வெள்ளி, 11 ஜூன், 2021

ஏன் என்று கேள்... (12.6.2021)

ஏன் என்று கேள்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!



இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்குப் பின் வருகின்ற சனிக்கிழமை மரியாவின் மாசற்ற திருஇருதய விழாவினை நாம் சிறப்பிக்கின்றோம். மரியாவைப் பற்றி விவிலியத்தில் பல இடங்களில் நாம் பலவற்றை வாசித்திருக்கலாம். இயேசுவின் பயணத்தில் மரியாவின் பங்கு இன்றியமையாத ஒன்று. இயேசு இந்த உலகத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறார்? என்பதை எல்லாம் அறிவதற்கு முன்பாகவே அந்த இயேசுவுக்கு வயிற்றில் இடம் கொடுத்தவர். இயேசுவுக்கு வயிற்றில் இடம் கொடுத்ததன் காரணம் தனது இதயத்தில் அந்த கடவுளின் மேல் ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தாதே. கடவுளின் தூதர் மங்களச் செய்தி அறிவித்தபோது சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இன்னல்களையும் அறிந்திருந்த போதும்,  அனைத்தையும் புறம்தள்ளி ஆண்டவரின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஆம் என  பதில் கூறியவர் இந்த அன்னை மரியா. இயேசுவின் பிறப்பின் போது வியந்து போனார் அன்னை மரியா. பெற்றெடுக்கப் போவது கடவுளின் மகன் என்பதை அறிந்திருந்தாலும்,  அந்த மகன் பிறப்பதற்கு ஒரு இடம் கிடைக்காத நிலை, ஏன் என்ற கேள்வியை  உள்ளத்தில் எழுப்பி  பார்த்திருப்பார் அன்னைமரியா. மிகப்பெரிய ஞானிகள் மூவர் வந்து குழந்தையான பாலன் இயேசு முன்பு மண்டியிட்டு வணங்கிய போது என்ன நடக்கிறது? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பிப் பார்த்திருப்பார் அன்னை மரியா. குழந்தையை கோவிலில் ஒப்புக் கொடுக்க போகும் போது குழந்தையைக் கையில் ஏந்திய சிமியோன் கூறிய வார்த்தைகளான  "உன்னுடைய உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்ற வார்த்தைகளை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்திருப்பார், ஏன் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி இயேசு சென்ற இடமெல்லாம் அவரோடு பயணித்து அவர் செய்கின்றவற்றை எல்லாம் கண்டு,  அதனடிப்படையில் ஏன் என்ற கேள்விக்கான விடையைத் தேடியவரும் அன்னை மரியா.  உலகத்தை மீட்க வந்த ஒரு இறைவன்,  உலகிலுள்ள பலரின் சூழ்ச்சிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் உடைந்து போகிறார் அந்த அன்னை மரியா. இத்தகைய நிகழ்வுகளின் போதெல்லாம் அன்னை மரியாள் ஏன் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்த்தார்.  அந்த கேள்விகள் தான் அவரை ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையில் வளரத் தூண்டியது. எந்த ஒரு நிகழ்வையுமே அன்னை மரியா உள்ளத்தில் இருத்தி சந்திக்காமல் இருந்ததில்லை.

               இன்று நாம் ஒவ்வொருவருமே உள்ளத்தில் பலவற்றை இருத்தி சிந்திக்கின்றோம்.  உள்ளத்தில் இருத்தி ஒன்றை சந்திக்கும் போது இது சரி, இது தவறு என்பதை உணர்ந்து கொண்டு நல்லவற்றை  முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர்களாய் நம் சமூகத்தில் வாழ வேண்டும்.  அவ்வாறு செய்யாமல் ஏதோ நான் சிந்திக்கின்றேன் என்ற பெயரில் அனைத்தையும் கொண்டு போய் இதயத்தில் வைத்து விட்டு அதை செயலாக்கப்படுத்தாமல் இருக்கும் பொழுது அது அர்த்தமற்ற ஒன்றாக மாறுகிறது. மரியா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி பல கேள்விகளை தன் உள்ளத்தில் எழுப்பினார்;. தான் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவைகளை செயலாக்கப்படுத்தும் வகையில் அனைத்து விதமான சூழ்நிலையிலும் ஆண்டவர் இயேசுவை பின் தொடரக் கூடிய தாயாக இருந்தார். ஏன் என்னை தேடுகிறீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்ற சிறுவன் இயேசுவின் கேள்விகள் மரியாவை சிந்திக்கத் தூண்டியது.  தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது இவரது பணி என்றால் இவர் செய்கின்ற அனைத்துமே கடவுள் விரும்பக்கூடிய ஒன்று என்று எண்ணினார்.  எனவே தன் மகனை பின்பற்றினார். என்னை பின்பற்று எனக் கூறி பிள்ளைகளை வளர்க்க கூடிய பெற்றோருக்கு மத்தியில்,  தன்னுடைய மகனின் செயல்பாடுகளை பின் நின்று கவனித்தவராக பயணித்தவர்தான் இந்த அன்னை மரியா.  

 எந்தக் குழந்தையும்  நல்ல குழந்தைதான் இம்மண்ணில் பிறக்கையிலே!

அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!  

              என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில், இயேசு அடுத்தவருக்காக தன் வாழ்வை இழந்தார் என்றால் அது, மனுக்குல மீட்பிற்காக அன்னைமரியா முதலில் இயேசுவைத் தன் வயிற்றில் ஏற்றுக் கொண்ட அன்பின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாகத்தான் அதை கருத முடியும். இன்று நாம் வாழுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் நாம் நமது உள்ளத்தில் பலவற்றை இருத்தி சிந்தித்தாலும்,  தூய ஆவியாரின் துணையோடு சரியானது எது என்பதை கண்டு கொண்டு மரியாவைப் போல அதனைச் செயலாக்கப்படுத்த கூடிய நல்ல மனிதர்களாக உருவாக இன்றைய நாளில் இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...