செவ்வாய், 6 ஜூலை, 2021

புயலுக்குப் பின் அமைதி... (7.7.2021)

புயலுக்குப் பின் அமைதி...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 புயலுக்குப் பின் அமைதி என்று கூறுவது உண்டு. வாழ்வில் பல நேரங்களில் பலவிதமான இக்கட்டான துன்பங்களை சந்திக்கின்ற போது, அந்த துன்பங்களுக்கு பிறகாக, வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் பல நேரங்களில் சந்திப்பது உண்டு.

    இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் நாடு முழுவதும் நிலவிய பஞ்சத்தின் காரணமாக உணவின்றி தவித்த பலர், யோசேப்பிடம் சென்று உணவை பெற்றுக்கொள்ள செல்கிறார்கள். அவர்களில் ஒருவராக யோசேப்பின் சகோதரர்களும் செல்கிறார்கள். தன்னுடைய சகோதரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்ட யோசேப்பு,   அவர்களோடு ஒருவிதமான விளையாட்டை நிகழ்த்துகிறார். ஒரு தந்தையின் புதல்வர்கள் ஒருவர் மற்றவரை சகோதரர்கள் என அறியாது    விளையாடுகின்ற நிலையை, அங்கு நாம் உணர முடிகிறது.  அந்த ஒரு நிகழ்வானது சகோதரர்களுக்குள் வருத்தத்தையும் துன்பத்தையும் அதிகப்படுத்தியது. ஆம்! உணவின்றி பிழைப்புக்காக உணவு வாங்கிச் செல்ல வந்த இடத்தில் திருடர்கள் என்ற பட்டத்தைப் பெறும் பொழுது, நம்பிக்கையை இழந்தவர்களாக துன்பத்தின் உச்சத்திற்கு செல்கிறார்கள். ஆனால் அந்த துன்பம் நீடிப்பது இல்லை என்பதும் அந்த துன்பத்திற்கு பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரை சகோதரர்கள் என கண்டுகொண்டு,  மகிழ்வில்  திளைத்தார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

 இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தன்னுடைய சீடர்களுக்கு தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரங்களை பகிர்ந்து தருகிறார்.  பேய்களை ஓட்டவும், பலவிதமான நல்ல செயல்களை அவர்கள் இந்த சமூகத்தில் முன்னெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்.  அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்தார்.  அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்.  ஆண்டவர் இயேசு கொடுத்த அதிகாரம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு பிறகாக பல விதமான துன்பங்களும் இருக்கும். ஆனால் துன்பமும் இன்பமும் மாறி மாறி மனித வாழ்வில் வரும் என்பதை அறிந்தவர்களாய் ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்ட,  அனைத்து கொடைகளின் அடிப்படையிலும், இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்களாக இயேசுவின் சீடர்கள் திகழ்ந்தார்கள் என்பது வெள்ளிடைமலை.
          நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல நேரங்களில், நாம் அறியாத நேரங்களில் பலவிதமான துன்பங்கள் நமது வாழ்வில் சூழ்ந்தாலும், நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது,  ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு நடந்த இயேசுவின் சீடர்களைப் போல, நாமும் அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் அவரோடு பயணிக்க, இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி கொண்டு, நம்பிக்கையோடு துன்பங்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசுவை பின்செல்ல உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
     வாருங்கள்! இயேசுவின் பின்னே நம்பிக்கையோடு பயணம் செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...