வெள்ளி, 25 ஜூன், 2021

இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர... (26.6.2021)

 இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



ஒரு ஊரில் ராஜா ரவி என்ற இரு நண்பர்கள் தமது பள்ளி பருவத்திலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒன்றாக படித்து ஒரே இடத்தில் வேலைக்கும் சேர்ந்தனர். வழக்கமாக ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து மாலையில் அவரவர் வீட்டுக்கு வந்தவுடன் மனைவி தருகின்ற காப்பியை குடிப்பது வழக்கம். அன்று ராஜாவின் மனைவி அவனுக்கு காபி கொடுத்த பொழுது, அதில் ஒரு  எறும்பு இறந்து கிடந்தது. உடனே ராஜா மனைவியை பார்த்து உனக்கு ஒரு காப்பி கூட போட தெரியாதா? இதில் ஒரு  எறும்பு செத்து கிடைக்கிறது. இதை உனக்கு கவனிக்கத் தெரியாதா? என்று கத்தத் துவங்கினான். உடனே மனைவியும் பதிலுக்கு கத்த அங்கே மிகப் பெரிய சண்டை நடந்தது.

      அது போலவே ரவி தன் மனைவியிடமிருந்து காப்பியை பெற்றுக் கொண்டவுடன் கவனித்தான், அவனது காப்பியிலும் ஒரு எறும்பு  இறந்து கிடந்தது. உடனே ரவி தன் மனைவியைப் பார்த்து சொன்னான். நான் தான் உனது காப்பிக்கு மிகப்பெரிய ரசிகன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு முன்பாகவே ஒரு ரசிகன் உனது காப்பிக்கு மயங்கி தனது உயிரை விட்டான். இதோ பார் என்று கூறி காப்பியை காண்பித்தான். மனைவியும் சிரித்துக்கொண்டே அந்த எறும்பை எடுத்து வெளியே போட்டாள். அன்று முதல் என்றுமே அவளது காப்பியில் எறும்பு ஏதும் சாகவில்லை.

       இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றுதான். இருவரும் தங்கள் மனைவியிடம் சொல்ல வந்த கருத்து எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இருவரும் சொன்ன விதம்தான் வேறு. ராஜா பயன்படுத்திய வார்த்தைகளால் குடும்பத்தில் பிளவு உண்டானது. ரவி பயன்படுத்திய வார்த்தைகளால் மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறியது. வார்த்தைகளுக்கு வலிமை மிகவும் அதிகம். நமது வார்த்தைகளை குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். 

     ஆண்டவர் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது பலவித வார்த்தைகளைப் பேசினார். அவரது வார்த்தைகள் ஆறுதல் அற்றவர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தந்தன.      இன்றைய முதல் வாசகத்தில் கூட வயது முதிர்ந்த நிலையில் குழந்தையின்றி தவித்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும், கடவுளின் வார்த்தைகள் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது.       

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பலர், தங்களுக்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும், ஆண்டவர் இயேசுவிடம் உதவி வேண்டி வந்த போது, தன் வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதலைத் தந்தவர் இயேசு. இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலைத் தந்த போதும், இயேசுவும் அடுத்தவரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தார் என்பதே உண்மை. நூற்றுவர் தலைவன், இயேசுவிடம் என் மகனை குணமாக்கும் என்று கேட்ட  போது, நான் உனது வீட்டிற்கு வருகிறேன்" என்றார் இயேசு. ஆனால் நூற்றுவர் தலைவன் சொன்னான், நான் பணியாளனை வா என்றால் வருகிறான், போ என்றால் போகிறான். நீர் இங்கிருந்து ஒரு வார்த்தை சொல்லும். என் மகன் குணம் அடைவான் என்றார். அவரது நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கேட்ட போது ஆண்டவர் இயேசு உள்ளம் பூரிப்படைந்தவராய், இஸ்ரயேலில் உன்னை போன்ற நம்பிக்கை நிறைந்த ஒருவரை நான் கண்டதில்லை என்று அவனை பாராட்டியதோடு, அவனது நம்பிக்கையின் பொருட்டு தன் வார்த்தைகளால் அவனது தேவையை நிறைவு செய்கின்றார் இயேசு கிறிஸ்து.

     ஆண்டவரின் வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.  வல்லமை நிறைந்தவை. நமது வார்த்தைகளும் பல நேரங்களில் வலிமையானதாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த வார்த்தைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சிந்திப்போம். நூற்றுவத் தலைவன் மற்றும் இயேசுவின் வார்த்தைகளைப் போல நமது வார்த்தைகள் இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...