சனி, 12 ஜூன், 2021

வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்.... (13.6.2021)

 வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்....

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


    ஒருமுறை ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டார். அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து நின்று சார் ஒரு அறை விட்டு மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். உடனே ஆசிரியர் அவனை பார்த்து இந்த ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கையா? என்று கேட்டார். உடனே அந்த மாணவன் இல்லை சார் கருவறையிலிருந்து கல்லறை செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். அடுத்தபடியாக ஒரு மாணவி எழுந்து நின்று நம்பிக்கை தான் வாழ்க்கை என்று கூறினாள். மற்றொரு மாணவன் எழுந்து நின்று பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் வாழ்க்கை என்று கூறினான். இவ்வாறு வாழ்க்கையை பற்றி பலர் பலவிதமான புரிதல்களை கொண்டிருந்தாலும் வாழ்க்கை வாழுவதற்க்காகவே…. ஆனால் நாம் யாருக்காக வாழ்கிறோம் நமக்காக வாழ்கிறோமா? அல்லது மற்றவருக்காக வாழ்கிறோமா? நம் வாழ்வின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பொதுவாக வாழ்க்கையை பத்து பத்தாக பிரிப்பர்….

10 வயதில் குழந்தை 

20 வயதில் இளைஞன்

30 வயதில் முறுக்கு

40 வயதில் பொறுப்பு

50 வயதில் ஆசை

60 வயதில் ஓய்வு

70 வயதில் ஏக்கம்

80 வயதில் எதிர்ப்பார்ப்பு

90 வயதில் நடுக்கம் 

100 வயதில் அடக்கம்

ஏன்பார்கள் ஆனால் இன்று 60 தொடுவதே அபுற்வமாக பார்க்கப்படுகிறது. வாழும் வரை நாம் இவ்வுலகில் எப்படி வாழ்கிறோம்? 

           இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக காண்பித்து சென்றார். இன்றைய நாள் வாசகங்களில் விதையையும் அந்த விதையிலிருந்து உருவாகக்கூடிய மரத்தையும் உவமையாகக் கொண்டு  வாழ்க்கை  பாடம் கற்பிக்கிறார்கள். மரம் என்பது பலன் தருவதற்காக. அது நிழலாக இருக்கலாம், அல்லது கனியாக இருக்கலாம், அல்லது அதிலிருந்து கிடைக்கும் மருந்து பொருளாக இருக்கலாம், அல்லது அது காய்ந்தபின் எரிப்பதற்கு பயன்படும் விறகாக இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அந்த மரமானது தான் வளர்க்கப்பட்டதின் நோக்கத்தை நிறைவு செய்கிறது.அதுபோலவே மரத்தை விட மகத்துவமான மனிதனும் தான் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.ஆனால் அதை கண்டுகொள்ள முயலாமல் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என  வாழ்ந்து கொண்டு இருப்போமானால் அது அர்த்தமற்ற வாழ்வாகும். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “உயர்ந்த கேதுரு மரத்தின் கிளை ஒன்றை எடுத்து வந்து நானே அதை நடுவேன் என்கிறார். அது தளைத்து கனி தந்து சிறந்த கேதுரு மரமாகத் திகழும்” என்கிறார். 

    நம்மையும் இம்மண்ணில் இறைவன் படைத்திருக்கிறார் என்றால் நாம் மகத்துவமான தலை சிறந்த மனிதர்களாக விளங்க வேண்டும்.  குழந்தை ஒன்று இவ்வுலகத்தில்  பிறக்கிறது என்றால், அது கடவுள் இந்த உலகத்தை மீண்டும் மீண்டும் அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறுவார்கள். நெடுங்காலமாகவே இந்த உலகத்தில் தொடரக்;கூடியது எது? எனக் கேட்டால் பிறப்பும் இறப்பும் தான் என்பார்கள்.  இது நெடுங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தொடரக் கூடியது தான்.  பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இறப்புக்கு முன்பாக நாம் எதை செய்தோம்? எதை இந்த சமூகத்தில் விட்டுச் செல்கிறோம்? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க வேண்டும். நட்டு வைக்கக் கூடிய மரமானது தனது பணியை செய்கிறது என்றால், மரத்தை விட மேன்மை வாய்ந்த மனிதர்களாகிய நாம், நமது படைப்பின் நோக்கத்தை கண்டுக்கொண்டு அதை இவ்வுலகத்தில் செய்தாக வேண்டும் என்பது இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகின்ற அழைப்பாக இருக்கின்றது.  விதை மண்ணில் விழுந்து மடிந்தால் தான் அது கனி தரமுடியும் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுகிறது. 

