூடிய எதுவும் நம்மை பின் தொடரப் போவதில்லை. வெற்று உடம்போடு இவ்வுலகத்தில் பிறந்த நாம் மீண்டும் அவ்வாறே குழிக்குள் அடக்கம் செய்யப் படுகிறோம். வெற்று உடம்போடு இந்த உலகத்தில் உதித்த நாம் மீண்டும் வெற்று உடம்போடே  மீண்டும் இறைவனிடம் சொல்லுகின்றோம். வந்த இடத்திற்கு மீண்டும் செல்கின்றோம்.  எதையும் நாம் கொண்டுவரவில்லை. ஆனால் இந்த உலகத்தில் இருக்கும் நாட்களெல்லாம் எதையாவது நம்முடனே வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். 

 எதையும் கொண்டு வராத நாம், அனைத்தையும் நம்மிடம் இருக்க வேண்டுமென எண்ணக்கூடியவர்களாய் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேர்க்கின்றோம்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமது செல்வங்களை விண்ணகத்தில் சேர்க்கச் சொல்கிறார். விண்ணகத்தில் எப்படி செல்வம் சேர்ப்பது? என்ற கேள்வி உள்ளத்தில் எழும்போது கண்ணுக்குத் தெரியக்கூடிய சின்னஞ்சிறு சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய நல்ல பண்புள்ள உதவிகளும், நல்ல செயல்களும் தான் விண்ணகத்தில் செல்வமாக கருதப்படுகின்றன.  இந்த உலகத்தில் நாம் செல்வம் என கருதக் கூடிய அனைத்தும் நிலையானது அல்ல. அவை நிலையற்றவை. அவை நம்மோடு வரப்போவதும் இல்லை. ஏனென்றால் நாம் இந்த மண்ணிற்கு வரும்போது இவற்றைக் கொண்டு வரவில்லை. இவ்வுலகத்தில் இருந்ததை நாம் இங்கேயே விட்டுவிட்டு தான் செல்லப் போகின்றோம். ஆனால் நாம் விண்ணகத்திற்குச் செல்லும்போது நமது செல்வமாக இருப்பது, இந்த மண்ணில் நாம் சேர்த்துக் கொண்ட புண்ணியங்கள் தான். இந்த புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்வதைத் தான் இறைவன் விரும்புகிறார். இந்த புண்ணியங்கள் மட்டுமே விண்ணகத்தில் சேர்க்கப்படக் கூடிய  செல்வங்களாக இருக்கிறது.

 இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து அவரது  வாழ்வை முன்னிறுத்தி அவர் கற்பித்த விழுமியங்களுக்கு ஏற்றபடி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவும்  வேண்டும் என்ற நோக்கத்தில் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டார். அவர் அடைந்த வேதனைகளையும் அவர் அனுபவித்த இன்னல்களையும் தான் இன்றைய முதல்  வாசகம் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது. இத்தனை துன்பங்களை அவர் இந்த மண்ணில் ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன? என சிந்திக்கும் போது அவர் மண்ணக செல்வத்தை விட விண்ணக செல்வத்தை சேர்க்க வேண்டும் என எண்ணினார்.

 இன்று நாமும் சேர்க்க வேண்டும் என எண்ணுகின்றோம். நாம் மண்ணக செல்வத்தைச் சேர்க்கிறோமா?  விண்ணக செல்வத்தை சேர்க்கிறோமா? நாம் சேர்க்கின்ற செல்வம் எங்கு இருக்கிறதோ? அந்த செல்வம் இருக்கும் இடத்தில்தான் நமது உள்ளமும் இருக்கும். நாம் நமது செல்வத்தை விண்ணகத்தில் சேர்ப்போம். அப்போது நமது உள்ளம் விண்ணகத்தை நோக்கியதாக இருக்கும். உயர்ந்த இடத்தை நோக்கி உள்ள உள்ளம், உயர்வான மகத்துவமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்க வழிகாட்டும்.

 இன்றைய நாளில்  நமது உள்ளமானது இறைவனை நோக்கி இருக்கவும், இறைவனை நோக்கி செல்வங்களைச் சேர்த்து வைப்பவர்களாக மாறி, எப்போதும் நமது உள்ளம் இறைவனது இருப்பிடத்தையும் இறைவனையும் சார்ந்திருக்க வேண்டும் என்றும், எப்போதும் நமது உள்ளமானது இறைவனது இல்லத்தில் செல்வம் சேர்த்து வைப்பதில் மட்டுமே கவனமாயிருக்கவும் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...