சனி, 5 ஜூன், 2021

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (6.6.2021)

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்று நாம் தாய் திருஅவையாக இணைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளிலே உங்கள் அனைவருக்கும் இவ்விழா வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உணவாக வந்தார். 
ஏன் இவர் உணவாக வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி பார்க்கும்பொழுது மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அது குழந்தையாக இருந்தாலும் சரி,குமரன் குமரியாக இருந்தாலும் சரி அல்லது கூன் விழுந்த  கிழவன் கிழவியாக இருந்தாலும் சரி.  அனைவருக்கும் உணவு இன்றியமையாத ஒன்று. இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து  நம் வயிற்றுக்கான உணவு அல்ல. மாறாக நம் வாழ்வுக்கான உணவு. ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டி தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காக தியாகம் செய்து வாழ்வுக்கான உணவாகியவர் இந்த இயேசு கிறிஸ்து.  இவரை குறித்த சிந்திக்கின்ற இந்த நாளில் இவரைப் போலவே தியாகத்தின் உருவமாக இச்சமூகத்தில் நாம் உருமாறினார் என்ற நாளில் அழைக்கப்படுகிறோம்.

பாடலிபுத்திரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் ஒரு மிகப் பெரிய அழகிய அரண்மனை.  அந்த அரண்மனையில் பலரும் கண்டு வியக்கக்கூடிய வகையில் ஒரு அழகிய பெண்மணி இருந்தாள். ஊரில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் அந்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த பெண் யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. அந்த அரண்மனை வாசலில்  ஒரு துறவி அமர்ந்து இருந்தார்.  ஒருநாள் அந்த பெண்மணி தனது மாளிகையில் இருந்து வெளியே வந்து அந்தத் துறவியைப் பார்த்து என்னோடு உணவருந்த வாருங்கள் என்றாள். அந்தத் துறவி அவளை மேலும் கீழுமாக பார்த்து விட்டு,  வரவேண்டிய நேரத்தில் வருகிறேன் என கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார். சில மாதங்கள் கழித்து அவர் ஒரு நாள் இரவு அந்த ஊருக்கு வந்தார். ஊர் முழுவதும் வெறிச்சோடி இருந்தது. எந்தவித மக்கள் கூட்டத்தையும் காணவில்லை. ஏனென்றால் அருகாமையில் இருந்த ஒரு ஊரில் திருவிழா என்பதால், ஊரில் உள்ள பலரும் அங்கு சென்றிருந்தார்கள். ஆனால் அந்த இருட்டில் அந்த   இருளுக்கு நடுவில் ஒரு முக்கலும் முனகலுமாக ஒரு சப்தம் கேட்டது. சப்தம் வந்த திசை நோக்கி நகர்ந்து சென்றார் அந்த துறவி. அந்தோ பரிதாபம்!  அங்கு உடலெல்லாம் புண்களோடு வலியோடும் வேதனையோடும் அழகிய அந்தப் பெண்மணி வீதியில் படுத்திருந்தாள். எங்கோ நடந்த ஒரு தீ விபத்தில் மாட்டிக் கொண்ட அழகிய பெண்  உடல் எல்லாம் தீ காயத்தோடு வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளின் இந்நிலை கண்டு அவளை மணக்க எண்ணிய பலரும் அருகில் வராமல் விலகியே நிற்கத் தொடங்கினர். எனவே பராமரிப்பின்றி வீதியில் வீசப்பட்டாள் அந்த பெண். அந்த பெண்ணின் அருகே சென்ற அந்த துறவி சொன்னார், வரவேண்டிய நேரத்தில் வருகிறேன் என்று கூறினேன் அல்லவா! இதோ வந்து விட்டேன் எனக் கூறி, அப்பெண்ணின் காயங்களைத் துடைத்து அவளுக்கு மருத்துவ உதவிகளை  செய்தார். ‌ 


இன்று உண்மையான உறவுகளை காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது.உண்மையான உறவு என்பது வெறும் வாய் வார்த்தைகளாக தான் இருக்கிறது. பல இடங்களில் உனக்காக நான் அனைத்தையும் இழப்பேன் என்று கூறுவார்கள். ஆனால் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது தயக்கமே மேலோங்கி காணப்படுகிறது. ஆனால் நமக்காக தன்னை இழக்க தயக்கமின்றி முன் வந்தவர்களில் ஒருவர்தான், இயேசு கிறிஸ்து. இந்த இயேசு கிறிஸ்து தனது உடலையும் இரத்தத்தையும், நமக்காக கையளித்தார். அதையே இன்றைய நாளில் நாம் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். இயேசுவைப் போன்ற தியாக உள்ளம் இன்று நம்மிடம் உருவாக வேண்டும். 