    ஒரு சிறிய கடுகு  விதையானது மண்ணில் விழுந்து மடிந்து முளைத்து மிகப்பெரிய விருச்சமாக வளரும். அதிலிருந்து பல பறவைகள் வந்து பயனடைகின்றன என்ற ஒர் உருவகத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். ஒரு சிறிய கடுகு விதை ஒரு பெரிய விருட்சமாக மாறி பல உயிரினங்களுக்கு வாழ்வு தருகிறது என்றால், படைப்பின் சிகரமான  மனிதர்களாகிய  நம்மால் பலன் தர முடியாதா? என்ன? நமது சொல்லிலும் செயலிலும்; நாம் பிறந்ததன் நோக்கம் என்ன? என்பதை ஆராய தொடங்குவோம்.  நமது வாழ்வில் நாம் இறப்பதற்குள்ளாக ஏதேனும் ஒன்றை இச்சமூகத்துக்கு விட்டுச்செல்ல முயற்சிகளில் ஈடுபடுவோம்.



        அப்துல் கலாம் அவர்கள் கூறுவார், "வாழ்வது ஒரு முறை! வாழ்த்தட்டும் தலைமுறை" என்று. அந்த வார்த்தைகளை சற்று மாற்றிக் "வாழ்வது ஒருமுறை! வாழவைப்போம் ஒரு தலைமுறையையாவது"  என்று நமது சொல்லிலும் செயலிலும் இயேசுவைப் போல பிறர் நலனை முன்னிறுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். மனிதனாக இம்மண்ணில் நாம் மலர்ந்ததன் பலனை இம்மண்ணில் விதைத்திட முயல்வோம்.

              இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை பார்த்து வளரக்கூடிய குழந்தைகளுக்கும், நமது அருகாமையில் உள்ளவர்களுக்கும், அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்யவும், அவர்கள் நலமான வாழ்வை அடையவும் நாம் வழிகாட்டக் கூடியவர்களாக மாறுவோம். வழிகாட்டுதல் என்றால், அறிவுரை கூறுவது என்று அர்த்தம் அல்ல. மாறாக நமது வாழ்வைக் கண்டு அவர்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள முயல வேண்டும் என்பதே அர்த்தமாகும்.

           இன்று உலகில் பலருக்கு சொல்பவர்களை விட செய்து காட்டுபவர்கள் தான் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படி இரு! அப்படி இரு என சொல்வதைவிட, எப்படி பிறர் இருக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ அவ்வாறாக நாம் இருப்போம். விவிலியத்திலும் இறைவன் இதனை அழகாகக் கூறுவார், “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பார். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே அடுத்தவரைச் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர் நமக்கு உதவ வேண்டும்  என எண்ணுகிறோம். நமது தேவையில் நம்முடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாம் செய்கின்ற சின்னஞ்சிறு செயல்களையும் அடுத்தவர் பாராட்ட வேண்டும் என எண்ணுகிறோம். நாம் தோல்வியுறும் போதும், துன்பத்தில் வாடும் போதும், வந்து நம்மை தட்டிக்கொடுக்க வேண்டும், ஆறுதல் கூற வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் எண்ணுகின்ற எல்லாவற்றையும் நாம் அடுத்தவருக்கு செய்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்புவோம். இதுவே நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம்.  தேவையில் இருப்பவரை தேடிச்சென்று உதவுவதும், ஆறுதல் தருவதும், அன்பாக பேசுவதும், அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்டுவதும் தான் நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம். நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். இந்த சமூகத்தில் இயேசு கற்பித்த விழுமியங்களை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, அந்த  விழுமியங்களின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வது தான் நமது வாழ்வின் நோக்கம் என்பதை கண்டு கொள்வோம். மனிதர்களாகிய நாம்,  இம்மண்ணில் வாழுகின்ற காலத்தில்,  பலன் தரக் கூடியவர்களாக மாறுவோம். 

ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் என்னும் தன்னம்பிக்கை பேச்சாளரான் அடிக்கடிச் சொல்லுவார், எந்த ஒரு நாட்டில், தான் வைக்கக்கூடிய மரத்தின் கனியை தான் உண்ண இயலாது என்று தெரிந்தும் ஒருவன் மரம் வைக்கிறானோ, அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்று கூறுவார்.

 இறைவனின் படைப்பின் சிகரமாகிய மனிதர்களாகிய நாம், நமது சொல் செயல் வழியாக அடுத்தவருக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வாழுவோம். அந்த வாழ்வு  பிறருக்கு பயன் தரக் கூடிய வாழ்வாக அமைய நமது சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகிறார்.   

 இறைவன் தருக்கின்ற சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்களாக இதுவரை எப்படியோ வாழ்ந்திருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி,  இனி இருக்கின்ற நாட்களில்  அர்த்தமுள்ள வகையில் அடுத்தவருக்கான ஒரு வாழ்வை வாழ உள்ளத்தில் உறுதியேற்போம். அதற்கு இறைவன் தாமே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த வேண்டும் என இறைவனிடம் மன்றாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...