இறையாட்சி பணியாற்ற இரக்கத்தை நமதாக்குவோம்....
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இரக்கத்தோடு இருக்கவேண்டும் என்ற செய்தியினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.
நல்ல சமாரியன் உவமை வழியாக கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் அன்பும், இரக்கமும் காட்ட கூடியவர்களாக நாம் இருக்கவண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் லேவியரை போலவும், குருவை போலவும் பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நம் அருகில் உள்ளவர்களின் துயரத்தை கண்டு அதனை துடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை.
எங்கோ? யாரோ? ஒருவர் நல்ல சமாரியன் போல துன்புறுபவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்கின்ற போது அவர்களைப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, பலநேரங்களில் நம்மில் பலர் நல்லது செய்பவர்களையும் விமர்சனம் செய்யக் கூடியவர்களாக தான் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாள் வாசகங்கள் வழியாகவும், திருஅவை இன்று நினைவு கூறுகின்ற புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு வழியாகவும், நாம் ஒவ்வொருவரும் கண்ணில் காணக்கூடிய ஒவ்வொருவர் மீதும் இரக்கத்தோடு இருக்க அழைக்கப்படுகின்றோம். எப்படி இயற்கையின் மீது இரக்கப்பட்டு, இயற்கையோடு ஒரு நல்லுறவை வளர்த்துக் கொண்டு தன் வாழ்வில் புனித பிரான்சிஸ் அசிசியார் செயல்பட்டாரோ, அவரைப்போல நாம் கண்ணால் காணக்கூடிய இயற்கையிடமும், சக மனிதர்களிடமும் எப்போதும் இரக்கத்தை வெளிப்படுத்தும் இயேசுவின் இறையாட்சி பணியின் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
நம்மீது கொண்ட அன்பின் காரணமாக தன் இன்னுயிரையும் தந்த இறைவனின் வழிநடக்கும் நாமும் நமது உயிரை இழக்கும் வரை இந்த மண்ணில் இறக்கத்தோடு பயணிக்க இறையருளை வேண்டுவோம் இன்றைய நாளிலே.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக