புதன், 2 ஜூன், 2021

எதை விட்டு விட்டு எதை செய்வது?... (3.6.2021)

எதை விட்டு விட்டு எதை செய்வது?... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
மனிதனாக மண்ணில் பிறந்தவன், தன் பிறப்புக்கான காரணம் என்ன? என ஆராய்ந்து பார்த்தால், அடுத்தவரை அன்பு செய்வது என்ற பதில் சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன். ஒருவர் மற்றவரை அன்பு செய்ய இன்று இந்த உலகத்தில் பலவிதமான உறவுகள் உண்டு.  
சொந்தம் என்ற பெயரில் நாம் பலரை அன்பு செய்யலாம்.  
நண்பர்கள் என்ற பெயரில் பலரை அன்பு செய்யலாம்.  
காதல் என்ற பெயரில் நாம் பலரை அன்பு செய்யலாம்.  
கணவன் மனைவி என்ற பெயரில் ஒருவர் ஒருவரை அன்பு செய்யலாம். 
பெற்றோர் பிள்ளைகள் என்ற உறவில் ஒருவரை ஒருவர் அன்பு செய்யலாம். 

இப்படி பல வழிகளில் நாம் செய்கின்ற அன்புக்கு பெயர்கள் வைத்திருக்கிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே அன்பு செய்து வாழவே அழைக்கப்படுகிறோம். 

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் என்பதற்கு ஏற்ப அன்பால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். மிகப்பெரிய கொடூரனாக இருந்தாலும், அவனை அன்பு கொண்டு அரவணைக்க முடியும் என்று கூறுவார்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு இதயங்கள் அன்பால் இணைகின்றன, தோபியாவும் சாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வாழ்வில் பலவிதமான இன்னல்களை சந்தித்து இருந்தாலும், அவர்கள் தங்களது இல்லற வாழ்வை துவங்கும் முன்பு இறைவனிடத்தில் மன்றாடி நாங்கள் இன்று போல் முதுமை வரை இன்புற்று வாழவேண்டும் என்ற ஜெபத்தோடு தங்கள் இல்லற வாழ்வை துவங்குகிறார்கள்.  

அன்பின் உச்சகட்டம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் திருமணம் என்று சிலர் கூறுவது உண்டு. யாரென்றே தெரியாத ஒருவரை மணந்து கொண்டு, தன்னுடைய விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஓரம் தள்ளி ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டு,  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக் கூடிய குடும்ப வாழ்வு என்பது  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகத்தின், உறவின், அன்பின் வெளிப்பாடு என கூறலாம்.  இத்தகைய திருமண உறவில் நாம் ஒருவரை ஒருவர் விருப்பு வெறுப்புகளை புறம்தள்ளி அன்புசெய்து வாழ அழைக்கப்படுகிறோம்.  ஆனால் இன்று பல நேரங்களில் பலரிடம் சொல்லி நடக்கக்கூடிய திருமணம் யாரிடமும் சொல்லாமல் விவாகரத்தில் முடிந்து கொண்டிருக்கின்ற அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ஒரு முறை விவாகரத்தான தம்பதியரிடம் சென்று நண்பர்கள் எல்லாம் கேட்டார்களாம், உங்கள் இருவரின் திருமணத்திற்கு நாங்கள் வந்தோம். அப்போது எங்களிடம் சொல்லி திருமணம் செய்த நீங்கள், ஏன் எங்களிடம் சொல்லாமல் விவாகரத்து பெற்றீர்கள்? என்று கேட்டுவிட்டு, நீங்கள் இணைந்து இருப்பதற்காகத்தான் பரிசுப் பொருட்களை வழங்கினோம். நாங்கள் கொடுத்த பரிசுகளை எங்களுக்கு திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார்களாம். இன்று திருமணம் என்ற புனித உறவை துவங்கும்போது பலரிடம் சொல்லி தொடங்குகின்ற நாம், உறவில் ஏற்படுகின்ற சிக்கல்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள மறுக்கின்றோம். இன்பத்தை பகிருகின்ற நாம், துன்பத்தை பகிர மறுக்கின்றோம். எனவேதான் யாருக்கும் தெரியாமல் விவாகரத்துக்கு செல்லக்கூடிய குடும்பங்கள் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  ஏன் இத்தகைய நிலை என்று சிந்திக்கும் பொழுது குடும்பத்தில் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறைந்து போய், ஒருவர் மற்றவரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உதயமாகி விட்டது. 

ஒருவர் அடுத்தவரை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார், அதன் வெளிப்பாடுதான் பல குடும்பங்கள் விரிசல் அடைவதற்கும், பல உறவுகள் விரிசல் அடைவதற்கும் காரணமாக இருக்கின்றன.  
நாம் யாரை பயன்படுத்துகிறோம்? அன்பு என்ற பெயரால் நாம் அடுத்தவரை பயன்படுத்துகிறோமா? அல்லது உண்மையாகவே அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நம் உள்ளத்தில் எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இயேசுவினிடத்தில் முதன்மையான கட்டளை  எது என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் ஒருவர் மற்றவரை அன்பு செய்வது என்றார்.  அதுதான் இறைவனை அன்பு செய்வதற்கு இணையான கட்டளை என்றும் கூறினார். 

நாம் கண்ணுக்கு தெரிகின்ற ஒரு மனிதரை அன்பு செய்ய வேண்டும்.  நமது தேவைக்கு அவர்களை பயன்படுத்தவர்களாகவோ,  நமது சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அவரோடு உறவு கொள்பவர்களாகவோ  நாம் இல்லாது, உண்மையான அன்போடு நாம்  அவரோடு இணைந்து சமூகத்தில் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.  அவ்வாறு பயணிக்கும் போது நாம் இறைவனை என்றும் அன்புச் செய்யக்கூடியவர்களாக மாறுகிறோம். மனிதனாக பிறந்ததன் நோக்கம் அடுத்தவரை அன்பு செய்வதே. அடுத்தவரை அன்பு செய்வது தான் இறைவனை அன்பு செய்தல் ஆகும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும் அந்த அன்பில் நிலைத்திருக்கவும், இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்!  
எப்படி தோபியாவும் சாராவும் முதுமை அடையும் வரை இணைந்திருக்க வேண்டும் என விரும்பி இறைவனிடம் மன்றாடினார்களோ அவர்களைப் போல,  நாம் அன்பு செய்கின்ற உள்ளங்களோடு,  நமது இறுதி நாட்கள் வரை  இணைந்திருக்க இறை அருளை வேண்டுவோம்!  அதற்கு நாம் முழுமையாக அவர்களை அன்பு செய்வோம். பயன்படுத்துவதை விட்டுவிட்டு அன்பு செய்வதையே அடிப்படையாகக் கொண்டு பயணிப்போம். வாழ்வு அர்த்தமுள்ளதாகவும், இனிமையானதாகவும் அமையும். அவ்வாழ்வால் நாம் இறைவனை அன்பு செய்வோம், இறைவனோடு இணைந்திருப்போம் என்ற நம்பிக்கையோடு இன்றைய நாளை துவங்க தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...