வியாழன், 24 ஜூன், 2021

நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க... (25.6.2021)

 

நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



          கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது கடவுள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அந்த கடவுளால் முடியாதது என்பது இந்த உலகில் எதுவும் இல்லை, என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் தான், இன்றைய முதல் வாசகத்தில் முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் குழந்தைப் பேறு நிச்சயம் என்ற வாக்குறுதியை இறைவன் தருகிறார். இறைவன் கொடுத்த வாக்குறுதியை ஆழமான நம்பிக்கையோடு, தங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து பயணித்ததன் அடிப்படையில், ஆண்டவரின் வார்த்தைகள் அவர்களின் வாழ்வில் செயலாக்கப்படுகிறது. அவர்களுக்கு இஸ்மாயேல் என்ற குழந்தையானது பிறக்கிறது. கடவுளால் ஆகாதது எதுவுமில்லை. கடவுளால் எதையும் செய்ய இயலும். அதற்கு நமக்கு ஆழமான நம்பிக்கை அவசியமாகிறது. 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசுவால் என்னை குணப்படுத்த முடியும் என்று நம்பியதன் அடிப்படையில் ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து, நீர் விரும்பினால் என்னை குணப்படுத்தும் என்கிறார். அவரது நம்பிக்கையை கண்டு இயேசுவும் நான் விரும்புகிறேன் எனக்கூறி, அவரை குணமாக்குகிறார். இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், எந்த ஒரு செயலையும் நாம் செய்வதற்கு முன்பாக, இதையெல்லாம் நம்மால் செய்ய இயலாது என்ற எண்ணத்தோடு நாம் பயணிப்போம் என்றால், கண்டிப்பாக நம்மால் அச்செயலில் வெற்றியை ஈட்ட முடியாது. 

இந்த உலகத்தில் நம்மால் முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதை எங்கு யாரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். யாரோ ஒருவர் செய்து கொண்டிருப்பதை ஏன் என்னால் செய்ய முடியாது? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்புங்கள் என்ற அப்துல் கலாம் அவர்களுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் முடியாது என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். நாம் நம்பிக்கையோடு பயணிக்கும் பொழுது கடவுள் நமது நம்பிக்கையின் பொருட்டு நமது உள்ளத்து எண்ணங்களை அறிந்தவராய், அதனை அடைவதற்கான வழியில் நம்மை அழைத்துச் செல்வார். அந்த ஆண்டவரால் அனைத்தையும் இவ்வுலகத்தில் செய்ய முடியும். அதற்கு நமது நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகும். 

இன்றைய நாளில் நம்பிக்கையோடு நமது வாழ்வை நகர்த்தவும் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். நமது உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம்பிக்கையை காணுகின்ற இறைவன், நமது நம்பிக்கையின் அடிப்படையில் நம்மை வாழ்க்கை பாதையில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார். ஆண்டவர் இயேசு அழைத்துச் செல்லக்கூடிய பாதையில்  நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க, இறையருளை இணைந்து வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...