  நாம் ஆடம்பரமாகவும் செல்வச் செழிப்போடும் நோயின்றியும் இருக்கும் பொழுது நம்மை தேடி வரக்கூடிய   உறவுகள் பல நாம் இந்நிலையிலிருந்து சற்றே மாறுபட்டவர்களாய், நோயுறும்போதும்,  செல்வத்தை இழந்த நிலையில் இருக்கும் போதும் துன்பத்தில் துவளும் போதும் தள்ளி நின்று நம்மை விமர்சிக்க கூடியவர்களாக தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இது இதுதான் இன்றைய உலகின் எதார்த்தம் என்பது மறுக்கவியலாத உண்மை. இது ஏதோ இன்றைய காலகட்டத்தில் நடப்பது என்று மட்டும் நாம் எண்ணிடலாகாது. இது பல ஆண்டுகளாக நடக்கக்கூடிய ஒன்று தான். விவிலியத்திலும் இதற்குப் பல சான்றுகள் உண்டு.  யோபு என்ற மனிதரை விவிலியத்தில் வாசிக்கலாம். செல்வ செழிப்போடு இருந்த போது அவரோடு உடன் பயணித்த நண்பர்கள் பலர் இன்னலுற்ற நிலையை  அடைந்ததை எண்ணி அவரை விமர்சனம் செய்யக் கூடியவர்களாக மாறினார்கள். இத்தகைய நிகழ்வு எங்கோ நடப்பது அல்ல இன்று நம் மத்தியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மையான அன்பும் உறவும் கொண்டவர்களாய் வாழ இச்சமூகத்தில் நாம் அழைக்கப்படுகிறோம். அப்படி வாழ்ந்த ஒரு மனிதரை தான் இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல தனது உடலையும் இரத்தத்தையும் தியாகம் செய்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான நற்செயல்களை செய்து கொண்டே சென்றார் என விவிலியத்தில்   வாசிக்கலாம். இவர் ஏதோ கடமைக்கு நன்மை செய்தவர்  அல்ல. பெயரையும் புகழையும் விரும்பியவரும் அல்ல...  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அனைவரையும் தேடிச் சென்றார். துன்புறுவோரின் சார்பாக நின்றார். சட்டத்தால் நசுக்கப்படுவோரின் சார்பாக நின்றார். பாதிக்கப்படுவோரின் சார்பாக நின்றார்.  தொழுநோயாளி எனத் தொட  மறுத்து ஓரம்கட்டிய மக்களை தொட்டு குணப்படுத்தக்கூடிய பணியைச் செய்தார்.  இதையெல்லாம்  அவர் உண்மையாக ஒவ்வொருவரையும் அன்பு செய்ததால் செய்தவை.  தான் படைத்த மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்பித்து வந்தார். அந்த கற்பித்தலின் உச்ச கட்டமே  தன்னுடைய இன்னுயிரையும் நமக்காக தியாகம் செய்தார்.
எல்லா அருளும் நிறைந்த இறைவன் பல விதமான வல்ல செயல்களை செய்த இறைவனால் இந்தத் துன்பத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இயலாதவர் அல்ல இந்த இயேசு கிறிஸ்து. ஆனால் இது இறைவனது விருப்பம். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்பிக்க கடவுளின் விருப்பத்திற்கு தன்னை முழுவதும் கையளித்து சிலுவை மரணத்தை ஏற்றார். அவரது உடலையும் இரத்தத்தையும்  நமக்கு  கொடுத்ததை தான் இன்றைய நாளில் நாம் நினைவு கூறுகிறோம். 

