செவ்வாய், 19 அக்டோபர், 2021

தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும்...(21.10.2021)

தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம் பல முரண்களை கொண்டதாக நமக்கு தோன்றலாம்...
ஆனால் இன்றைய வாசகங்கள் வாழ்க்கைக்கான உன்னதமான பாடங்களை நமக்கு என்று கற்பிக்கின்றன.

 இன்றைய முதல் வாசகமானது தூய வாழ்வு வாழ நம்மை அழைக்கின்றது. தூய வாழ்வு என்றால் அது நமது சுய விருப்பு, வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மனதில் இருத்தி எப்போதும் அவரை போல இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் பேணும் பணியினை செய்வதாகும். இதன் அடிப்படையில் நமது வாழ்வு அமையும் பொழுது நாம் தூய வாழ்வை பெறுகின்றோம். 

இந்த தூய வாழ்வு நிலை வாழ்வை நமக்கு உரிமையாக்குகிறது. நிலை வாழ்வு என்பது ஆண்டவர் இயேசுவோடு இணைந்த வாழ்வைக் குறிக்கிறது.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அடுத்தவர் நலனை முன்னிறுத்திய பணிகளையே தொடர்ந்து செய்து வந்தார். அவரை பின்தொடர நாமும் இப்பணியைச் செய்யவே அழைக்கப்படுகிறோம்.

சமூகத்தில் எங்கோ யாரோ ஒரு மனிதன் துன்புறுகிறான் என தெரிந்தால் அவன் துன்பத்தில் பங்கெடுக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர பார்வையாளராக இருக்க கூடாது. பல நேரங்களில் நாம் பல இடங்களில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து செல்கிறோம். எந்த ஒரு துன்பமும் தன்னை தீண்டாத வரை அதை தன்னுடைய துன்பம் அல்ல என எண்ணக் கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அனைவருடைய இன்ப, துன்பங்களிலும் பங்கெடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
இத்தகைய உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் பொழுது ஆண்டவர் இயேசுவோடு இணைந்த நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

 ஆனால் நடைமுறை சிக்கல் என்னவென சிந்திக்கின்ற போது.....

நாம் பார்வையாளராக அல்லாது பங்கேற்பாளர்களாக மாறுகின்ற போது நமது வீட்டில் உள்ளவர்கள் கூட நம்மை நிராகரிக்கப்பட்ட கூடிய சூழலை சந்திக்கலாம். ஒரு அநீதி நடக்கிறது எனத் தெரிகின்ற போது, அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது நம்முடன் இருப்பவர்களே நம்மை பார்த்து....

இது உனக்கு வேண்டாத வேலை என சொல்லலாம். பல நேரங்களில் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று சொல்லிவிட்டு நம்மை விட்டு நகர்ந்து செல்பவர்களாக கூட இருக்கலாம்.

 ஆனால் எல்லாச் சூழ்நிலையிலும் நம்மோடு இருப்பவர் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல நாமும் இந்த சமூகத்தில் இறையாட்சியின் விழுமியங்களான நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளின் சார்பாக நிற்போம். இவைகளின் சார்பாக நிற்பதால் நாம் பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் நம்பிக்கையை இழந்து விடவேண்டாம் நாம் இணைந்திருப்பது ஆண்டவர் இயேசுவோடு. அவர் நம்மை நிலைவாழ்வு நோக்கி அழைத்துச் செல்வார். 

எனவே, நமது வாழ்வை தூய வாழ்வாக மாற்றி, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொண்டு எப்போதும் ஆண்டவரோடு இணைந்து வாழக்கூடியவர்களாகிட இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...