நடப்பது எல்லாம் நன்மைக்காகவே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நடப்பது எல்லாம் நன்மைக்காக என்று கூறும்பொழுது பல நேரங்களில் துயரத்தில் வாடுவோர், ஏன் கடவுள் இந்த துயரத்தை எனக்குத் தந்தார்? இந்தத் துயரம் எப்படி எனக்கு நன்மையாக இருக்கும்? என்ற கேள்வி இயல்பாக அனைவர் உள்ளத்திலும் எழுவது உண்டு. ஆனால் கடவுள் அறியாமல் எதுவும் நமது வாழ்வில் அரங்கேறுவது இல்லை. அரங்கேறுகின்ற நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒன்றை நமக்கு கற்பித்துக் கொண்டு தான் செல்கின்றன. அதை புரிந்து கொள்வதற்கு முன்னதாக பல நேரங்களில் நாம் துன்பங்களைக் கண்டு துவண்டு போய், மனவேதனையோடு பல நேரங்களில் கடவுள் மீதும் அருகில் இருப்பவர்கள் மீதும் கோபம் கொண்டு, நமது சுயத்தை இழக்க கூடியவர்களாக இருக்கிறோம். இன்றைய வாசகங்கள் வழியாக நடப்பது அனைத்தும் நன்மை எனக் காண நமக்கு அழைப்பு தருகின்றார்.
ஆம் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில்,
யோசேப்பு தன் மீது பொறாமை கொண்டு தன்னை அடிமையாக விற்றுவிட்ட தன் சகோதரர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. ஆனால் அந்த நிகழ்வு நடந்த போது அவர் உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் இருந்திருக்கலாம்.ஏன் கடவுள் என் மீது என் சகோதரர்கள் பொறாமை கொள்ள வைத்தார்? ஏன் இவர்கள் என்னை அடிமையாக விற்றார்கள்? என பலவிதமான கேள்விகள் அவர் உள்ளத்தில் இருந்திருக்கலாம். அந்தக் கேள்விகளின் அடிப்படையில் அவர் தனது வாழ்வை நகர்த்தவில்லை. மாறாக அனைத்தும் நன்மைக்கே, கடவுள் நம் வழியாக ஏதோ ஒன்றை செய்யவிருக்கிறார் என்ற எண்ணத்தோடு, கடவுளுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் கீழ்படிதலுள்ள உள்ளத்தோடும், இருந்தார்.
எனவேதான் பல வருடங்கள் கழித்து தன் சகோதரர்கள் முன்னிலையில், தான் தான் அன்று அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு என்று கூறும்போது, அவரவர்கள் இடத்தில் கடவுள் பல உயிர்களைக் காக்கும் பொருட்டு, தன்னை இவ்வாறு விற்பதற்கு அனுமதித்தார். எனவே எனக்கு எதிராக நீங்கள் செய்த தீமையைக்
குறித்து வருந்த வேண்டியதில்லை என்று கூறி, தன் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறக்கூடிய நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம்.
நமது வாழ்வில் பல நேரங்களில் நாம் அழியா நேரங்களில் , பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளை நாம் பிற நபர்கள் வழியாக சந்திக்கின்ற போது, நம்பிக்கை இழந்து விடவேண்டாம். கடவுள் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறார் என்ற எண்ணத்தோடு, அதனை ஏற்றுக்கொண்டு துணிவோடு பயணிக்க அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, இயேசு அதை தான் வலியுறுத்துகிறார். நீங்கள் எதையும் நம்பி செல்ல வேண்டாம். ஆனால் ஆண்டவரை நம்பி செல்லுங்கள். எல்லா நேரங்களிலும் ஆண்டவர் இயேசுவை இறுகப்பற்றி பிடித்துக் கொண்டவர்களாய், அவரை முன்னிறுத்தி இந்த சமூகத்தில் நலமான பணிகளைமுன்னெடுக்க கூடியவர்களாக தேவையில் இருப்பவர்களை நோக்கிச் செல்லுங்கள். கடவுள் உங்களுடன் இருந்து உங்களை வழிநடத்துவார். நான் நல்ல பணிகளை முன்னெடுக்கும் போது பலர் நம்மை ஏற்றுக் கொள்ளலாம். பலர் நம்மை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அது நமக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் செய்ய வேண்டிய நலமான பணிகளை செய்து கொண்டே செல்வோம். ஏற்றுக் கொள்பவர்களை ஏற்றுக் கொள்ளட்டும் ஏற்காதவர்கள் ஏற்காதவர்களாக இருக்கட்டும்.நேரம் வரும் அப்போது அவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தோடு, நலமான நல்ல பணிகளை முன்னெடுத்து கொண்டே இந்த சமூகத்தில் நடக்கும் ஒவ்வொன்றுமே கடவுளுடைய பார்வைக்கு உட்பட்டது. அனைத்தும் நல்லது. அதன் வழியாக கடவுள் ஏதோ ஒன்றை நமக்கு கற்பிக்கின்றார் என்ற உணர்வோடு இயேசுவின் சீடர்களைப் போல இந்த உலகத்தில் பயணம் செய்து, இயேசுவின் உண்மை சீடர்களாகிட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக