வியாழன், 1 ஜூலை, 2021

பின்பற்றி வர விருப்பமா? (2.7.2021)

பின்பற்றி வர விருப்பமா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய நாளில்  வாசிக்கப்பட்ட வாசகத்தில் மத்தேயுவை இயேசு தன்னை பின்பற்றி வருமாறு அழைக்கின்றார். இன்று நம்மில் பலர் ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறோம் என்ற பெயரில், அவரை முன்னிறுத்தி, ஆனால் நாம் விரும்பும் வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம்.  நாம் அவரை முழு மனதோடு பின்பற்றுகிறோமா? என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, நாம் பயணிக்கின்ற பாதையை சீர் தூக்கி பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.  மனிதர்களிடத்தில் பல வேறுபாடுகள் உண்டு. மனிதர்களிடத்தில் பல குறைபாடுகள் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். ஆனால் பல நேரங்களில் நமது விருப்பப்படி நடக்கக் கூடியவர்கள், நமது விருப்பப்படி செயல்படுபவர்கள் மட்டுமே நமக்கு உரியவர்கள் என்ற மனப்பான்மையோடு, அவர்களோடு மட்டுமே இணைந்து செல்லவும்,  அவர்களுடன் மட்டுமே பயணிக்கவும் நாம் ஆசைப்படுகிறோம்.  ஆனால் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அனைவரையும் அரவணைத்து கொண்டு பயணித்தார். பாவிகள், ஏழைகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டோர்,   புறம்தள்ளப்பட்டோர்,  சமூகத்தில் இவர்கள் எல்லாம் பாவிகள் என கருதப்பட்டோர் என பல விதமான மக்களையும், தன்னுடைய பணிக்கென  அழைத்தார். அவர்களை தன்னை பின்  தொடருமாறு அழைத்தார். அவர்களோடு அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.
        ஆனால் நாம் இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் நம்மை புகழுபவர்களையும், நம்மைப் பற்றி பெருமை பேசுபவர்களையும் மட்டுமே நம்மோடு வைத்துக்கொண்டு வாழ்வில் நகர்ந்திட விரும்புகிறோம்.  இன்றைய நாளில், நாம் எத்தகைய மனிதர்களோடு இந்த சமூகத்தில் பயணிக்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். நம்மை முதன்மைப்படுத்தக் கூடிய, நம்மை புகழக்கூடிய, நம்மைப் பெருமைப்படுத்தக்கூடிய நபர்களை மட்டுமே நம்மிடம் வைத்துக்கொண்டு பயணிக்கின்றோமா? அல்லது பல விதமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், அனைத்து விதமாக உணர்வுகளோடும், அனைத்து விதமான சூழல்களிலும்,  அடுத்தவரை அவர்கள் இருப்பது போலவே ஏற்றுக் கொண்டு, அவர்கள் அனைவரோடும் இணைந்து இந்த சமூகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

           இயேசுவைப் பின்பற்றக் கூடிய நாம், இயேசுவைப் போல பயணம் செய்ய வேண்டும். இயேசு எப்படி அனைவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு அவரது இறையாட்சிப் பணியை இம்மண்ணில் செயல்படுத்தினாரோ,  அதுபோல நாமும் பலவிதமான வேறுபாடுகளுக்கு மத்தியிலும், இந்த சமூகத்தில் அனைவரும் இணைந்து "இயேசுவை பின்பற்றுகிறேன்" என்ற வார்த்தையை வாழ்வாக மாற்றிக்கொண்டு, செயல்களால் நாம் அவரை பின்பற்றுபவர்கள் என்பதை வெளிக்காட்டக் கூடியவர்களாக வாழ இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...