செவ்வாய், 15 ஜூன், 2021

அறுவடை செய்ய.... (16.6.2021)

அறுவடை செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
        இன்றைய நாள் வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து விதைத்ததை அறுவடை செய்ய நம் ஒவ்வொருவரையும்  அழைக்கின்றார். மனிதனாக இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒரு விதத்தில் நாம் இவ்வுலகில் எதையோ விதைத்துக்கொண்டே செல்கிறோம். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்று கூறுவார்கள். 

இன்று நமது வாழ்வை சற்றுத் திரும்பிப் பார்ப்போம். இந்நாள் வரை நாம் எதையெல்லாம் விதைத்து வந்து இருக்கிறோம் என சிந்திப்போம்.பல நேரங்களில் நாம் கோபத்தோடு உறவுகளைப் பிரிந்து செல்கின்ற விதையினை வைத்திருப்போம் பலநேரங்களில் இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கை எனும் விதையினை விதைத்தவர்களாய், முன்னோக்கிச் சென்று கொண்டிருப்போம். பல நேரங்களில் அடுத்தவரின் துயரத்தை கண்டும் காணாமல் இருக்கும் விதையினை விதைத்துவிட்டு கண்டு கொள்ளாதவர்களாய் இருந்திருப்போம். பல நேரங்களில் நமது வாழ்வில் பலர், நாம் துன்புறும் போது நமது துன்பத்தில் பங்கெடுக்கக் கூடிய விதையினை விதைத்தவர்களாய் இருக்கலாம். நாமும் அவ்வாறு பிறர் வாழ்வில் செயல்பட்டிருக்கலாம். 

நாம் எந்த விதையை விதைத்தோமா அந்த விதைதான் வளரும். மா விதையை விதைத்து விட்டு அதில் அத்திப் பழத்தையோ அல்லது பலாப்பழத்தையோ, எதிர்பார்ப்பது ஏற்புடைமை ஆகாது. 
        அதுபோல நாம் இந்த உலகத்தில் நல்ல விதைகளான நற்பண்புகளை விதைத்திருந்தால், நற்பண்புகளை நாம் பிறரிடத்தில் இருந்து எதிர்பார்க்காமலேயே நம்மை வந்தடையும். அதனை அறுவடை செய்ய முடியும். ஆனால் அவ்வாறு நாம் செய்யாது, நற்பண்புகளை இச்சமூகத்தில் விதைக்காதவர்களாய் இருந்து விட்டு, அதை விளைவிக்கும் நல்ல பலன்களை மட்டும் எதிர்பார்ப்போமாயின் அவை நமக்கு கிடைக்காது என்பது இன்றைய வாசகங்கள் வழியாக அறிவுறுத்தப்படுகின்றது. 

                   நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கின்றோம். மண்ணில் வாழக் கூடிய காலம் கொஞ்சமே. இந்த கொஞ்ச நாட்களில் அன்பையும், அரவணைப்பையும், இரக்கத்தையும், நேசத்தையும், விதைக்க தயாராவோம். அதனை  இம்மண்ணில் விதைப்போம். அந்த விதைத்த விதைகள் பலனளிக்க தயாராகும்போது அதனை அறுவடை செய்யக் கூடியவர்களாக மாறுவோம். அதற்கு இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார்.
அழைக்கின்ற இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், அவரது பாதையில் நல்ல விதைகளை விதைப்பதற்கான பணியில் நாம் ஈடுபட நோக்கிச் சென்றாலும், நாம் விதைக்கின்ற விதைகளில் பெருமை பாராட்டிக் கொண்டும் தம்பட்டம் அடித்துக் கொண்டு செல்வதை இறைவன் விரும்புவதில்லை. போகிற போக்கில் நல்லதே செய்து கொண்டே நகர்ந்து செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
             இயேசு தனது பணி வாழ்வில் சென்றவிடமெல்லாம் நன்மையே செய்து கொண்டு சென்றார் என விவிலியத்தில் நாம் பல இடங்களில் வாசிக்கின்றோம். அந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் நாமும் நல்ல விதைகளை இச்சமூகத்தில் விதைத்துக்கொண்டே செல்லவும், விதைத்த விதைகள் விளைந்து நிற்கும் பொழுது அதனை அறுவடை செய்யக் கூடியவர்களாக நாம் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 
       வீண் பெருமைக்கும், தம்பட்டத்திற்கும் இடம் கொடுக்காமல், தன்னலத்தை முன் நிறுத்தாது, பிறர் நலத்தை முன்னிறுத்தி,  பொது நலத்தை முன்னிறுத்தி, பல நல்ல விதைகளை மண்ணில் விதைத்து தழைத்தோங்கச் செய்ய, வளரச் செய்ய, இறையருளை இன்றைய நாளில் இறைஞ்சி வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...