இறுதி இராவுணவின்போது சீடர்களை அழைத்து இது எனது உடல் என அப்பத்தை தூக்கி காண்பித்தும், இது எனது இரத்தம் என ரசத்தை தூக்கி காண்பித்து எனது உடல், எனது இரத்தம் என்று அவர் கூறிய வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அன்று சீடர்கள் புரிந்து கொண்டார்களா?இல்லையா? என்பது தெரியாது. ஆனால் காலப்போக்கில் கிறிஸ்துவின் இறப்பு அவர்களுக்கு அதை உணர்த்தியது. ஏதோ உணவை பகிர்வதை இறைவன் அன்று கூறவில்லை.மாறாக நமது உடல் பொருள் ஆவியை அடுத்தவரிடம் பகிர வேண்டும் என்ற செய்தியை இறைவன் தங்களுக்குக் கற்பித்தார் என்று இராவுணவு செய்திகளை இயேசுவின் சிலுவை அடியில் அன்று உணர்ந்து கொண்டார்கள் இயேசுவின் சீடர்கள்.  எனவே தங்களது சொல்லிலும் செயலிலும் தாங்கள் பின்பற்றுகின்ற இயேசுவைப் போலவே அடுத்தவருக்காக இன்னுயிரையும் தியாகம் செய்யக் கூடியவர்களாக மாறினார்கள். 
 இன்று நிலவும் இந்த கோரோனா தொற்றுநோய் காரணமாக சொந்த வீட்டு நபர்களை கூட அன்னியப்படுத்தி பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் ஊர் பெயர் தெரியாத, முகம் தெரியாத, முகவரி தெரியாத பலருக்கு பல செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள் என பலர் நம்பிக்கை தரும் வகையில் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு முன் வந்து, பல பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்,   இத்தகைய பணியாளர்களை போல நாமும் நமது உடல் பொருள் ஆவியை அடுத்தவருக்கு என அர்ப்பணிக்க அழைக்கப்படுகிறோம்.

 பாதுகாப்போடு நாம்  நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டவர்களாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலம் தரக்கூடிய நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். நமக்காக தன் உடலையும் இரத்தத்தையும் தியாகம் செய்த இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய நமது வாழ்வில்,  அந்த இயேசுவின் தியாகமானது பிரதிபலிக்கப்பட வேண்டும். அது பிரதிபலிக்கும் போது மட்டுமே நாம் அந்த இயேசுவைப் பின்பற்றும் உண்மை சீடர்களாக இருக்க முடியும். எனவே இன்றைய நாளில் உடலையும் இரத்தத்தையும் பகிர்ந்த இயேசுவைப் பின்பற்றும் நாம் இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தனது உடல் பொருள் ஆவியை பொருட்படுத்தாது, அடுத்தவரின் நலன் காக்கும் நல்ல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கூடிய செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். அவர்களின் நலனுக்காக இறைவனிடத்தில் வேண்டுவோம். அவர்களைப் போல நாமும்  அடுத்தவருக்கான நலமான பணிகளை முன்னெடுக்க இறை அருளை இன்றைய நாளில் இறைஞ்சி வேண்டுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உடலையும் இரத்தத்தையும் நமக்கு தந்ததன் நோக்கம் அவரைப்போல நாமும் இச்சமூகத்தில் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே. வெளிப்பட வேண்டியவர்கள் நாம் வெறும் வார்த்தைகளால் அடுத்தவரை  கவரக்கூடியவர்களாக நாம் இல்லாது, நமது சொல்லாலும் செயலாலும் அந்த வார்த்தைகளின் உண்மை அர்த்தமாகிட வேண்டும் என்பதை மனதில் இருத்துவோம்.

இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருந்தாலும், நம்மால் இன்று அவரது திரு உடலையும் இரத்தத்தையும் பெறமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது ஒரு விதத்தில் மனம் வேதனை அடைந்தாலும், விரைவில் இந்த இன்னல் நீங்கி நாம் ஆண்டவர் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறக் கூடியவர்களாக மாறுவோம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எனவே நம்பிக்கையோடு, நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலை விரைவில் மாறும் என எதிர்கொள்வோம். இறைவன் தாமே இந்நிலையில் இருந்து நம்மை விடுவித்து, அவரது உடலாலும் இரத்தத்தாலும் நமது உள்ளங்களை புதுப்பிக்க  நம்மிடம் வருவார் என்ற நம்பிக்கையோடு இன்றைய நாளில் நமது செயல்கள் மூலமாக அவரை போல தியாகங்கள் பல புரிந்து இச்சமூகத்தில் அவரின் உண்மை சீடர்கள் நாம் என்பதை நிலைநாட்ட முயலுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...