ஞாயிறு, 4 ஜூலை, 2021

கண்டுகொள்வோம்... (5.7.2021)

கண்டுகொள்வோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் கனவின் வாயிலாக இறைவன் யாக்கோபோடு உரையாடுகிறார். கடவுள் பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் பல வழிகளில் மனிதர்களோடு உறவாடி இருக்கிறார்.  மெல்லிய காற்றின் மூலமும், மிகப்பெரிய இரைச்சலான காற்றின் மூலமும், ஒலியின் மூலமும், பெரிய சப்தத்தின் வாயிலாகவும், மேகத்தின் இடிமுழக்கம் போன்ற பெரிய சப்தத்தின் வாயிலாகவும், கனவுகள் வாயிலாகவும், காட்சிகள் வாயிலாகவும், இறைவன் தொடக்கத்திலிருந்தே மனிதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். நம்மோடு உரையாடும் இறைவனை பல நேரங்களில் நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால்,  எதிர்பாராத ஒரு நேரத்தில் ஒருவர் நமக்கு செய்த உதவியை,  நாம் கடவுள் தான் வந்து செய்தார் என எண்ணுகிறோம். நமக்கு உதவுபவர்கள், நாம் தேவையில் இருக்கும்போது நம் தேவையை அறிந்து செயல்படுபவர்களை கடவுளாக காணுகின்ற நாம், ஒவ்வொரு நாளும் நம்மோடு உரையாடும் கடவுளை கண்டு கொள்வதுண்டா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம். 


கடவுள் எங்கோ இல்லை. நம்மோடிருக்கிறார். எப்படி யாக்கோபிடம் எந்நாளும் நான் உன்னோடு இருக்கிறேன் என்றாரோ, அதுபோல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நம்மோடு பயணித்துக் கொண்டிருப்பவர் தான் அந்த கடவுள். ஆனால் அவரைப் பல நேரங்களில் நாம் கண்டுகொள்வதில்லை. பல விதமான வேலைகளுக்கு மத்தியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில்  கடவுளை கண்டு கொள்வதற்கு, நமக்கு நேரம் இல்லாத நிலைதான் நிலவிக் கொண்டிருக்கிறது.  ஆனால் பல விதமான பணிகளுக்கு மத்தியிலும், இடர்களுக்கு மத்தியிலும் ஆண்டவரை கண்டுகொள்ள இந்நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். 

     12 ஆண்டுகளாக நோயுற்றிருந்த பெண்மணி, தன் வாழ்வில் அனைத்தையும் இழந்த நிலையிலும் கூட,  அந்தப் பெண்மணி தன்னோடு கடவுள் இருக்கிறார் என நம்பினாள்.  கடவுளால் மட்டுமே நம்மை குணப்படுத்த முடியும் என்று நம்பினாள். எனவேதான் அவள் இயேசுவை நோக்கி சென்றாள். 

     அது போலத் தான் இறக்கும் தருவாயில் இருந்த அந்த சிறுமியினுடைய தந்தை அனைத்து விதமான அதிகாரங்களும், பணபலமும் கொண்டவராக இருந்தாலும், அவர்  உயிர்ப்பித்தல் என்பது கடவுளால் மட்டுமே நிகழும். நலம் தரக்கூடிய பணி கடவுளால் மட்டுமே நிகழும் என நம்பினார். அந்த நம்பிக்கைக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில்தான் அவர் ஆண்டவர் இயேசுவை தேடிச் சென்றார்.  ஆண்டவர் இயேசு தங்களோடு இருக்கிறார். அவரை தேடிச் சென்றால் நான் நலம் பெற முடியும் என நம்பியதால்,  அவர்களின் நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் வேண்டுதல் அன்று கேட்கப்பட்டது. 

  நம்மோடு எப்போதும் எல்லோரிடமும் உடனிருக்கும் ஆண்டவரைக் கண்டுகொள்வோம். அவரோடு உரையாடுவோம். நம்பிக்கையோடு அவரை நோக்கிச் செல்வோம். நலமான நல்ல பணிகளை இச்சமூகத்தில் செய்யக்கூடிய நல்ல சீடர்களாக உருவாகிட இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...