போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மனித மனம் எப்போதும் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகிறது. சேர்த்துக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் துடிக்கின்ற மனம், அதை பகிர்ந்து கொள்ளவோ மறுக்கின்றது. ஆனால் இன்றைய நாளில் இறைவன் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழ அழைப்பு தருகின்றார். சேர்த்து வைப்பதால் எதுவும் நடப்பதல்ல. சேர்த்து வைக்கும்போது நாம் நம்மிடம் அதிகமாக பொருள்கள் இருக்கின்றன என எண்ணலாம். ஆனால், அதில் பயன் இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன தேவை என்பதை இறைவன் அறிந்திருக்கிறார். எனவே ஒவ்வொருவரும் அன்றன்றைய நாளுக்கு உரியதை பெற்றுக்கொண்டு வாழ அழைப்பு தருகிறார். நம் தேவைக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றை அவருக்கு கிடைக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பதை பகிர்வதை விட இருப்பதை பதுக்குவதில் தான் இன்று பல உள்ளங்கள் நாட்டம் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அன்றன்றைய நாளுக்கு அன்றைய கவலை போதும் என்கிறார்.
நமது எதிர்காலத்தை முன்னிறுத்தி பலரின் எதிர்காலத்தை சாகடிப்பதை தடுத்திட இறைவன் விரும்புகிறார். எனவேதான் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாம் கேட்பதற்கு முன்பாகவே அறிந்த இறைவன் அதை நமக்கு தருகிறார். அதைக்கொண்டு நிறைவோடு வாழ இந்த சமூகத்தில் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். அவ்வாறு வாழாது அடுத்தவருக்கு உரியதையும் பதுக்கி கொண்டு, நாம் வாழும் போது மற்றவர் அங்கு வாழ்வை இழக்கின்றார். அடுத்தவர் வாழ்வை இழப்பதற்கு நாம் காரணமாக அமைவது, தூய ஆவியின் செயல்பாடாக இருத்தலாகாது. தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்து நன்மை தீமையை வெளிப்படுத்துகிறார். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலையும் வரங்களையும் கனிகளையும் தந்துள்ளார்.
இந்தத் தூய ஆவியானவர் உள்ளிருந்து உணர்த்திக் கொண்டு இருக்கக்கூடிய நல்லவைகளுக்கு செவிகொடுக்காது நாம், அடுத்தவருக்கு உரியத்தையும் பதுக்கிக் கொண்டு நமது எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அடுத்தவரின் எதிர்காலத்தை புதைக்கக் கூடியவராக இருப்போமாயின், தூய ஆவியின் துணையோடு அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுபவர்கள் நாம் எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை.
தூய ஆவியின் செயல்பாடு அன்றன்றைய நாளுக்குரியதை நாம் பெற்றுக் கொண்டு, இன்பத்தோடு வாழ வழிகாட்டக் கூடியதாகும். இவ்வாறு வாழவே இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவனும் அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், பதுக்கும் மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, பகிரும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை உணர்ந்தவர்களாய், இருப்பதில் நிறைவு காண இறையருளை வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம்.
Super! உண்மைதான். பகிர்ந்து உண்டால் பசியாறும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அனைவரும் வாழ்வுபெற தனது கருத்துக்கள் வழியாக தோழமையோடும் அன்போடும் பாசத்தோடும் நமக்கு உற்சாகமூட்டும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு