திங்கள், 28 ஜூன், 2021

அனைவரும் சமம்...(29.6.2021)

அனைவரும் சமம்...(29.6.2021)

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!
 இன்று நாம்தாய்த்திரு அவையாக இணைந்து புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் திருநாளை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே யாராவது ஒரு நபரை முன்னிறுத்தி, விழாவினை எடுத்து அவர்களை நினைவு கூருவது வழக்கம். ஆனால் இன்று நாம் இருவரை ஒரே நாளில் நினைவு கூருகிறோம். ஏன்? என்று கேள்வி எழுப்பும் போது, திருஅவையில் இருவரும் முடியாத நபர்கள் என்பதுதான் முற்றிலும் உண்மை. ஒருபுறம் புனித பேதுரு, இன்னொருபுறம் புனித பவுல்.  பேதுரு இயேசுவின் சீடர். பவுல் இயேசுவின் சீடர் அல்ல, இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு இயேசுவின் சீடராக மாறியவர். இயேசுவுடன் பேதுரு உடன் பயணித்தவர். பவுல் இயேசுவுடன் பயணிக்கவில்லை. இயேசுவின் குரலோசையை கேட்டு தன் வாழ்வை மாற்றியவர். படிக்காத மேதை தான் பேதுரு. படித்த மேதை தான் பவுல்.  ஆட்சி அதிகாரங்களை பற்றி அறிந்தவர் பவுல். அதையெல்லாம் பற்றி அறியாத சாதாரண மீனவர் பேதுரு. கமாலியேலிடம் கல்வி கற்றவர் பவுல். எந்த கல்வியும் கற்காதவர் பேதுரு. பேதுரு திருமணமான ஒருவர். பவுல் திருமணம் ஆகாதவர். திரு அவையின் தலைவராக இயேசுவால் நியமிக்கப்பட்டவர் பேதுரு. பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பாளராக மாறியவர் புனித பவுல். 

      இவர்கள் இருவருக்கும் இடையே பல விதமான வேறுபாடுகள் இருக்கலாம். ஒருவர் அறிவில் சிறந்தவர் ஒருவர் அறிவில் குறைந்தவர், என்று நாம் எண்ணலாம். ஆனால் இருவரிடத்திலும் இருந்த ஒற்றுமை, இயேசு என்ற ஒற்றை மனிதர். இந்த இயேசு என்ற ஒற்றை மனிதரைப் பிடித்துக் கொண்டுதான் படித்தவரும் படிக்காதவரும் முன்னோக்கிச் சென்றார்கள். இந்த இருவரையும் ஆண்டவர் தம் பணிக்கு அழைத்தார். தம் பணிக்காக அவர்களை தயார்படுத்தினார். அவர்கள் வழியாக இச்சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை விதைத்தார். கடவுளின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை தான், இவர்களின் திருநாளானது நமக்கு உணர்த்துகிறது. நான் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன். நான் படித்தவன், அவன் படிக்காதவன். நான் செல்வன் அவன் ஏழை என பலவித பாகுபாடுகளுக்கு மத்தியில் பயணிக்கின்ற இந்த உலகத்தில், எல்லாவற்றையும் கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையில் தான் அனைவரும் ஒன்றித்து, இணைந்து வாழவேண்டும் என்ற செய்தியினை,  இவர்கள் வழியாக இறைவன் இச்சமூகத்தில் வெளிப்படுத்துகிறார். இவர்கள் இருவரையும் தன் பணிக்கென அழைத்துக்கொண்டார். இருவருக்கும் திருஅவை உரிய மரியாதையைக் கொடுத்தது. இருவரையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக திருஅவை இவர்களை வைத்திருக்கிறது. எனவே தான் படித்த மேதையையும் படிக்காத மேதையையும் பிரித்துப் பார்த்திட முடியாது என்ற அடிப்படையில், இருவரையும் ஒரே நாளில் திருஅவை நினைவு கூருகிறது. இவர்களை நினைவு கூருகின்ற நாம் இவர்களிடமிருந்து நமது வாழ்வுக்கான பாடம் என்ன? என்பதை கண்டுகொள்ள வேண்டும். 
          சமூகத்தில் மற்றவரை விட நாம் உயர்ந்தவர் எனக் கருதினாலும், மற்றவரை விட தாழ்ந்தவர் எனக் கருதினாலும், கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள். நாம் அனைவரும் அவரது பிள்ளைகள். அவரால் படைக்கப்பட்டவர்கள். நமக்கென பல தனித்தன்மைகள் உண்டு. நமது தனித்தன்மைகளை நாம் ஏற்றுக்கொண்டு, அத்தகைய தனித்தன்மைகளின் வழியாக ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை பவுலையும் பேதுருவையும் போல, இந்தச் சமூகத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

1 கருத்து:

  1. ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் மதித்து ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்ள, அனைவரையும் உயர்வாக கருத, இன்றைய நாள் கருத்துக்களில் மிக அருமையாக கூறப்பட்டுள்ளது திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் செபங்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...