இதுவும் கடந்து போகும்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
சமீபத்தில் மனதை தொட்ட ஒரு பாடல் வரிகள், இதுவும் கடந்து போகும் என்ற பாடல் வரிகள் வலை தளம் வழியாக பலருடைய செவிகளையும் மனதையும் தொட்டது உண்டு. அந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு விதமான மகிழ்வானது உருவாகின்றது என்பது முற்றிலும் மறுக்கவியலாத உண்மை. இன்று நிகழும் இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்லவே அனைவரும் விரும்புகிறோம். இந்த கடந்து செல்லுதல் என்பது விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண முடியும்.
ஆபிரகாமை தனது சொந்த ஊரை விட்டு கடந்து செல்ல இறைவன் அழைக்கின்றார்.
யாக்கோபை எகிப்துக்கு கடந்து செல்ல இறைவன் அழைக்கின்றார்.
பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களை செங்கடலைக் கடந்து செல்ல இறைவன் அழைக்கின்றார்.
இறைவன் இந்த கடந்து செல்லுதல் என்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போதெல்லாம் அங்கு வல்லமையான அற்புதமான பல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அந்த கடந்து செல்லுதல் ஒவ்வொன்றுமே வாழ்வுக்கு நல்லதொரு பாடத்தை தருகின்றன.
இன்றைய நாளில் கூட பஞ்சத்தில் வாடிக்கொண்டிருக்கும் யாக்கோபை, எகிப்திற்கு கடந்து செல்ல இறைவன் வலியுறுத்துவதை நாம் வாசிக்க கேட்டோம்.
இன்று நாம் நமது வாழ்வில் கடக்க வேண்டியது பல உண்டு.
நாம் நல்ல பணிகளை செய்கின்றபோது இந்த உலகத்தில் பலர் பல விதமான இடையூறுகளையும் தந்து கொண்டிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது நல்லதை செய்து கொண்டே பயணிக்க அழைக்கப்படுகிறோம். நாம் நல்லது செய்வதால், அரசர் முன்னிலையிலும், பிறர் முன்னிலையிலும், குற்றவாளிகளாகவும் பலவேறு காரணங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடப்படக் கூடிய இன்னலான நிலைகளை அடைந்தாலும், இதுவும் கடந்து போகும் என்பதை மனதில் கொண்டவர்களாய் அந்தச் சூழ்நிலையை கடந்து செல்ல இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். பல நேரங்களில் பலர் பலரைப் பற்றி தவறானவற்றை பேசும் போது, அந்த இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்தால், நாம் நற்பேறு பெற்றவர்களாக விளங்க இயலாது. இதையே திருப்பாடல் ஆசிரியர்,
நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
திருப்பாடல்கள் 1:1ல்
கூறுகிறார். நாமும் நமது வாழ்வில் இகழ்வாரின் குழுவில் அமர்வதை தவிர்த்து கடந்து செல்லும் போதும், பொல்லாரின் சொல்படி நடப்பதை தவிர்த்து கடந்து செல்லும் போதும் நாமும் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நிறைவையும் காணமுடியும்.
வாழ்வில் கோபம் வரக் கூடிய நேரங்களில் அந்த இடத்தை விட்டு கடந்து செல்வோம்.
அடுத்தவரை பற்றி தவறாக பேசக் கூடிய இடங்களில் அவ்விடத்தை விட்டு கடந்து செல்வோம்.
கடந்து செல்லுதல் வாழ்வில் அவசியமானது. இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடந்து செல்லும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளை இனிய நாளாக துவங்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக