விதைப்பவரை நோக்கிட ....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
படைத்த படைப்புகளை வழிபடுகின்ற மனிதர்கள் பலர், படைத்த பரம்பொருளை மறந்து போகின்றனர். இதற்கு உதாரணமாகத் தான் இன்றைய நாளின் முதல் வாசகம் அமைந்திருக்கிறது. படைத்த இறைவனை மறந்து போய், தங்களுக்கென தனி கடவுளை செய்து கொள்ளக் கூடியவர்களாகவும், தங்களை வழிநடத்திய, பராமரித்த கடவுளின் அன்பை உணராதவர்களாகவும், வணங்கா கழுத்துடைய மக்களாகவும் இஸ்ரயேல் மக்கள் திகழ்ந்தார்கள் என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலும் விதை மண்ணில் விழுந்து முளைத்து விருட்சமாக எழுந்து நிற்கின்ற போது, விதையையும் மரத்தையும் கண்ணோக்குகின்ற பலர், அந்த விதையை விதைத்தவரை மறந்து விடுகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இன்றைய நாளில் விதைகளை மண்ணில் தூவுகின்றார். தூவிய விதைகள் எல்லாம் சில சாலையோரத்திலும், சில முட்செடிகளுக்கு நடுவிலும், சில பாறைகள் மீதும், சில நல்ல நிலத்திலும் விழுந்தன என நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். ஆண்டவர் இயேசு விதை விதைப்பவராக நின்று விதையை தூவியிருக்கின்றார். நம்மிடம் பொழியப்பட்டு இருக்கின்ற அந்த ஆண்டவருடைய வார்த்தைகளான விதைகளை நாம் எந்த நிலத்தில் விழுந்த விதைகளாக உள்ளத்தில் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் வளர்த்தெடுக்கிறோம், என சிந்தித்துப் பார்ப்போம். தான் கற்பித்தவற்றையும் தான் போதித்தவற்றையும் தன் வாழ்வாக மாற்றிக் கொண்டவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவரைப் பின்பற்றுகின்ற நாம், விதையை மட்டும் பார்த்து நகர்ந்து விடாது, விதையை விதைத்தவரான அவரின் விதைத்த நோக்கத்தையும் கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம். கடவுள் படைத்த இந்த அழகிய உலகில், படைத்த பொருள்களை நம்பி, அதனை வழிபட்டுக் கொண்டு நாட்களை நகர்த்தாது, உண்மையை தெய்வமான பரம்பொருளாகிய படைப்பனைத்திற்கும் தொடக்கமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் கண்டு கொள்ளவும், அதன் வழி இந்த சமூகத்தில் விதையை நோக்குபவர்களாக மட்டுமில்லாது, விதைத்தவரை நோக்குபவராக மாறவும், எடுத்துக்காட்டான வாழ்வை அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக