செவ்வாய், 22 ஜூன், 2021

உண்மை பணியாளர்களாக மாறிட... (23.6.2021)

 உண்மை பணியாளர்களாக மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



       இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமது சொல்லையும் செயலையும் சீர்தூக்கி பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றார். இன்று நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பலர் பலவற்றை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது எல்லாம் வாழ்வில் செயலாக்கப்படுத்தப் படுகிறதா? என்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது, அதை நீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாக உள்ளது.     

             ஒருமுறை ஒரு  மேடையில் ஒருவன் தர்மம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தான். உங்களிடம் இருப்பதில் பகிர்ந்து கொடுங்கள் என்றான். சற்று நேரம் கழித்து உங்களிடம் இருப்பதையே கொடுத்துவிடுங்கள் என்று கூறினான். மிகவும் அருமையாக பகிர்தலை பற்றி உரையாற்றிய அவனது உரையைக் கேட்டு, பலரும் வியந்து போனார்கள். உரையாற்றியவன் உரையாற்றிய பின்பு வெளியே வந்தான். அவனிடம் ஒரு பெண்மணி, ஐயா, பசிக்கிறது! என்றாள். உனக்கு கை கால் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான்.

         பகிர்தலை பற்றிப் பேசிய மனிதனால், இருப்பதில் பகிரவும், இருப்பதை பகிரவும், மனம் இல்லாதவனாக, கடந்து சென்றான். இதுதான் இன்றைய எதார்த்த நிலை. பல நேரங்களில் பல அறிவுரைகளை நாம் வழங்குகிறோம். ஆனால் நாம் அவைகளை பின்பற்றுகிறோமா என கேள்விகளை எழுப்பும்போது தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் நமது வார்த்தைகளும் பல நேரங்களில் இருக்கின்றன. 

      ஆனால் இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து போலி இறைவாக்கினர்களைக் குறித்து பேசுகின்றார். போலி இறைவாக்கினர் என்பவர்கள் சொல்வார்கள் ஆனால் செயலில் காட்ட மாட்டார்கள். அவர்கள் செய்கின்ற செயல்களைக் கொண்டே அவர்கள் உண்மையான இறைவாக்கினர்களா? அல்லது போலியான இறைவாக்கினர்களா? என்பதைக் கண்டுகொள்ள முடியும் என இயேசு கற்பிக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரத்தை உவமையாக இயேசு பயன்படுத்துகிறார். ஒரு மரத்தின் கனியை கொண்டு அந்த மரத்தின் தன்மை அறியப்படுகிறது.

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் மரத்தின் கனி கொண்டு மரத்தின் தன்மை அறியப்படுவது போல, நமது செயல் கொண்டே நமது வார்த்தையின் உண்மை தன்மை அறியப்படுகிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நல்லதைச் சொல்வோம். நல்லதைச் சொல்வதோடு நிறுத்திவிடாமல் சொல்வதை செயலாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும்பொழுது ஆண்டவர் இயேசுவின் உண்மையான இறைவாக்கினர்களாக இந்த உலகத்தில் நாம் விளங்க முடியும். நமது செயல்களால் நமது சொல்லுக்கு வடிவம் கொடுத்து, நாம் இயேசுவின் உண்மை பணியாளர்களாக மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம்.



1 கருத்து:

  1. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி, என்று பழமொழிகள் கூறுவார்கள். அடுத்தவருக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம் என்று இல்லாமல் சொல்வதை செயல்படுத்தும் நேர்மையாளர்களாக வாழ அழைக்கும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...