நம்பிக்கையோடு பயணிக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அரங்கத்தில் கைத்தட்ட கூடிய போட்டி நடைபெற்றது. அங்கு யார் அதிக நேரம் விடாமல் கைதட்டிக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அதிக நபர்கள் வந்திருந்தார்கள். அந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த நபர்களால் அந்த அரங்கமே நிறைந்திருந்தது. கதவுகளை எல்லாம் சாத்திவிட்டு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டார்கள். மேலே ஒரு சூழல்விளக்கு மட்டும் எரிந்து சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இறுதிவரை யார் விடாமல் கைதட்டி கொண்டிருந்தார்களோ அந்த நபர்களை நோக்கியதாக அந்த விளக்கின் ஒளி செல்லும். இதுவே போட்டியின் நடைமுறைகள். போட்டி ஆரம்பமானது. அனைவரும் கை தட்டினார்கள். ஐந்து மணி நேரம் கழித்து இறுதியாக அந்த ஒளி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வந்து நின்றதாம். இறுதியில் நடுவர்கள் அந்த நபரை நோக்கி வாழ்த்துக்கள் நீங்கள் மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். அப்போது இருவர் மேடையை நோக்கி வரத் துவங்கினார்கள். அந்த இருவரையும் பார்க்கும் பொழுது அரங்கத்தில் சூழ்ந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த இருவரில் ஒரு நபருக்கு வலதுகை இல்லை மற்றொரு நபருக்கு இடதுகை இல்லை. ஆனால் இருவரும் சேர்ந்து கரங்களில் தட்டியதால் இறுதியில் வெற்றி பெற்றார்கள். கைத்தட்டல் போட்டியில் கரங்கள் இல்லாத ஒரு நபர் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததே அவரது வெற்றியின் அடையாளம். அது, பாராட்டுதலுக்குரியது. இவர்களின் முயற்சி இன்று நமக்கு கூறுவது நமது வாழ்வில் வலதுகை இல்லாவிட்டாலும் அல்லது இடது கை இல்லாவிட்டாலும் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே. இந்த நம்பிக்கையே அவர்களை கைத்தட்டும் போட்டிக்கு அழைத்துச் சென்றது, மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தந்தது.
மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் நம்பிக்கை என்பது இருக்கிறது. நமது வாழ்க்கைப் பயணம் வெற்றியடைய நம்பிக்கை அவசியமாகிறது. என்றும் நம் உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்தால், எதிலும் நம்பி, கை வைக்கலாம்.
இயேசு தந்தையின் மீது அதீத நம்பிக்கை கொண்டு தம் பணியைத் தொடர்ந்தர்.இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீதும், நலம் தரும் நல்ல செயல்கள் மீதும், அவர் ஆற்றிய புதுமைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இயேசுவின் காலத்தில் இயேசுவோடு உடன் பயணித்தவர்களே இயேசுவின் சீடர்கள். அவர்கள் இயேசுவோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவரைப்பற்றி முற்றிலுமாக அறிந்தவர்கள். இரவு பகல் என்று எல்லா நேரத்திலும் இயேசுவுடனே தங்கி இருந்தவர்கள். இயேசு சென்றவிடமெல்லாம் அவரைப் பின்பற்றி சென்றவர்கள். ஆனால் அவர்கள் வாழ்விலும் நம்பிக்கையின்மை காணப்பட்டது.
நம்மிடம் இருக்கும் பொழுது எதையும் பொதுவாக நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் புதுமைகளையும், அருஞ்செயல்களையும், அற்புதங்களையும் கண்டிருந்தாலும் கூட, ஒரு துன்பம் என்று வருகின்ற பொழுது நம்பிக்கை இழந்தவர்களாக இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து கப்பலிலேயே பயணம் செய்கிறார். கீழ்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். புயல் காற்று வீசுகிறது. கப்பல் அலைக்கழிக்கப்படுகிறது. என்ன செய்வதென தடுமாற்றம். இயேசுவை எழுப்பிய சீடர்கள், ஆண்டவரே இதை சரி செய்ய முடியுமா என்று கேட்கவில்லை. மாறாக, ஆண்டவரே! நாங்கள் எல்லாம் சாகப் போகிறோமே! உமக்கு கவலை இல்லையா? இவ்வாறு உறங்கிக் கொண்டிருக்கிறீரே என்றார்கள்.
இந்த சீடர்கள் எல்லாம் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது இயேசுவின் அரும் செயல்களை உடனிருந்து பார்த்தவர்கள். பல ஆண்டுகளாக முடக்குவாதமுற்றிருந்த ஒருவரை கட்டிலோடு தூக்கி வந்து இயேசுவின் முன் கிடத்தி அவரை நலம் தரச் சொல்லி வேண்டிய போது அவர் நலமளித்ததை கண்ணார கண்டவர்கள். பல ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண்மணி, இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்து குணம் பெற்று சென்றாதை உடனிருந்து அறிந்தவர்கள். சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட கானானியப் பெண்ணும் கூட, மேசையில் இருந்து விழும் துண்டுகளை நாய்கள் உண்ணுமே. ஏன்று கூறி தன்னை தாழ்த்திக்கொண்டு எங்களுக்கு நீர் உதவ வேண்டும் என்று கூறி தன் மகளின் நோயிலிருந்து விடுதலை பெற்றுச் சென்றதை கண்கூடக கண்டவர்கள். இப்படி எத்தனையோ நபர்கள் நம்பிக்கையோடு இயேசுவைத் தேடி வந்த போதும். இந்த சீடர்களை இயேசு தம் பணிக்கென தேர்ந்தெடுத்தார். தான் தேர்ந்தெடுத்த சீடர்கள், தன்னோடு பயணிப்பவர்களின நம்பிக்கை இன்று உடைபடுகிறது. தங்கள்; வாழ்வில் துன்பம் என்று வந்தபோது, அவரை மறந்து போனார்கள். அவர் செய்த புதுமைகளை மறந்தார்கள். அவர் கற்பித்ததை மறந்தார்கள். அனைத்தையும் மறந்துவிட்டு அவரையே எழுப்பி, ஆண்டவரே! நாங்கள் சாகப் போகிறோம். உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.
பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கையை பற்றி பலருக்கு பாடம் எடுத்திருப்போம். நம்பிக்கையோடு பயணியுங்கள். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள் என வீரவசனம் பேசி இருப்போம். ஆனால் நமது வாழ்வில் துன்பம் நேரும் போது, நமது வாழ்வில் சோகங்கள் உருவாகும் போதும் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டு, நாம் நம்பிக்கையற்றவர்களாக இருந்திருப்போம் பல நேரங்களில். இது மனித வாழ்வில் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாம் நமது துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் சீடர்கள் அன்று தடுமாறினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு பாடம் கற்பித்தார். இன்னும் என்னை நம்பவில்லையா? என்ற கேள்வி எழுப்பினார். காற்றையும் கடலையும் அதட்டினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு காற்றும் கடலும் அமைதியாக இருந்தன என்று இறை வார்த்தையை வாசிக்க கேட்டோம். அந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினால் வலிமை பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டவர்களாக, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் சரி செய்யக் கூடியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் தம் பணியைத் தொடர்ந்தார்கள். எப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில், துன்புற்று அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசு தம் வார்த்தைகளால் துணிவை கற்றுக் கொடுத்தாரோ, அதுப்போல நமக்கும் கற்றுத்தருகிறார். அந்தத் துணிவை கற்றுக்கொண்ட சீடர்கள் அதன்பிறகு ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்த போது எத்தனையோ இன்னல்கள,; இடர்பாடுகளை சந்தித்தபோது, துன்பத்தைக் கண்டு அஞ்சவில்லை. மாறாக புயலுக்கு பின் அமைதி என்பது போல துன்பத்திற்குப் பின் இன்பம் என்ற செய்தியை கண்டு கொண்டார்கள்.
ஆனால், இன்று நிலவும் தொற்றுநோய் காரணமாக உலகமே உச்சத்தில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சில தன்னார்வ பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரைத் துச்சமென கருதாது போராடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்காக பணியாற்றுகிறார்கள் அவர்களது நம்பிக்கையின் பொருட்டு, நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களது ஓயாத பணியின் பொருட்டு தான் இன்று பலரும் குணம் பெறுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட யோபு துன்பத்தில் துவளாத மனிதர். விவிலியத்தில் நம்பிக்கை இழக்காத நபராக நாம் பலரை காணலாம். அவர்களுள் ஒருவர்தான் யோபு. ஏராளமான சொத்துக்களோடு இருந்தவர், அனைத்தையும் இழந்த நிலையிலேம் கூட கடவுள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் அசைவுறாதவராக இருந்தார். நமது வாழ்வில் துன்பம் வரும்போது நமது நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது நம்பிக்கை இழக்கும்போது பயம் ஒன்றுகூடிக் கொள்கிறது. அந்த பயம் தான் நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது. ஆனால்,
இந்த யோபுவை போல நாமும் நமது துன்ப நேரங்களில் நமது நம்பிக்கையை சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம். துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டுமென்ற பாடத்தை இறைவன் நமக்கு கற்றுத் தருகிறார். அவர் கற்பிக்கும் இந்த பாடத்தை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு துன்பம் ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் துவண்டு போய் விடாது, அந்த ஆண்டவரை இறுகப்பிடித்துக்கொண்டு யோபுவைப்போல அனைத்தையும் பல மடங்கு பெறக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.
இயேசுவின் சீடர்கள் தம் பணி வாழ்வில், பல துன்பங்களை ஏற்றுக்கொண்டாலும் ஆண்டவர் இயேசுவை அறியாதவர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற மன நிறைவோடு பயணித்தார்கள். இன்றைய நாளில் நாமும் நமது வாழ்வில் பலவிதமான இன்னல்களை துன்பங்களை சந்திக்கின்ற பொழுது, நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது உறுதியான நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகின்றோம். எனவே வாழ்வில் துன்பம் வருகின்ற நேரங்களில் எல்லாம் நம்பிக்கையை இழக்காது 1 பேதுரு 5:6-7
“கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.
1 பேதுரு 5:6-7 இந்த இறைவார்த்தைகளை மனதில் இருத்துங்கள். நம்பிக்கை என்பது வேறு எங்கும் இல்லை. நமது கைகளில் தான் இருக்கிறது. துன்பம் வரும்போது நமது கவலைகளை தாங்குபவராக ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு நம்பிக்கையோடு பயணிக்க இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக