செவ்வாய், 29 ஜூன், 2021

நிராகரிப்பு.... (30.6.2021)

நிராகரிப்பு....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் சாராவால் நிராகரிக்கப்பட்ட நபராக தாமார் மாறுகிறாள். நற்செய்தி வாசகத்தில் ஊர் மக்களால்  நிராகரிக்கப்படக் கூடிய நபராக இயேசு மாறுகிறார்.  நமது வாழ்வில் நாமும் நிராகரிப்பை சந்திப்பது உண்டு.  அது ஒரு தனிப்பட்ட நபரிடத்திலோ, அல்லது ஒரு குடும்பத்திலோ ஒரு பெரிய நிர்வாகத்திலோ சந்திக்க நேரலாம்.  நாம் நிராகரிக்கப்படும் போது எத்தகைய மனநிலை நமக்குள் இருக்கும் என்பதை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து பார்ப்போம்.  அதுபோலத்தான் நாம் நிராகரிக்கக் கூடிய நபர்களுடைய மனநிலையும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

சாராள் தாமாரை தாமாக முன்வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள்.  பிறகு தாமாக முன்வந்து அவளை நிராகரிக்கவும் செய்கின்றாள்.  இதுதான் மனித இயல்பு. நாம் பல நேரங்களில் நமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி அடுத்தவரின் மனநிலையை புரிந்துகொள்ள தவறிப் போகின்றோம். எனவேதான் அடுத்தவரைப் பற்றி எண்ணாமல்,  அவரது மனவோட்டத்தை அறிந்து கொள்ளாமல் அவர்களை நிராகரிக்க கூடியவர்களாக இருக்கின்றோம். 

              இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அடுத்தவரை  தேவைக்கு பயன்படுத்தி விட்டு பிறகு நிராகரிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சிலர் இதை பிழைக்கத் தெரிந்த தந்திரம் என்று நியாயப்படுத்தக் கூடியவர்களுமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு நமக்கு செல்லக்கூடிய வார்த்தை, நிராகரிப்பு என்பதை நாம் யாருக்கும் எப்போதும் எந்த நேரத்திலும் கொடுக்கக் கூடாது என்பதுதான். இயேசுவை மக்கள் நிராகரித்தார்கள். அவரை அந்த ஊரை விட்டு சென்று விடுமாறு வேண்டினார்கள். ஆனால் இயேசு அவர்களை  நிராகரிக்கவில்லை. அவர்களுக்கு நலமானது எது என்பதை அறிந்திருந்தார். எனவே நலமானதை அங்கு செய்தார் அவர். அந்த மக்களுக்காக தன் உயிரையும் கொடுத்தார். அந்த மக்களிடையே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் எனப் பலரை குணமாக்கினார். இயேசு தன்னை நிராகரித்தவர்களையும் அரவணைக்க எண்ணினார்.  நாமும் இந்த சமூகத்தில் நம்மை நிராகரித்தாலும் கூட, நாம் யாரையும் நிராகரிக்காது அனைவரையும் அரவணைத்து ஒன்றித்து வாழ இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

1 கருத்து:

  1. 🙇🙇🙇🙇🙇🙇. அருமையான கருத்துக்களை ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொடும்படியாக, ஆண்டவர் இயேசுவில் மாற்றமடைய உண்மையான கருத்துக்களை, அழகாக எடுத்துரைக்கும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...